உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சாயங்கால மேகங்கள்

கோழைத்தனத்தை சகிப்புத் தன்மையாகப் பாசாங்கு செய்வதும் கையாலாகாத்தனத்தைப் பொறுமையைப் போலச் சித்திரிக்க முயல்வதும் அந்த உயர் குணங்களை அவமானப் படுத்துவதாகும் என்பது அவன் கருத்து.

வழக்கமாக இரவில் முத்தக்காள் மெஸ் முகப்பில் எப்போதும் நாலைந்து டாக்ஸி ஆட்டோக்கள் நிற்பதுண்டு. அவற்றின் டிரைவர்களும் அங்கேதான் படுத்திருப்பது வழக்கம்.

“மறுபடியும் அந்த நிதி வசூல்காரர்கள் வந்து ஏதாவது தொந்தரவு கொடுத்தாலும் கொடுப்பார்கள். கவனித்துக் கொள்ளுங்கள். பணிந்து போய்விடாதீர்கள்!” என்று அவர்களிடமும் முத்தக்காளிடமும் சொல்லி எச்சரித்துவிட்டுப் பூமி அங்கிருந்து சித்ராவுடன் புறப்பட்டான். சித்ராவை அவள் வீட்டில் கொண்டுபோய் இறக்கி விடுவதாக அவன் ஆட்டோவில் புறப்பட்டபோது இரவு மணி ஒன்பதரைக்கு மேலே ஆகியிருந்தது.

“எல்லாக் கட்சிகளிலும் ரெளடிகளை வைத்து மக்களை மிரட்டுவது என்பது ஓர் புதிய அரசியல் கலாசாரமாகவே உருவாகி விட்டது! முத்தக்காளைப் போல் சொந்த முயற்சியால் கை வருந்தி உழைத்துச் சிரம ஜீவனம் பண்ணுபவர்களை கூட அவர்கள் விட்டு வைக்கத் தயாராயில்லை” என்றாள் சித்ரா.

“உண்மைக் கொள்ளைக்காரர்கள் கூட இரக்கப்பட்டு ஏழை பாழைகளை விட்டுவிடுவார்கள். ஆனால் அரசியல் கொள்ளைக்காரர்களை நம்பமுடியாது. அவர்கள் ஏழை எளியவர்களையும் சுரண்டுகிறார்கள் சித்ரா!”

“சுரண்டல் என்பது நமது தேசிய கலாசாரங்களில் ஒன்றாகவே ஆகிவிட்டது.”

“இளைஞர்கள் மட்டும் சினிமாப் பைத்தியங்களாகவும் பெண்பித்தர்களாகவும் இல்லாமல் சமூகப் பிரக்ஞை-