உள்ளடக்கத்துக்குச் செல்

அகல் விளக்கு/அத்தியாயம் 16

விக்கிமூலம் இலிருந்து

விடுமுறை முடிந்ததும், பெட்டி படுக்கையுடன் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குப் போய் விடுதியில் கால் வைத்தவுடன், சந்திரனுடைய நினைவு முன்போல் வந்து வருத்தியது. என்னைப் பார்த்த பழைய மாணவர்கள், "உங்கள் ஊரான் - பெண்ணாக நடித்த அந்தச் சந்திரன் - எங்கே இருக்கிறான்? தேர்வுக்குப் படிக்கிறானா?" என்று பல கேள்விகள் கேட்டு என் மனத்தை மேலும் கலக்கினார்கள்.

நான் சென்ற மறுநாள் மாலன் சோழசிங்கபுரத்திலிருந்து வந்து சேர்ந்தான். அவனும் சந்திரனைப் பற்றிக் கேட்டான். சந்திரனுடைய அறை காலியாக இருந்தது. அந்த அறைக்கு மாற்றிக்கொண்டு வருமாறு மாலனுக்குச் சொன்னேன். "அது கெட்ட அறை, சந்திரனுடைய வாழ்வையே கெடுத்துவிட்டது. நானும் கெடவேண்டுமா?" என்றான்.

"சந்திரன் நாடகத்தால் கெட்டான் என்றாய். பெண்ணால் கெட்டான் என்றாய். இப்போது இந்த அறையால் கெட்டான் என்கிறாய். எதுதான் உண்மை? மூடநம்பிக்கை எதையும் பேசும்போல் தெரிகிறது" என்றேன்.

"நீ இந்த அறையை எடுத்துக் கொண்டு, உன் அறையை எனக்குக் கொடு, பார்க்கலாம்" என்றான் அவன்.

"சந்திரனும் நானும் நெருங்கிப் பழகியவர்கள்" நான் அந்த அறையில் இருந்தால், எனக்கு அடிக்கடி சந்திரனுடைய நினைவே வந்து துன்பப்படுத்தும்" என்றேன்.

"அதுவும் ஒரு மூடநம்பிக்கைதான்" என்று மாலன் குத்தலாகக் கூறினான்.

வேண்டும் என்றே அவன் பேசுவதை உணர்ந்து கொண்டு அந்த முயற்சியைக் கைவிட்டேன். புதிய மாணவன் எவனாவது வந்து பக்கத்து அறையில் இருந்து தொல்லை கொடுப்பதைவிட, பழகிய நண்பன் இருந்தால் நன்மையாக இருக்குமே என்றுதான் அவனை அவ்வாறு வேண்டிப் பார்த்தேன். "உன் அறைக்குப் பக்கத்தில் காலி இருந்தால் சொல். நானாவது அங்கே வந்து இருப்பேன்" என்றேன். அதற்கும் வழி இல்லை என்றான். பழைய அறையிலேயே இருக்கத் துணிந்தேன்.

வழக்கம் போல கல்லூரி தொடங்கியதும், பாடங்கள் நடந்தன. நாங்களும் படிக்கத் தொடங்கினோம். மாணவர்கள் புதிய நண்பர்களைப் பெற்றுப் பழகினார்கள். புதிய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொண்டார்கள். நன்மையும் பரவியது. தீமையும் பரவியது. என்னையும் மாலனையும் பொறுத்தவரையில், புதிய நட்பு ஒன்றும் ஏற்படவில்லை. புதியவர்களோடு பழகினாலும் உள்ளம் கலக்காமல் உதட்டளவில் பழகிவந்தோம். மாலனுக்கும் எனக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவனும் என்னை விடவில்லை.

நானும் அவனை விடவில்லை. அவனிடம் மூடநம்பிக்கைகளும் அவற்றிற்குக் காரணமான தன்னலமும் மிகுதியாக இருந்தபோதிலும், கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை. படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. ஆகையால், புதியவர்களோடு பழகிப் பிறகு அந்தப் பழக்கத்தால் வருந்துவதைவிட, பழகிய பழைய நட்பே போதும் என்று இருந்துவிட்டேன். சில மாணவர்கள் தாமே நெருங்கி வந்து பழகினார்கள். சீர்திருத்தமான கருத்து உடையவர்கள் சிலர் பழகினார்கள். கல்வியில் ஊக்கம் மிகுந்தவர்கள் சிலர் முன்வந்து பழகினார்கள். பொது அறிவு நிரம்பியவர்கள் சிலர் நெருங்கிப் பழகினார்கள்.

