246
சாயங்கால மேகங்கள்
"ஹோட்டல் வேண்டாம்! பத்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுங்கள், வீட்டுக்குப் போய் அருமையான வெங்காய உப்புமா கிளறிச் சுடச்சுடத் தருகிறேன்.”
“உன்னைர் சிரமப்படுத்த வேண்டாம்னு பார்த்தேன்.”
“இப்ப நீங்க என்னைச் சிரமப்படுத்தினால்தான் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும் என்னைச் சிரமப்படுத்த வேண்டாம்னு ஒதுங்கினாத்தான் நான் உண்மையிலே வருத்தப்படுவேன்.”
“ஒதுங்கலே... ஆனால்...”
“ஒண்ணும் தட்டிச் சொல்லாதீங்க... வீட்டுக்குப் போகலாம். வாங்க...”
இப்படிச் சொல்லிக்கொண்டே தன்னிச்சையாக அவள் அவன் வலக்கரத்தைப் பற்றி அவனை இழுத்தாள். அந்தப் பிடியிலிருந்து அவனும் தன்னை விடுவித்துக்கொள்ள முயலவில்லை. “ஸாரி!... அவசரத்தில்...” என்று அவள் தன் கையை விடுவித்துக் கொண்டபோது, “ஸாரி எல்லாம் வேண்டாம் சித்ரா! நீ எந்தத் தப்பும் பண்ணிடலே. நான் உன்னோடு வீட்டுக்கு வருகிறேன். வா போகலாம்!” என்று பூமி சிரித்துக் கொண்டே சம்மதித்தான்.
“நான் வெங்காய உப்புமா ரொம்பப் பிரமாதமாக் கிளறுவேன், தெரியுமோ உங்களுக்கு?”
“அதெல்லாம் ஒன்றும் தெரிய வேண்டாம் சித்ரா -- நீ கிளறினாலே அது பிரமாதமாகத்தான் இருக்கும் எனக்கு.”
அவள் மணக்க மணக்க உப்புமாக் கிளறிக்கொடுத்து அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வெளியே போயிருந்த அந்தக் கிழவி திரும்பி வந்து விட்டாள். சித்ரா அவளுக்கும் உப்புமாவை ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தாள்.