சாயங்கால மேகங்கள்
95
கிருந்த மனிதர் கூட்டம், ஹோட்டல் வாசனைகள், சமையல் நெடி, பரபரப்பு இவற்றுக்கிடையே தன்னைப்போன்ற ஒரு தேவ புருஷன் காத்திருப்பதா என்று கருதியது போல் அந்த மனிதர் காட்டிய வறட்டு ஜம்பம் அவளுக்கு ஆத்திர மூட்டியது.
மெஸ்ஸைச் சேர்ந்த வேறு ஒரு வேலையாளிடம் அந்த விஸிட்டிங் கார்டை உள்ளே பூமிக்குக் கொடுத்து அனுப்பினாள் அவள். தான் பூமியைத் தேடி வந்திருப்பதே பூமிக்கு அதிர்ஷ்டம் என்பது போன்ற தொனியில் அந்த மனிதர் பேசியது வேறு அவளுக்குப் பிடிக்கவில்லை.
இன்றைய சினிமா, யதார்த்த உலகின் கஷ்ட நஷ்டங்களிலிருந்து இளைஞர்களைப் பொய்யாகவும் கற்பனையாகவும் உயர்த்தி வைத்துக் கனவு காணச் செய்வது என்பதாலேயே அத்துறையின் மேலும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் மேலும் ஏற்கெனவே சித்ராவுக்குப் போதுமான ஆத்திரம் இருந்தது. இப்போது அந்த ஆத்திரம் அதிகரித்திருந்தது. சிறிது நேரத்தில் பூமி வந்தான்.
“கனகசுந்தரம் என்பது நீங்கள்தானா?” விசிட்டிங் கார்டை கையில் வைத்துக் கொண்ட அந்தக் கருப்புக் கண்ணாடி. மனிதரை வினவினான்.
“ஆமாம்! - நான் தான்! கனகா பிக்சர்ஸ்னு ஒரு படத் தயாரிப்புக் கம்பெனி வச்சிருக்கேன். இதுவரை ஏழெட்டுப் படம் ரிலீஸ் பண்ணியிருக்கோம். எங்க லேடஸ்ட் படம் ‘நடுக்காட்டில் நளினி’ நூறு நாள் ஓடிச்சு. கேள்விப்பட்டிருப்பீர்களே,.”
“அது சரி! இப்போது நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?”
“நீங்கள் என்ன செய்யணும்னு சொல்றதுக்காகத் தானே இப்ப நானே இங்கே தேடி வந்திருக்கேன்."