அவர்களுடைய சீர்திருத்தமும் கல்வித்திறனும் பொது அறிவும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் சில நாள் நெருங்கிப் பழகியபோது, எனக்குப் பிடிக்காத சில பழக்கங்களும் கொள்கைகளும் அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். அந்த அளவிற்கு மேல் நட்பு வளராதபடி பழக்கத்தை வரையறைப் படுத்திக் கொண்டேன். இப்படித்தான் எல்லாரும் குணமும் குற்றமும் கலந்தவர்களாக இருப்பார்கள் என்று புதியவர்கள் யாரோடும் நெருங்கிப் பழகாமல் காத்துக் கொண்டேன். மாலனுடன் மட்டும் மனம் கலந்து பழகி வந்தேன். அவனுடைய குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த குறைகள் அவ்வளவாகத் தீமை செய்வதில்லை.

பழகிய வழியில் உள்ள மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் நமக்குத் தீமை செய்வதில்லை. பழகாத வழியில் உள்ள குறைகள்தான் தீமை செய்கின்றன. மாலனும் எப்படியோ என்னிடம் மட்டுமே நெருங்கிப் பழகிவந்தான். என்னுடைய முற்போக்குக் கொள்கைகளும் அவனுடைய மூடநம்பிக்கைகளும் முரண்பட்டன. என்னுடைய இரக்க உணர்ச்சியும் அவனுடைய தன்னல முயற்சியும் மாறுபட்டன. ஆனால் எப்படியோ என் நெஞ்சமும் அவன் நெஞ்சமும் உறவு கொண்டன.

சந்திரனைப் பற்றிய நினைவு எனக்கு அடிக்கடி வந்தது. நன்றியுணர்ச்சியோடு அவனைப் பற்றி நினைந்து நினைந்து வருந்தினேன். என் உள்ளத்தின் வருத்தத்தை மாலனிடம் தவிர வேறு யாரிடம் வெளிப்படுத்தி ஆறுதல் பெறமுடியும். அவனிடம் சொல்வேன். அவனோ, கவலைப்படாமல் இருப்பான். அவனுடைய போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் இருந்தே அவன் சந்திரனிடம் வெறுப்புக் காட்டி வந்தான் என்பது தெரியும். தெரிந்தும் என் மனம் ஆறுதல் பெறவில்லை.

மாலனிடம் சந்திரனைப் பற்றி மனம் கலந்து பேச முடியாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. இமாவதியின் நினைவு வந்தது. அவளோடாவது அவனைப் பற்றிப் பேசி அந்தக் குறையைப் போக்கி ஆறுதல் பெற எண்ணினேன். திருமணத்திற்குப் பிறகு அவளைக் காணவும் இல்லை. இப்போது கண்டு பேச விரும்பினேன். அதைப் பற்றி மாலனிடம் சொன்னால் அவன் தடுப்பான் என்பதும் தெரியும். ஆகவே அவனிடம் சொல்லாமல் ஒருநாள் இராயப்பேட்டைக்குச் சென்றேன்.

வீட்டில் இமாவதி இல்லை. அவளுடைய தங்கை திருமகள் வந்து, "யார் நீங்கள்? முன்னே வீட்டுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறதே" என்றாள். "சந்திரனுடைய நண்பன்" என்று சொன்னேன். சொன்னதும் "சந்திரன் வந்து விட்டாரா? ஊரில் இருக்கிறாரா? படிக்கிறாரா?" என்றாள். "அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது" என்று நான் சொன்னதும் அவளுடைய ஆர்வம் முழுவதும் மறைந்து விட்டது. "இருங்கள் அம்மாவை வரச் சொல்வேன்?" என்று உள்ளே சென்றாள்.

இமாவதியின் தாய் வந்ததும், "இன்னும் அவன் திரும்பி வரவில்லையாமே! என்ன ஆனான் என்றும் தெரியவில்லையே" என்று வருந்தினார். பிறகு இமாவதி அவளுடைய கணவரின் வீட்டில் இருந்ததைத் தெரிவித்தார்.

"இமாவதியைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்றேன்.

"அடுத்த மாதம் இருவரும் வருவார்கள். அல்லது அவள் மட்டுமாவது வருவாள். வந்ததும் உனக்குத் தெரிவிக்கச் சொல்வேன்" என்றார்.

