பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கொண்டு, ஆன்மாவுக்குப் பல துன்பங்களை விளைவித்து வருகின்றன. கடமையை உணர்ந்த நல்ல அறிவு என்ற வேல் வந்தால், ஞானமாகிற கூர்மையான வேல் பாய்ந்தால், அஞ்ஞானத்தின் விளைவாகிய அசுரக் கூட்டங்கள் அழிந்து ஒழிந்து போகின்றன என்பது அருளியலை ஒட்டிய தத்துவம்.

இறைவன் கையிலுள்ள வேல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்கிறது; மனிதனுடைய உள்ளம் நாய்க் கோலம் பூண்டாலும், யானைக் கோலம் பூண்டாலும், யாளிக் கோலம் பூண்டாலும், அதை அழித்து ஒழித்து உண்மையான அன்புக் கோலம் பூணும் படியாகச் செய்கிறது. இதனை விளக்குவது கந்தபுராணம்.

3

கந்த புராணம்

கந்த புராணம் மிகவும் பெரிய கதை. அப்புராணத்தில் சொல்லப் பெறாத பொருளே இல்லை. பதினெண்புராணங்களில் மிகவும் பெரியது கந்தபுராணந்தான். "எந்தப் பொருளும் கந்த புராணத்தில்" என்று பெரியவர்கள் சொன்னார்கள். தமிழில் கச்சியப்பசிவாசாரியர் இயற்றியுள்ள கந்தபுராணம், வடமொழியிலுள்ள ஸ்காந்தம் முழுவதையும் மொழிபெயர்த்து அமைத்தது அல்ல; அதில் ஒரு பகுதிதான். இதுவே மிகப் பெரியதாக இருக்கும்போது, மூலம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கந்தபுராணக் கதைகளைக் கந்தர் அலங்காரத்தில் அங்கங்கே பார்க்கலாம்.

இந்தப் பாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். "தேரணி யிட்டுப் புரம் எரித்தான் மகன்" என்பது முதற் பகுதி. "செங்கையில்வேற் கூரணி யிட்டு அணு வாகிக் கிரெளஞ்சம் குலைந்து" என்பது இரண்டாவது பகுதி. "அரக்கர் நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது" என்பது மூன்றாவது பகுதி. "சூர்ப் பேரணி கெட்டது" என்பது நான்காம் பகுதி. "தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே" என்பது ஐந்தாவ்து பகுதி. இந்தப் பகுதிகளில் கந்தப்புராணத்தில் விரிவாகக் காணப்படும் ஐந்து பெரிய பகுதிகளின் சாரம் அடங்கியிருக்கிறது.

118