உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

71

மேல் பாயவே தன் கைவரிசையைக் காட்ட அவன் தயாரானான்.

இதில் எதிரிகள் முதலில் பயப்படவில்லை. தனி ஆளாக நின்று அவன் கராத்தே முறையிலும், குங்ஃபூ முறையிலுமாக மாற்றி மாற்றி அவர்களைப் பந்தாட ஆரம்பித்த பின்புதான் அவர்கள் மிரண்டு பதறிப் போய்ச் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்; பக்கத்து வெற்றிலைப் பாக்குக் கடையில் நின்றிருந்த சில டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களும் பூமிக்கு ஆதரவாக வந்து சேர்ந்துகொள்ளவே எதிரிகள் ஓட்டமெடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

பூமி இதைப்பற்றி ஏற்கனவே நிறையக் கேள்விப்பட்டிருந்தான். அவ்வப்போது யார் ஆட்சியிலிருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சேர்ந்த பேட்டை ரவுடிகள் ஒன்றுசேர்ந்து கொண்டு, நடைபாதைக் கடைக்காரர்கள், காய்கறிக்கடை வைத்திருப்பவர்கள், பிளாட்பாரம் வெண்டர்கள் ஆகியோரை துன்புறுத்திப் பணம் கேட்பது ஒரு நிரந்தர வழக்கமாக இருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தை விட மோசமான ஒரு கும்பல் இதில் ஈடுபட்டிருப்பதைத் தடுக்க முடியவில்லை என்று எல்லோருமே வருந்திக் கொண்டிருந்தார்கள்.

மிகப் பல தவறுகளைப் பொறுத்துச் சிரமப்பட்டுக் கொண்டே அவற்றை எதிர்க்கும் துணிவின்றி வாழும் மக்களைப் பூமி இயல்பாகவே வெறுக்கும் சுபாவமுள்ளவன். ஒரு சாதாரணப் புழு பூச்சியைச் சீண்டினால்கூட அவற்றுக்கு உடனே கோபம் வரும். மனிதர்கள் புழு பூச்சிகளைவிடக் கேவலமாக வாழக்கூடாதென்று எண்ணுகிறவன் அவன். ஆனால் பெரிய நகரங்களில் மனிதர்கள் புழுப் பூச்சிகளைப் போல அடங்கி வாழும் கேவலத்தைக் கண்டு பல முறை அவன் தனக்குள் உள்ளம் குமுறியிருக்கிறான். சகிப்புத் தன்மை என்ற போர்வையில் வரும் கையாலாகாத் தனத்தையும் வெறுத்தான் அவன்.. இளைய தலைமுறையினரிடமாவது இந்த எதிர் மறைக் குணங்களை ஒழிக்க எண்ணினான்.