மறுபடியும் அந்த அம்மாவே சந்திரனைப் பற்றிப் பேச்செடுத்தார். "எவ்வளவு நல்ல பிள்ளை! நல்லபடி முன்னுக்கு வந்திருக்கவேண்டும். இமாவதிக்கு அவனைப் பற்றிக் கவலை உண்டு. ஒருநாள் கனவிலும் வந்தானாம். கடிதத்தில் எழுதியிருந்தாள்" என்றார்.

நானும் என் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு விடை பெற்றேன்.

விடுதிக்கு வந்தவுடன் "எங்கே போயிருந்தாய்? சொல்லாமலே போய்விட்டாயே" என்று மாலன் கேட்டான். ஏதாவது பொய் சொல்லி மறைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு திரும்பினேன். ஆனாலும் முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். "நீயும் சந்திரனைப் போல் எங்காவது அகப்பட்டுக்கொண்டு ஏமாந்து கெடப்போகிறாயோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது" என்றான்.

"என்னைப் பற்றி அப்படித் தவறாக எண்ணவேண்டா."

"உன்னை நம்பலாம்; உன் உடம்பை எப்படி நம்ப முடியும்? உடம்பு குறை உடையது."

"சரி, போகப் போகத் தெரியும்" என்றேன்.

பிறகு அங்கு இமாவதியிடம் பேசியதைப் பற்றிக் கேட்டான். அவள் இல்லாதபடியால் திரும்பிவிட்டதைச் சொன்னேன். "உனக்கு என்ன வேலை அங்கே? போகாமலே இருப்பது நல்லது" என்றான்.

"சந்திரனைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டு வரச் சென்றேன்" என்றேன்.

"இன்னும் சந்திரனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்காதே. உன்னிடம் அவனுக்கு உண்மையான அன்பு இருந்தால் ஒரு கடிதம் எழுதட்டும். அதுவரையிலும் அமைதியாக இரு" என்றான்.


ஆனாலும் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பெருங்காஞ்சியில் அவனுடைய பெற்றோரும் அத்தையும் கற்பகமும் என்னைப் பற்றி என்ன எண்ணுவார்கள்? நான் அடியோடு மறந்துபோனதாக எண்ணுவார்களோ என்று சாமண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடிதத்துக்கு அவரே கைப்படப் பதில் எழுதியிருந்தார். அதில் பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவனை வெளியூரில் படிக்க வைக்கக்கூடாது என்று தாம் பிடிவாதமாக இருந்ததைப் பற்றியும், சந்திரனுடைய சிற்றப்பாவும் அப்படிப் படித்த காரணத்தால் கெட்டுப் போனதைப் பற்றியும், சந்திரனுடைய தாய் மனம் குலைந்து வருந்துவதைப் பற்றியும் குடும்பமே சீர்குலைந்து போனதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தைப் படித்தபோது என் நெஞ்சம் உருகியது; கண்கள் கலங்கின.

சிறிது நேரத்தில் மாலன் என்னை நோக்கி வந்தான். வந்ததும், என் மேசைமேல் இருந்த குறிப்புகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, "உனக்குத் திருவுளச் சீட்டில் நம்பிக்கை இருக்கிறதா?" என்றான்.

"இல்லை" என்றேன்.

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது."

"உனக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்குக் கணக்கே இல்லை."

"உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?"

"உண்டு. கடவுளிடத்திலும் கடவுளின் சட்டமாகிய அறத்திலும் நம்பிக்கை உண்டு. அடுத்தபடியாக, என்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உன்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உலகத்தில்..."

"போதும்! இந்த நம்பிக்கை எல்லாம் இருந்து பயன் என்ன?"

"இன்னும் என்ன நம்பிக்கை வேண்டும்? லாட்டரி சீட்டில், கோழிப் பந்தயத்தில், குதிரைப் பந்தயத்தில் என்று இப்படி நம்பிக்கைகள் வேண்டும்?"

"ஆமாம் அவைகளும் நம்பிக்கைகள் தான்."

மாலன் அவ்வாறு கூறியதும் எனக்குத் திடுக்கிட்டது. "இப்படிப்பட்ட குடிகெடுக்கும் பாழும் நம்பிக்கைகளைவிட மந்திரக்காரர் சோதிடக்காரர் முதலியவர்கள் ஊட்டும் மூடநம்பிக்கைகளே மேல்" என்றேன்.

"ஒன்று சொல்கிறேன்" என்று பொறுமையோடு உபதேசம் செய்பவன் போல் தொடங்கினான்.

