உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சாயங்கால மேகங்கள்

அவன், அழகிய பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் உண்டா இல்லையா என்ற பழைய இலக்கியச் சர்ச்சையைக் கேலியாக நினைவு கூர்ந்தபடி நறுமணம் அழகிய பெண்களின் கைப்பைக்கு உண்டா இல்லையா என்ற கேள்வியுடன் பிரித்தால் வாசனை கமகமத்தது. அந்த நறுமணம் அதற்குரியவளையே அருகில் கொண்டு வந்து விட்டாற்போன்ற நளினங்களை உணர்த்தியது.

பூப்போட்ட சிறிய கைக்குட்டை, வெங்காயச் சருகு போன்ற மெல்லிய ரோஸ் நிறத்தாளில் சுற்றிய இரண்டு ஜோடி தங்க வளையல்கள், ஒரு பத்து ரூபாய் நோட்டுக் கற்றை முப்பதோ நாற்பதோ இருக்கலாம். ரோஸ் காகிதச் சுற்றலில் மஞ்சள் மின்னலாய் மின்னும் நெளி நெளியான வளையல்களுக்கு அடியில் முன்புறம் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருப்பது மடிப்பில் பின்புறமே தெரிகிற அளவு ஒரு கடிதம். கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

மிஸ் சித்ரா, எம். ஏ. எம், எட். மாம்பலம், வெங்கட நாராயணா ரோடு வட்டாரத்திலுள்ள அருள்மேரி கான்வென்ட் பள்ளியில் சமீபத்தில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டதற்கான நியமனத்தாள் அது. அதை வைத்துத்தான் அவளைத் தேடி அந்த நர்ஸரிப் பள்ளிக்குச் சென்று அவளது கைப்பையைத் திருப்பி கொடுத்திருந்தான் பூமி

நினைவுகள் அருள்மேரி கான்வெண்ட்டிற்குள் அவளைப் பின் தொடர்ந்து போய் நுழைந்து கொள்ள ஆட்டோவை ஸ்டார்ட் செய்து பனகல் பார்க் முனையும் வெங்கட நாராயணா சாலையும் சந்திக்குமிடத்தில் மர நிழலில் வந்து காத்திருந்தான்.

காத்திருக்கும் நேரங்களில் படிப்பதற்காக ஆட்டோவில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எப்போதும் நாலைந்து புத்தகங்கள் வைத்திருப்பது பூமிநாதனின் வழக்கம்.