ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அநுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டிய ஒரு புதிய பாடம்.
தற்செயலாகப் பார்க்க நேர்ந்த டெலிவிஷன் நிகழ்ச்சி பூமியின் மனத்தில் சற்றே மகிழ்ச்சியை அரும்பச் செய்திருந்தது. மகிழ்ச்சியிலிருந்து சிறிது நம்பிக்கையும் மலர்ந்தது.
டெலிவிஷன் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்தே பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தான் பூமி. கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்த புத்தகங்களைப் படிப்பதில் மனம் செல்ல வில்லை. அதைக் கடந்து வேறு பக்கம் சென்றது மனம்.
அவன் நினைப்பு என்னவோ சித்ராவின் மேலும், அவள் அளித்த டெலிவிஷன் பேட்டியின் மேலுமே இலயித்திருந்தது. அந்தப் பேட்டியில் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் நினைவு கொள்ள முயன்றான் அவன். ஏதோ தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்து விட்ட ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் என்பதைவிடத் தன்னைப் பற்றி அவளுக்கு அதிகமாக ஏதும் ஞாபகம் இருக்க முடியாது என்றுதான் அவன் முதலில் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் செயலளவில் தன்னை மறக்கக்கூட சாத்தியமிருப்பதாக அவன் எண்ணினான்.
ஆனால் அவளுக்கோ அவன் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறவன் என்பது நினைவில் இருந்ததைக் காட்டிலும்,