"இவற்றில் எல்லாம் ஏதோ உண்மை இருப்பதால் தான் இவைகள் நடக்கின்றன. உண்மை இல்லாவிட்டால் படித்தவர்கள் கூட்டமாகப் போவார்களா?"

"நம்பிக்கையால் போகவில்லை. பொழுது போக்குக்காகப் போகிறார்கள். வாழத் தெரியாமல் போகிறார்கள்."

"சிலர்க்கு ஆயிரம் பத்தாயிரம் என்று எதிர்பாராமல் கிடைக்கிறதே. நல்ல தசை, யோகம் இருக்கிறது என்று சோதிடக்காரர் சொல்கிறபடியே கிடைக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறாய்?"

"வருங்காலத்தில் தானே வரும், கொடுக்கிற தெய்வம் தானே கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், ஒன்றும் செய்யாமல், பந்தயங்களுக்குப் போகாமல், சீட்டுக் கட்டாமல் சும்மா இருக்கவேண்டும். பணம்தானே வந்து சேரவேண்டும்."

"தெய்வம் காட்டும். ஊட்டுமா?"

"இப்படிப்பட்ட பழமொழிகள் பல உண்டு. யாரும் எதற்கும் பழமொழியைப் பயன்படுத்தலாம்."

"உன்னோடு பேசிப் பயன் இல்லை" என்று மாலன் வெறுப்போடு சொல்லி அமைதியானான்.

"அதையே நானும் சொல்ல முடியும்" என்றேன். அவ்வாறு நான் சொல்லிய பிறகு ஏன் சொன்னேன் என்று வருந்தினேன். நண்பன் மனம் சோர்வடையும் போது, புண்படுத்தும் முறையில் திருப்புவது நல்லது அல்ல என்று உணர்ந்தேன். பிறகு அதை மாற்றுவதற்காகத் தொடர்ந்து பேசினேன். "மூடநம்பிக்கையோ அல்லவோ, அது எப்படியோ போகட்டும். நாம் உழைக்க வேண்டும்; உழைப்புக்கு ஏற்ற கூலி வரவேண்டும். இப்படி எதிர்பார்ப்பதுதான் கடமை. அதைவிட்டு, எதிர்பாராமல் பணம் வந்து குவியவேண்டும் என்று ஏங்குவதே பாவம்! பலருடைய பணம் தகாத வழியில் நமக்கு வந்து சேர்வது நல்லதா? அது தன்னலம் அல்லவா?" என்றேன்.

"தன்னலம் இல்லாமல் இந்த உலகத்தில் யாரும் வாழ முடியாது" என்றான்.

"உண்மைதான். மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழவேண்டும் என்பதுதான் கெட்ட தன்னலம். மற்றவர்களும் வாழத் தானும் வாழவேண்டும் என்பது நல்ல தன்னலம். தனக்கு மட்டும் நல்ல காலம் வரவேண்டும் என்பது கெட்டது. நாட்டுக்கே நல்ல காலம் வந்தால், தனக்கும் நல்ல காலம் வரும் என்பது நல்லது. அதனால் மூடநம்பிக்கைகளை நான் வெறுக்கிறேன். அவைகள் அறிவுக்கும் பொருந்தவில்லை; தன்னலத்தையும் வளர்க்கின்றன."

மாலன் பேசாமல் இருந்தான். மறுபடியும் குறிப்புப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபடி இருந்து எழுந்து சென்றான்.

சந்திரன் ஒரு வகையில் கெட்டான்; மாலன் மற்றொரு வகையில் குறுக்கு வழிகள் நாடித் தவறான பாதையில் போவதால் கெடுவானோ என்று அவனைப் பற்றியும் அன்று கவலைப்பட்டேன். சூரியனை உலகம் சுற்றுவது முதல் அணுக்களின் சுழற்சிவரையில் பல துறையிலும் விஞ்ஞான அறிவு பெற்று வளரும் கல்லூரி மாணவர்களின் மனப்பான்மையே இப்படி இருந்தால், உலகம் எப்படி முன்னேற முடியும் என்று எண்ணிச் சோர்ந்தேன்.

இமாவதியிடமிருந்து ஏதாவது கடிதம் வருமா என்று நாள்தோறும் எதிர்பார்த்து வந்தேன். ஒரு நாள் எதிர்பார்த்தபடியே கடிதம் வந்தது. தான் ஊருக்கு வந்திருப்பதாகவும் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டு வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தாள். மறுநாள் சனிக்கிழமையாக இருந்தது. மாலனிடம் உண்மையைச் சொல்லிவிட்டு இராயப்பேட்டைக்குச் சென்றேன்.

