சாயங்கால மேகங்கள்
133
விலகி விடை பெற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டமாயிருந்தது. அதை எப்படிச் செயற்படுத்துவது என்று தயங்கி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஓர் ஆட்டோவை அனுப்பி வீரப்பெருமாள் முதலி தெருவில் வசிக்கும் தங்களுக்குத் தெரிந்த குடும்பத்துப்பெண் ஒருத்தியை வரவழைத்தார்கள். அவளிடம் சாதுரியமாக எல்லாம் சொல்லிக் காமாட்சி உட்கார்ந்திருந்த இடத்துக்கு அனுப்பினார்கள்.
அந்தப் பெண் நேரே போய் அந்தப் பூங்காவில் காமாட்சியும், குமரகுருவும் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கமாக நின்று, “வெளியிலே உங்கம்மா ஆட்டோவில் வந்து காத்திருக்காங்க... ஒரு நிமிஷம் இப்பிடி வந்திட்டுப் போ” என்று காமாட்சியை நோக்கிச் சத்தம் போட்டுச் சொன்னாள் :--
“நீங்க இருங்க... நான் என்னன்னு கேட்டிட்டு வந்துடறேன்” என்று குமரகுருவிடம் சொல்லிவிட்டு காமாட்சி அந்தப் பெண்ணை நோக்கி வந்தாள்.
அவள் அருகே வந்ததும், “பூமி அனுப்பிச்சாரு! நேரமாச்சு. நீ அவங்கிட்டச் சொல்லிவிட்டுக் கிளம்பிப்போய் மெஸ்ஸிலே இருக்கணுமாம். உன் கூடவே அவனும் கிளம்பிடாமே, நீங்க கொஞ்சம் இருந்து வாங்க. வெளியே எங்கம்மா காத்திருக்காங்களாம். அவங்க. நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க வேணாம்னு அவனிடம் சொல்லிவிட்டு வா, மத்தது தானே நடக்கும்” என்றாள் பூமியால் அனுப்பப் பட்ட பெண்.
குறிப்பறிந்து காமாட்சி அப்படியே செய்தாள். குருட்டு மோகத்திலிருந்த அந்தப் பையனும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே இல்லை. அவளை முதலில் போக அநுமதித்து விட்டுத் தான் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவன் மனத்தில் ஒரே குஷி.