பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

"வேலும் மயிலும் துணை" என்று சிலர் எழுதுவது பழக்கம். துணை என்று போட வேண்டியதுகூட இல்லை. 'வேலும் மயிலும்' என்பதே ஒரு மகாமந்திரமாக இருக்கிறது. இது இன்று நேற்று வந்த வழக்கம் அல்ல. மிகப் பண்டைக் காலம் முதற்கொண்டு வழங்கி வருகிறது. இலக்கியம் அதற்குச் சான்று.

பரிபாடலில்

ங்க நூல்களில் பரிபாடல் என்பது ஒன்று. அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி ஒரு பெரும் புலவர் பாடுகிறார்.

எம்பெருமானுடைய திருவருளினால் நல்ல கணவனைப் பெற்ற காதலி ஒருத்தி இல்லறம் நடத்துகிறாள். அவளுக்கு ஒரு சமயம் தன் நாயகன் மேல் சந்தேகம் வந்தது. திருப்பரங்குன்றம் சென்று பரத்தை ஒருத்தியோடு அளவளாவி வருவதாக அவள் தன் கணவனை ஐயுற்று அதனால் ஊடல் கொள்கிறாள். தலைவன் இதை உணர்ந்து கொள்கிறான். தன்னை அப்படிச் சந்தேகிக்கக் காரணம் இல்லை என்று வற்புறுத்தி ஆணை இடுகிறான். ஆணை இடும்போது தெய்வத்தின் பெயரைக் கூறி ஆணை இடுவார்கள்; தெய்வத்திற்குச் சமானமான பெரியவர்களின் பெயரைச் சொல்லி ஆணை இடுவார்கள்; அல்லது தம் பெயரிலேயே ஆணை இடுவார்கள். தான் பரத்தையர்பால் செல்லவில்லை என்பதற்கு இந்தக் கணவன் தன் நாயகியிடம், "வேல் மேல் ஆணை; மயில் மேல் ஆணை” என்று சொல்கிறான்.

காதலிக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் அளித்து வருகின்ற தோழி அதைக் கேட்கிறாள். தன்னுடைய தலைவியின் நாயகன் திருப்பரங்குன்றம் போய்ப் பரத்தையருடன் இருந்து வருகிறான் என்றே அவளும் நினைக்கிறாள். 'அக்குற்றத்தைச் செய்ததோடன்றி, அப்படிச் செய்யவில்லை என்று வேலையும் மயிலையும் நினைத்து ஆணை இடுகிறானே! இது பெரும் பாவம் அல்லவா? இந்தப் பொய்யாணையினால் இவனுக்கு இன்னும் என்ன என்ன தீங்கு ஏற்படுமோ?' என அஞ்சுகிறாள். "நீ எதை வேண்டுமானாலும் நினைந்து சூளுரை சொல். வேலையும் மயிலையும் சொல்லிச் சூளுறாதே" என்கிறாள். முருகனுக்கு அருகில் இருப்பவை அவை. ஆதலின் அவற்றுக்கு அஞ்ச வேண்டும். பழங்

306