அவள் என்னை எதிர்பார்த்திருந்தாள். கதவைத் தட்டியவுடன் திறந்து பார்த்து, "வாங்க வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்" என்று வரவேற்றாள்.

முந்திய ஆண்டில் தேர்வுக்கு முன் அவளைக் கண்ட பிறகு இப்போது ஐந்து மாதம் கழித்துக் கண்டேன். முன்னைவிட அவளுடைய முகத்தின் பொலிவும் மினுமினுப்பும் மிகுதியாக இருந்தன. ஆனால் முன் இருந்த துடிதுடிப்புச் சிறிது குறைந்தாற்போல் தோன்றியது. தோற்றம் முன்னைவிட எளிமையாக இருந்ததை உணர்ந்தேன். சிறு நீலநிற வாயில் சேலையும் அதே துணியில் தைத்த சோளியும் அணிந்து எளிமையாகத் தோன்றினாள்.

அந்த எளிமை காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருந்தது. காதில் பழைய தோடும், கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலியும் அணிந்திருந்தாள். கையில் இரண்டு இரண்டு பொன் வளையல்கள் இருந்தன. கைக்கடியாரம் இல்லை. திருமணமாகி இல்வாழ்க்கை தொடங்கிய பிறகு சில பெண்களுக்கு ஆடம்பர வேட்கை குறைகிறது என்றும், சிலருக்குக் குழந்தைகள் பிறந்த பிறகே ஆடம்பர வேட்கை குறைகிறது என்றும், இன்னும் சிலருக்குத் தம் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குத் திருமணம் ஆனபிறகே ஆடம்பரம் குறைகிறது என்றும், வேறு சிலருக்குச் சாகும்வரையில் அந்த வேட்கை தீர்வதில்லை என்றும் ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இமாவதி முதல் வகுப்புப் பெண் என்று உணர்ந்து மகிழ்ந்தேன். ஆடம்பரம் குறைந்தும் அவளுடைய அழகு குறையவில்லை. நெற்றியில் சிறு திலகத்துடன் வாயில் புன்முறுவலுடன் அவள் என் எதிரே உட்கார்ந்தபோது அழகிய ஓவியம் போலவே விளங்கினாள்.

பேச உட்கார்ந்தவுடன், "அவரைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரியவில்லையா!" என்று கேட்டாள். அவள் முகத்தில் கவலை இருந்தது. "இன்னும் ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்காவது ஏதாவது கடிதம் வந்திருக்கும் என்று எண்ணினேன். உங்களுக்கும் ஒன்றும் எழுதவில்லையே" என்றேன்.

"அவரைப் பற்றிய நினைவு அடிக்கடி வருகிறது. பழகாமலே இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய பிரிவுக்கும் துன்பத்துக்கும் நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது?" என்று முகம் கவிழ்ந்தாள்.

அவளுடைய உள்ளத்திலும் இன்னும் அந்தப் பழைய கலக்கம் இருந்து வருதலை உணர்ந்தேன். "இனிமேல் நாம் கவலைப்பட்டுப் பயன் என்ன? மெல்ல மெல்ல மறக்க வேண்டியதுதான்" என்றேன்.

"ஒருநாள் கனவில் வந்தார். இதே வீட்டில்தான். அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்திருந்தார். தலைகுனிந்தபடி இருந்தார். நான் வந்து பார்த்துக் கேட்டேன். வாய் திறக்காமல் தலைகுனிந்தபடி இருந்தார். இப்படிச் சொல்லாமல் எங்கே போனீர்கள் என்று கேட்டேன். ஓ என்று அலறினார். உடனே விழித்துக் கொண்டேன். அதன் பிறகு அன்று இரவெல்லாம் எனக்கு உறக்கம் வரவில்லை. சிறிது நேரம் அழுதேன். என் கணவர் விழித்துப் பார்த்து, ஏன் இன்னும் உறங்காமல் இருக்கிறாய் என்று கேட்டார். ஏதோ துன்பமான கனவு கண்டதாகச் சொல்லிவிட்டேன்."

"என்ன கனவு என்று அவர் கேட்கவில்லையா?"

