பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

சாயங்கால மேகங்கள்

நேரத்துக்குக் கண்டவங்களோடு வந்து தங்கறது போறதுன்னு இருந்தார் இந்த இடம் உங்களுக்கு லாய்க்குப்படாது என்று கத்தினார்.

பூமி அவர் பக்கம் திரும்பிப் பதில் சொல்லவே இல்லை. அன்று அதிகாலையில் சித்ராவும் தானுமாக அங்கே வந்த போது கதவைத் திறந்து விட்ட அவர் ஒரு தினுசாகத் தங்களை முறைத்து ஏளனமாகப் பார்த்ததை நினைவு கூர்ந்தான். கெளரவத்துக்கு மொத்தக் குத்தகை எடுத்திருப்பவர் போல் அவர் பேசிய விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அப்போது அவரைப் பொருட்படுத்திப் பதில் சொல்ல அவன் விரும்பவில்லை. காட்டுமிராண்டித் தனமாகக் கூச்சலிபடுவனுக்கு முன்னால் நாகரிகமானவன் பதில் பேசாமலிருப்பதன் மூலமே தன் கௌரவத்தை நிலை நாட்ட முடியும் என்பது பூமியின் கருத்தாயிருந்தது.

“போன காரியம் என்ன ஆயிற்று?” என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தாள் சித்ரா.

“அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்! நீயும் இந்தக் கிழவியுமாகச் சேர்ந்து சாமான்களை ஒழித்துக் கட்டி வையுங்கள். நான் போய் ஒரு கை வண்டி பார்த்துக்கொண்டு வருகிறேன். இந்த இடம் இனி நமக்கு வேண்டாம். காலி செய்து கொண்டு எல்லாரும் என் வீட்டுக்கே போய் விடலாம்.”

இதைக் கேட்டு அவள் மறுத்துப் பேசாமல் சாமான்களை ஒழிக்கத் தொடங்கினாள். பூமி கைவண்டி கொண்டுவருவதற்காகத் தண்ணீர்த்துறை மார்க்கெட் பக்கம் போனான். ஏன் எதற்கு என்று கேட்டுக்கொண்டு தயங்கி நிற்காமல் சித்ரா உடனே தான் சொல்லியப்டி கேட்டது அவனை மனம் பூரிக்கச் செய்திருந்தது. அத்தனை சோதனைக்கு நடுவிலும் தான் சொல்லியபடி கேட்க ஒருத்தி இருக்கிருள் என்பது மனத்துக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. தீவில் அடைந்த ஏமாற்றத்தை அவனே சித்ராவுக்கு விவரித்துச் சொன்னான்.