உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

சாயங்கால மேகங்கள்

சம்பாதித்து வந்தவர்களுக்கு எல்லாம் பூமியும், சித்ராவும் கூட இருக்கிறவரை முத்தக்காளை ஏமாற்றவோ மோசடி செய்யவோ முடியாதென்று தோன்றியது. எப்பாடு பட்டாவது பூமியையும் சித்ராவையும் அங்கிருந்து கத்திரித்து விட முயன்று கொண் டிருந்தார்கள் சிலர்.

முத்தக்காள் தனியாக இருக்கும்போது அவளிடம் பூமியையும் சித்ராவையும் பற்றிக் கோள் சொல்ல முயலும் வேலையை மேற்கொண்டார்கள் அவர்கள். பூமியைப் பற்றி முத்தக்காளிடம் தப்பபிப்ராயம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வள வாக வெற்றி பெறவில்லை. சித்ராவைப் பற்றிப் தப்பபிப்ராயம் ஏற்படுத்த முடியும் போல் தோன்றவே அந்த முயற்சியைத் தொடர்ந்தார்கள் அவர்கள்.

அந்த மாதம் முதல் தேதி பள்ளியில் சம்பளம் வாங்கிய பணத்தோடு மாலையில் வீடு செல்கிற வழியில் மெஸ்ஸுக்கு வந்திருந்தாள் சித்ரா. மெஸ்ஸில் கூட்டம் அதிகமாயிருந்தது. வழக்கம் போல் சித்ராவைக் கேஷ் டேபிளில் அமர்த்தி விட்டுப் பூமி வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான்.

கேஷ் டேபிளில் அமர்ந்திருந்தபோதே, சித்ரா தற்செயலாகத் தன் கைப் பையைத் திறந்து பள்ளி அலுவலகத்தில் வாங்கிய சம்பளத் தொகையை எண்ணிப் பார்த்தாள். அவள் தன் பணத்தைப் பாதி எண்ணிக்கொண்டிருக்கும் போதே பில் கொடுக்க இருவர் வந்தனர். பில் தொகையை வாங்கிப் போடும் அவசரத்தில் தன் சொந்தப் பணத்தையும் ஹோட்டல் கேஷ் மேல் வைத்த அவள், பின்பு அதைத் தனியே பிரித்து எடுத்துக் கைப்பைக்குள் போட முயன்ற போது ஒரு சர்வர் முத்தக்காளுடன் அங்கே வந்தான். முத்தக்காள் ஆத்திரத்தோடு கேட்டாள்.

“எத்தனை நாளாக இது நடக்கிறது?”

“எது? நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அம்மா?"