"பகலெல்லாம் ஓயாமல் வேலை செய்கிறவர். படுத்தால் நன்றாக உறங்குவார். இப்படி எல்லாம் கேட்டுப் பழக நேரம் ஏது? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் ஓய்வு. அன்றைக்கும் எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள். அதன் பிறகும் அவர் என்னைக் கேட்கவில்லை. மறந்து விட்டார். கேட்டிருந்தாலும் உண்மையைச் சொல்லிப் பயன் இல்லை; சொல்லியிருக்க மாட்டேன்."

"ஏன் அப்படி?"

"அது உங்களுக்கு ஏன் தெரியவேண்டும்? எங்கள் கல்லூரியின் உள நூல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது அது. ஆண்கள் எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும் சந்தேகப்படுவார்கள். ஆகையால் அவர்களின் எதிரில் அண்ணன் தம்பியுடனும் எந்த ஆணுடனும் நெருங்கிப் பழகக் கூடாது. பழைய பழக்கங்களையும் சொல்லக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார்."

எனக்குச் சிரிப்பு வந்தது.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

"பெண்கள் மட்டும் சந்தேகம் இல்லாதவர்களா? தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் வேறு எந்தக் காரணத்திற்காகப் பழகினாலும் மனைவிக்குச் சந்தேகம் ஏற்படாதா?" என்றேன்.

"அதுவும் உண்மைதான்" என்று அவளும் சிரித்தாள்.

"உங்கள் உளநூல் ஆசிரியை திருமணம் ஆனவரா?"

"ஆமாம். திருமணம் ஆகிக் கணவரோடு வாழாதவர்; கணவனால் கைவிடப்பட்டவர்."

"சரிதான். தம் சொந்த அனுபவம் போலும்."

"அய்யோ! தூய்மையான நல்ல வாழ்க்கை. ஒன்றும் குறை சொல்ல முடியாது."

"இருக்கலாம்."

சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.

"உயிரோடு இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அப்படி இருந்தால் யாருக்காவது ஒரு கடிதம் எழுதியிருக்க மாட்டாரா?" என்று மறுபடியும் அவளே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.

"ஏன் அப்படிச் சந்தேகப்படுகிறீர்கள்?"

"செத்தவர்கள் கனவில் வருவதாகச் சொல்வார்கள். அன்று இரவு அவர் கனவில் வந்தபோது, அவர் இறந்து போயிருப்பார் என்று எண்ணினேன். அதனால்தான் துயரம் தாங்காமல் அப்படி அழுதேன்."

"உயிரோடு இருப்பவர்கள் கனவில் வருவதில்லையா?"

"வருகிறார்கள். உண்மைதான். ஆனால் துயரப்படும் போது இந்த ஆராய்ச்சி எல்லாம் நினைவுக்கு வருவதில்லை; மனம் மெலிவாக இருக்கும்போது, அறிவு துணைக்கு வருவதே இல்லை அல்லவா? அதுபோகட்டும். அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நல்லவன் என்றுதான் நினைக்கின்றேன். கொஞ்சம் மன உறுதி இருந்திருந்தால் இப்படிப் போயிருக்க மாட்டான்."

"உயிரோடு இருப்பார் என்றே எண்ணுறீர்களா?"

"ஆமாம்."

"அப்படியானால் ஏன் யாருக்கும் கடிதம் எழுதவில்லை"

"அவனுடைய இயற்கை அது. வாலாசாவில் இருந்தபோது என்னோடு எவ்வளவு நெருங்கிப் பழகினான் தெரியுமா? இரவும் பகலும் பிரியாமல் பழகினோம். அப்படிப்பட்டவன், சென்னைக்கு வந்த பிறகு சரியாகப் பழகவே இல்லையே. மனத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால், உடனே பழக்கத்தையே மாற்றிக்கொண்டு வேறு ஆள் போல் மாறிவிடுகிறான். இப்போதும் அப்படித்தான் செய்தான். பொறுத்துப் பார்ப்போம். இனிமேலாவது ஒரு கடிதம் எழுதுவான் என்று நம்புகிறேன்."

"அப்படியானால் அவர் உயிரோடு இருப்பார் என்றே சொல்கிறீர்கள்" என்று மறுபடியும் கவலையோடு கேட்டாள்.

"அப்படிச் சந்தேகமாக எண்ணவே வேண்டா. "ஏன் சந்தேகப்பட வேண்டும்?" என்றேன். அதன் பிறகு அமைதியாக இருந்தாள். பேச்சை மாற்றுவதற்காக அவளுடைய கணவரின் தொழில், வாழ்க்கை, வருவாய் முதலியன பற்றிக் கேட்டேன். அக்கறை இல்லாதவள் போல் அவற்றிற்கு மறுமொழி அளித்தாள்.

