பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சாயங்கால மேகங்கள்

ளாக இருந்தாலும் அவை திரை உலகத்தோடு அதிக நெருக்கம் கொண்டிருந்தன. இணைப்பும் இசைவும் பெற்றிருந்தன.

பூமியோடு மனம் விட்டுப் பேச வேண்டும் என்று முத்தக்காளும், முத்தக்காளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று பூமியும் பல நாட்களுக்குப் பின் அன்று முதன் முதலாகச் சந்தித்துப் பேசுவதற்குப் போயிருந்தார்கள். தேடி வந்திருந்த ஆளோ தன்னைச் சந்திப்பதைவிட உலகில் வேறெந்த வேலையுமே பூமிக்கு இருக்க முடியாது என்பது போல் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். சித்ராவால் அவருக்கு உடனே எந்த உதவியும் செய்ய முடியவில்லை.

மெஸ்ஸில் அது மிகவும் சுறுசுறுப்பான நேரமாக இருந்ததனால், கல்லாலில் உட்கார்ந்திருந்த சித்ராவுக்கு இடை வெளியே இன்றி பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற வேலை இருந்தது; நிதானமாக மூச்சு விடக் கூட நேரமில்லை. கேஷ் டேபிளை வேறு யாரிடமும், விட்டு விட்டுப் போகவும் வழியில்லை.

“உங்களால் முடியுமானால் சிறிது நேரம் காத்திருங்கள்! இல்லாவிட்டால் நீங்கள் போகலாம். நீங்கள் தேடி வந்ததாகச் சொல்லி இந்த ‘விஸிட்டிங் கார்டை’ நான் அவரிடம் கொடுத்து விடுகிறேன்” என்று கத்தரித்தாற் போல் வந்தவருக்குப் பதில் சொன்னாள் அவள்.

ஆனால் அந்த ஆள் பெரிய விடாக்கண்டனாக இருந்தார். பணத்துக்காக எதுவும் காத்திருக்கும். எதுவும் கிடைக்கும். எதுவும் காத்திருந்தே ஆகவேண்டும். எதுவும் கிடைத்தே ஆகவேண்டும் என்று சினிமா உலக முதலாளித்துவ மனப்பான்மை : பச்சையாகத் தெரிந்தது.

“நான் உடனே பார்த்தாகணும் அம்மா! அதிர்ஷ்டம் தேடி வர்ரப்ப இப்பிடிக் காக்கப் போட்டா எப்பிடி?”

அவர் எதை அதிர்ஷ்டம் என்று சொல்லுகிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அந்த இடம், அந்தச் சூழ்நிலை, அங்-