பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


இந்தாலே வாரேன்!”

“வெளக்கு வச்சதும் ராவுக்கு நான் வந்துப்பிடுறேன். கெட்டியமா வீட்டிலே குந்தியிரு, பொன்னு!...நீ சொன்ணாப்பிலே கத்தரிப்பூ ரங்கிலே சேலையும் நீல ரவிக்கைத் துணியும் வாங்கியாந் துப்பிடுறேன்!”

“பணம் காசு உண்டன இருக்கில்லே?”

“ஓ!”...

“பணம் காணலேன்னா?”...

“என், நீ சுருக்குப் பையிலே சேர்த்துப் போட்டு முடிஞ்சி வச்சிருக்கியாக்கும்?”

“ஊக் கும்!”

அவள் மென்று விழுங்கிக் கொண்டு நின்றவண்ணம், கையிலிருந்த துணிப் பொட்டணத்தைக் கணவனிடம் காட்டினாள், “மச்சான், இதிலே ஒசத்தியான புடவையும் மேலுக்குச் சட்டையும் இருக்குதே..வேணும்னா, இது களையே நான் தீவாளிக்குப் போட்டுக்கிடுறேன், மச்சான்! இருக்கிற பணம் காசுக்கு ஒங்களுக்குத் துணிங்களை எடுத்துக்கிடுங்க.” என்று தெரிவித்தாள்.

அவள் பேச்சைக் கேட்ட அவன் நிலை தடுமாறினான்; “வேணாம், பொன்னரசி!...இது ஊரார் வீட்டுது!...கீழத் தெரு ஆச்சி தந்திட்டுப் போயிருக்காங்க. மகன் வீட்டிலேருந்து விருந்தாடிப் போய்த் திரும்பின கையோட வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுவாக! இருக்கிற பணத்துக்கு நல்லதா வாங்கியாந்திடறேன்; நீ போய்க் கஞ்சிகுடி. முடிஞ்சா, ஒரு கொடங்கைக் கடலைக்கொடி எடுத்து ஆஞ்சு வை. திவாளிக்கு எண்ணெய், உப்பு, புளி, மைதா மாவு வாங்குறத்துக்கு ஒத்துவரும்!”...