பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சாயங்கால மேகங்கள்

தட்டிக் கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடிமட்டத்தில் உள்ள வசதியேயற்ற ஒவ்வொரு யோக்கிய னுக்கும் வேண்டும்.

“இன்றைய நிலையில் சட்டமும், நீதி மன்றங்களும், வக்கீல் களும், நீதிபதிகளும் தவறு செய்கிறவர்களை உடனே தண்டிக்கவோ, கண்டிக்கவோ விடாமல் தடுக்கும் அல்லது தள்ளிப்போட உதவும் சாதனங்களாகவே பயன்படுகின்ற நிலைமைதான் நீடிக்கிறது.”

“பெயில் ஜாமீன் ரிட் ஸ்டே என்ற பெயரில் சமூக விரோதிகளும் சுரண்டல் பேர்வழிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஓட்டைகள் நமது சட்டங்களில் நிறையவே இருக்கின்றன.

என்றெல்லாம் கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டார்கள். யாரும் அடிபட்டு விழுந்தவனுக்காக இரக்கப்படவில்லை. பொது உணர்ச்சி அப்போது அவனுக்கு எதிராகவே இருந்தது.

பூமியும் நண்பர்களும் நாடகம் போல இதை நடத்தியிருந்தார்கள். தாங்கள் யாரும் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. காரியம் முடிந்ததும் மெஸ்ஸில் காத்திருந்த சித்ராவிடமும் தேவகியிடமும் அந்தப் பெண் காமாட்சியைப் பத்திரமாக ஒப்படைத்திருந்தான் பூமி சித்ரா மட்டும் சிறு சந்தேகத்துடன் பூமியை ஒரு கேள்வி கேட்டாள்.

“இவளோடு பேச இங்கே பார்க்குக்குத் தேடிவந்ததனால் தான் இப்படி எல்லாம் நடந்ததென்று வன்மம் வைத்துக் கொண்டு அந்தப் பையன் மறுபடி இவளைத் தேடிப் பழி வாங்கக் கிளம்பினால் என்ன செய்வது?”

“கனவில் கூட இனிமேல் இந்தப்பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டான். ஒரு வேளை கொழுப்பு எடுத்துப் போய் மறுபடியும் வாலாட்டினால் மறுபடி பாடம் கற்பிப்போம்” என்று பூமி சிரித்துக் கொண்டே பதில் கூறினான்."