சாயங்கால மேகங்கள்
29
பின்னால் தொடர்ந்து வேகமாக நடந்து சென்று அவளோடு பேசலாமா அல்லது கைதட்டிக் கூப்பிடலாமா என்கிற அளவு பூமியின் மனம் விரைந்தும், செயலளவில் இரண்டுமே சாத்தியமாக இருக்கவில்லை.
கொச்சையான பரப்பரப்புடன் பின் தொடர்ந்து ஓடிச் சென்று அவளைத் தடுத்து நிறுத்திப் பேசுவதும் நாகரிகமாகப் படவில்லை. கைதட்டித் திரும்பிப் பார்க்க வைப்பதும் நாகரிகமாகத் தோன்றவில்லை. அவ்வளவிற்கு அவசரமான காரியம் எதுவும் அவளிடம் தனக்கு இருப்பதாகவும் அவனுக்குத் தெரியவில்லை. ஒரு கணம் கட்டுப்பாட்டோடு சிந்தித்துப் பார்த்தபோது பக்குவமிழந்து தவிக்கும் தன் மனத்தின் மேலேயே எரிச்சல் எரிச்சலாக வந்தது அவனுக்கு.
மனத்தை அவள் சென்ற திசையிலிருந்தும் அவளைப் பற்றிய நினைவிலிருந்தும் மீட்க முயன்றான் பூமிநாதன்.
படிப்பதற்காக எடுத்துக்கொண்டு போக வேண்டிய புதுப் புத்தகங்களை எடுத்த பின் பரமசிவத்தின் அருகே சென்று இரும்பு மடக்கு நாற்காலியைப் பிரித்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்த பூமியிடம் பரமசிவமே பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
“அம்மா இல்லாததாலே வீட்டிலே பல புதுப் பிரச்னை களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இனிமேல் உனக்குச் சிரமம்தான்.”
“நான் சின்ன வயதிலிருந்தே தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். திடீரென்று அந்த அரவணைப்பையும் இழந்திருப்பதால் பாதி படித்துக் கொண்டிருக்கும் போது இருட்டிவிட்ட மாதிரி சிரமமாயிருக்கிறது.”
“அந்தச் சிரமத்தை நீ மெல்ல மெல்ல மறந்துவிடப் பழக வேண்டும் பூமி!”
மறப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை பரமசிவம்! ஒன்றை மறக்க முயன்றால் அது முன்னைவிட அழுத்தமாக