பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

233

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மெஸ்ஸிலிருந்து வெளியேறி நேரே பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குச் சென்றான். பரமசிவம் எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தவர் பூமியைப் பார்த்ததும் மறுபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். பூமியின் முகத்தில் சிந்தனைத் தேக்கத்தைப் பார்த்துப் பரமசிவத்துக்கே அவன் மன நிலை புரிந்து விட்டதோ என்னவோ, அவரே விசாரித்தார். பூமி நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். பரமசிவம் அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார். பின்பு சொன்னார்:

“அறியாமையும் பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறிவிடுவார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்.”

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் புத்தகம் மாற்றுவதற்காகத் தற்செயலாகச் சித்ரர் அங்கு வந்து சேர்ந்தாள். காணாமற் போன பையனின் தாய் தன்னிடம் பேச்சு வாக்கில் தெரிவித்ததாக அவள் ஒரு தகவலைப் பூமியிடம் சொன்னாள்.

அந்தப் பையன் ‘மன்னாரு'வின் வேலையாக அடிக்கடி மாமல்லபுரம் போவது உண்டென்று தெரிந்தது. சித்ரா வற்புறுத்தியதன் பேரில் பையனின் தாய் தன் குடிசைக்குப் போய்ப் பையனுடைய புத்தககங்கள் நோட்டுக்களைக் குடைந்து மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் இருந்த ஒரு டீக்கடையின் விலாசத்தைக் கொடுத்திருப்பதாகக் கூறினாள்.

சித்ரா அதைப் பூமியிடம் கொடுத்தபோது பூமி உடனே மாமல்லபுரம் போக விரும்பினான். பரமசிவம் உடனே மறுக்காமல் லெண்டிங் லைப்ரரி ஸ்கூட்டரைக் கொடுத்து உதவ முன் வந்தார். அவன் தனியே போகக் கூடாதென்று வற்புறுத்திச் சித்ராவும் உடன் ஏறிக்கொள்வதை அப்போது அவனால் தடுக்க முடியவில்லை.