சாயங்கால மேகங்கள்
183
பூமி இதைப் பற்றிச் சித்ராவிடம் விசாரித்தான்.
“தனியார் நிர்வாகத்திலுள்ள இம்மாதிரிப் பள்ளிக்கூடங்களில் பிடிக்காதவர்களை வெளியே அனுப்புவதற்கு என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுவார்கள். நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி நாகேஸ்வர ராவ் பார்க்கில் உங்களைச் சந்தித்த என் தோழிகளாயிருந்த ஆசிரியைகளில் யாராவது இப்போது எனக்கு எதிராகவும் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், சாட்சி சொல்லும்படி வற்புறுத்தப்படுவார்கள்.”
“பொய்ச்சாட்சி சொல்ல முன் வருகிறவர்கள் தங்கள் ஆத்மாவுக்கே துரோகம் செய்கிறார்கள்.”
“ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகுவைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பட்டிணத்தில் நிறைய இருக்கின்றன.”
“அங்கிருந்து வெளியேறி விட எனக்குச் சம்மதம்தான். ஆனால் நடத்தை கெட்டுப்போன அயோக்கியன் ஒருவன் கையால் நான் நடத்தை கெட்டவள் என்று பட்டம் வாங்கிக் கொண்டு வெளியேற விருப்பமில்லை.”
“உன்னை நடத்தை கெட்டவள் என்று கூறியதற்காக ஒரு லட்சரூபாய் மான நஷ்டம் கோரி வழக்குத் தொடுக்கலாம்.”
சித்ரா அப்படி ஒரு மான நஷ்ட வழக்குப் போடுவதற்குத்தான் தயாராயிருப்பதாகச் சொன்னாள். தேவகிக்கு வேறு ஓரிடத்தில் வேலை கிடைத்துவிட்டது. சித்ரா வேலைக்கு முயற்சி செய்யவில்லை. பரமசிவத்தின் நூல் நிலையத்தில், அரை நாளும், மெஸ்ஸில் அரைநாளுமாகப் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவளும் தேவகியுமாகச் சேர்ந்து தங்கள் மேல் பொய்க்குற்றம் சாட்டி வெளியேற்றிய பள்ளி நிர்வாகிமேல் மான நஷ்ட வழக்கும் போட்டிருந்தார்கள்.