106
புடவை முன்றானையில் அடங்கின. தன் பக்கம் பறந்து விழுந்த தோழியின் நைலான் புடவைத் தலைப்பை எடுத்து அவள் வசம் தள்ளிவிட்டாள் சாவித்திரி. சற்று தொலைவில் இருந்த தம்பதி மாலதியையே இமைக்காது பார்ப்பதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
‘என்ன அம்மா வேண்டும்?’
பரிமாறும் ஆள் வந்து நின்றான்.
மாலதி தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அதே தருணம் சாவித்திரியும் முகத்தை உயர்த்தினாள். மறுகணம் அவளது எண்சாண் உடம்பும் கூனிக் குறுகியது.
‘என்ன சொன்னாய்?... அம்மாவா? ...என்று எரிந்து விழுந்தாள் மாலதி.
‘அம்மா என்று அழைப்பது தவறில்லையே! பெற்றொடுத்த புனித தெய்வத்துக்கு இட்டுச் சூட்டி அழைக்கப்படும் பவித்திரமான சொல்லாயிற்றே அம்மா என்பது!...இந்த ஒரு சொல்லுக்குக் கோடிச் செம்பொன் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாதே!’ என்றான் ‘செர்வர்’
‘ம்!...உங்கள் வாய்க்குத் தகுந்த மாதிரிதான் உங்கள் பிழைப்புக்கும் வழி வகுத்துக் கொடுத்திருக்கிறான் ஆண்டவன். அம்மாவாம் அம்மா!’
மாலதி பற்களைக் கடித்தாள்.
சாவித்திரிக்கு வியர்த்துக் கொட்டியது.
செர்வரின் முகம் கறுத்தது. குனிந்த தலை நிமிராமல் நின்றவண்ணம், ‘சரி; என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்று கேட்டான்.
‘இரண்டு கப் காப்பி!’