பிறகு மறுபடியும் சந்திரனைப் பற்றிய பேச்சைத் தொடர்ந்து, "நான் அவரோடு பழகியது தவறு என்றோ அவரை ஏமாற்றிவிட்டேன் என்றோ நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டாள்.

"ஏன் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப எண்ணிக் கலங்குகிறீர்கள். நான் அன்றைக்கே சொன்னேனே. நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. அவன் அவனுடைய அறியாமையால் அப்படி எண்ணி விட்டான் என்று சொன்னேனே. இனிமேல் அதைப்பற்றி எண்ணவே வேண்டா. விட்டு விடுங்கள்" என்றேன்.

பிறகு இமாவதியின் தாய் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்து சென்றார். அவர் தம்முடைய பேச்சுக்கு இடையே, "இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான். ஒன்றும் இல்லாமலே காதல் காதல் என்று எண்ணிக் கொண்டு வீணாக மயங்கிப் போகிறார்கள்" என்றார். எனக்கு அந்தச் சொல் ஒரு புதுக் குண்டு போல் இருந்தது. அவர் போனபிறகு, சந்திரனுடைய பண்பைப் பற்றி இமாவதி என்ன எண்ணுகிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.

"சந்திரனுடைய மனத்தைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? அவன் காதலைப் பற்றி ஏதாவது சொன்னது உண்டா?" என்றேன்.

"என்னிடத்தில் அப்படி அவர் ஒரு நாளும் சொன்னதே இல்லை. சொல்லியிருந்தால் ஒன்று நானாவது விலகியிருப்பேன். அல்லது, இந்தத் திருமணமாவது நடந்திருக்காது. அப்படி ஒன்றும் சொன்னதே இல்லை" என்றாள்.

"மற்றப் பெண்களைப் பற்றியாவது அவன் உங்களிடத்தில் ஏதாவது சொன்னது உண்டா?"

"அவர் இந்தப் பேச்சையே பேசுவதில்லை. பாடங்களைப் பற்றிப் பேசுவார். பொது அறிவு பேசுவார். அரசியல் பேசுவார். சமயம் பற்றிப் பேசுவார். குடும்பத்தாரைப் பற்றிப் பேசுவார். ஆனால் பெண்களைப் பற்றியோ, காதலர்களின் போக்கைப் பற்றியோ பேசுவதில்லை. ஆனால்..." என்று சிறிது நிறுத்தினாள்.

"ஏன் தயங்குகிறீர்கள்? சொல்லக் கூடாதா?"

"அப்படி ஒன்றும் இல்லை. உங்களுக்கு அதனால் ஏதாவது வருத்தம் ஏற்படுமோ என்றுதான் தயங்குகிறேன்."

"என்னைப்பற்றி ஏதாவது சொன்னானா?"

"இல்லை. உங்களுக்கு வேண்டியவரான ஓர் அம்மாவைப் பற்றி."

"இருந்தால் என்ன? சொல்லுங்கள். அப்படி யாரும் இல்லையே"

"உங்கள் ஊரில், உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்."

சிறிது நேரம் எண்ணிப் பார்த்தேன். யாரும் நினைவுக்கு வரவில்லை. "பெயர்?" என்றேன்.

"பெயர் நினைவுக்கு வரவில்லை. சந்திரன் சொன்னது நன்றாக நினைவுக்கு வருகிறது. உங்களைச் சின்ன வயதிலிருந்து அன்பாக எடுத்து வளர்த்தவளாம். விதவையாம்."

"ஆமாம். பாக்கிய அம்மையார். மூன்றாம் வீடு"

"அந்த அம்மாவைப் பற்றித்தான் ஒருநாள் என்னிடம் பேசினார். கடற்கரையில் நானும் அவரும் மட்டும் உட்கார்ந்திருந்தபோது பேசினார். அந்தப் பேச்சு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது."

"நல்ல உத்தமியாயிற்றே. என்ன சொன்னான்?"

