உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

269

அன்று பிற்பகல் இரண்டு மணிக்குள் சித்ராவும், பூமியும், அந்தக் கிழவியும் வீட்டை ஒழித்துக் காலி செய்து கொண்டு கிளம்பி விட்டார்கள். பூமி அந்தக் கெட்ட எண்ணம் கொண்ட வீட்டுக்காரரிடம் கணக்குப் பார்த்து அட்வான்ஸில் தங்களுக்கு வரவேண்டிய மீதத்தை வாங்கினான்.

அன்று பகல் உணவை அவர்கள் பூமியின் வீட்டில்தான் சமைத்துச் சாப்பிட்டார்கள், பகல் முன்று மணி ஆகி விட்டது. இதற்கிடையே சித்ராவைத் தனியே அழைத்து, மகன் இறந்தது பற்றி அந்தத் தாயிடம் இன்னும் சிறிது நாள் சொல்ல வேண்டாமென்று எச்சரித்து வைத்தான் பூமி. சித்ரா வேறு விதமாக அபிப்ராயப்பட்டாள்.

“சொல்லாமல் அவளைச் சித்திரவதை செய்வதை விடச் சொல்லி விடுவதே மேல்.”

“வேண்டாம் சித்ரா! அவசரமில்லை. இவளுக்கு முன்பே பலகாலமாக இந்தப் பெரிய நகரில் நீதி, நியாயம், நேர்மை, ஒழுங்கு, சத்தியம் ஆகிய பல அநாதைத் தாய்மார்கள் தங்கள் வாரிசுகளைக் காணாமல், இழந்து தேடித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும்.”

அவனுடைய இந்தப் பதிலிலிருந்த நயம் அவளை மெய் சிலிர்க்கச் செய்தது. பூமியே அந்தத் தாயிடம் சென்று, “நான் தாயை இழந்தவன். நீங்கள் மகனை இழந்தவர். இனி எனக்கு நீங்கள் தாய், உங்களுக்கு நான் மகன். உங்கள் மகன் திரும்ப வந்தாலும் நீங்கள் தொடர்ந்து எனக்கும் தாயாக இருப்பீர்கள்” என்றான்.

“மகராசனா இரு தம்பி!” என்று அவளை ஆசீர்வதித்தாள் அந்தத் தாய். அவள் குரல் ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் அதில் ஆசி இருந்தது.

அவளிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு வெளியே கடற்கரைக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். கடற்கரைக்குப் போகிற