"பெண்களின் மனத்தையே அளந்து காண முடியாது என்றார். நம்ப முடியாது என்றார். அப்படிச் சொல்லக் காரணம் என்ன என்று கேட்டேன். அப்போதுதான் அந்த அம்மாவைப் பற்றிச் சொன்னார். நல்ல அழகும் அறிவும் உள்ளவளாம். இளமையிலேயே கணவனை இழந்தவளாம். சந்திரனோடு அன்பாகப் பழகினாராம். அவரும் அவளோடு தாயோடு பழகுவது போல் பழகினாளாம். கடைசியில் மனத்தில் வேறு ஆசை தோன்றியதாக அறிந்து கொண்டாராம். உடனே அங்கே போகாமல் விலகிவிட்டாராம். பழக்கத்தையே குறைத்துக் கொண்டாராம்."

அதைக் கேட்டதும் எனக்குத் திடுக்கிட்டது என் உள்ளத்திற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பெருமூச்சு விட்டேன். ஒன்றும் பேச வாய் வரவில்லை.

"நான் இதை உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது. தவறு செய்துவிட்டேன் உங்கள் மனம் வருந்துவது தெரிகிறது" என்றாள் இமாவதி.

"எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அந்த அம்மா எனக்கு உறவு அல்ல. ஆனால் மிகமிக வேண்டியவர். குழந்தையாக இருந்தபோது முதல் என்னிடம் அன்பு காட்டியவர். ஆனால், அவன் சொன்னது நம்ப முடியாதது. பொய். வேறு ஏதாவது சொன்னானா?"

"வேறு ஒன்றும் சொல்லவில்லை."

"அதைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?"

"எனக்கு எப்படி உண்மை தெரியும்? அதைக் கேட்ட பிறகு, சந்திரன் செய்தது சரி. அப்படி விலகுவதுதான் நல்லது என்று தோன்றியது. அவர் செய்தது சரி என்று அவரிடமே சொன்னேன். என் மனத்துக்குள் அவருடைய பண்பைப் பாராட்டினேன். ஆண்கள் இப்படித்தான் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்."

அதை மறுத்திட வேண்டும் என்று என் மனம் தூண்டியது. "சந்திரன் சொன்னதை நம்ப வேண்டா. உங்களிடம் பழகியபோதுதான் தவறாக எண்ணினான் என்றும், இதுதான் முதல் தவறு என்றும் இதுவரையில் கருதி வந்தேன். இது இரண்டாவது தவறு. இதற்கு முன்னமே பாக்கியம் அம்மையாரின் அன்பையும் அவன் இப்படியே தவறாக எண்ணிவிட்டான். அப்போதே முதல் தவறு செய்தான் என்று இப்போது தெரிந்து கொண்டேன். அவனுடைய மனத்திலேயே ஒருவகைக் கோளாறு இருக்கிறது. அதனால் தான் தாய் போல் பழகினாலும் தவறாக எண்ணுகிறான். தங்கை போல் பழகினாலும் தவறாக எண்ணுகிறான்" என்று சிறிது கடுமை கலந்த குரலில் சொன்னேன்.

"என்ன இப்படிக் கடுமையாகப் பேசுகிறீர்களே!" என்று திகைப்போடு பார்த்தாள் இமாவதி.

"ஆமாம். பெண்களின் மனத்தை அளந்து காண முடியாது என்றான். பொதுவாக, நல்ல மனத்தையே காண முடியாதவன் அவன். அதனால்தான் அப்படித் தடுமாறினான்" என்றேன்.

"சந்திரனை அவ்வளவு அறிவில்லாதவராகவோ கெட்டவராகவோ என்னால் கருதமுடியாது. நீங்கள் ஏனோ இப்படி எண்ணுகிறீர்கள்" என்றாள்.

என் கடுமையும் வேகமும் மெல்லத் தணிந்தன. பாக்கிய அம்மையாரின் வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொன்னேன். பிறகு வேறு பேச்சும் பேசிவிட்டு விடைபெற்றேன். விடைபெறு முன்பு "பொதுவாகப் பார்த்தால், சந்திரன் எதையும் அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு பிறகு அந்த முடிவுகளால் அல்லல் படுகிறான் என்று தெரிகிறது" என்று என் கருத்தைச் சொல்லிவிட்டு வந்தேன்.

திரும்பி வந்தபோது, மாலன் விரிவாகக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். "பழைய கதையைப் பழையபடியே பேசியிருப்பீர்கள். சந்திரனைப் பற்றிப் புதிதாக ஒன்றும் தெரியவில்லையே. வீணான முயற்சி. உனக்கு ஏதோ பொழுதுபோக்கு போகட்டும்" என்று சொல்லி, என் பேச்சுக்கு இடம் தராமலே முடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_16&oldid=7895" இலிருந்து மீள்விக்கப்பட்டது