அலை ஓசை/எரிமலை/வெடித்த எரிமலை

விக்கிமூலம் இலிருந்து

இருபத்து நான்காம் அத்தியாயம் வெடித்த எரிமலை

மாலைப் பொழுது இரவாக மாறிக் கொண்டிருந்தது. சாலை ஓரத்துக் கம்பங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனால் விளக்குகள் எல்லாவற்றுக்கும் ஏ.ஆர்.பி. கூண்டுகள் போட்டிருந்தபடியாக தீபங்கள் பிரகாசமாக எரியவில்லை. "இந்த ஜப்பான் யுத்தம் வந்தாலும் வந்தது; கல்கத்தாவின் சோபையே போய்விட்டது! முன்னேயெல்லாம் இந்த இடத்தில் எப்படிப் பிரகாசமான விளக்குப் போட்டு ஜகஜ்ஜோதியாக இருக்கும்!" என்றாள் சித்ரா. இப்படி அவள் சொல்லி வாயை மூடினாளோ இல்லையோ, எட்டுத் திக்கும் திடுக்கிடும்படியாகப் படார், படார் என்று சத்தம் கேட்டது. உடனே ஏ.ஆர்.பி. ஸைரன் உடம்பு சிலிர்க்கும்படி சோக சத்தத்துடன் ஊளையிடத் தொடங்கியது. ஜப்பான் விமானம் வந்து குண்டு போடுகிறதென்றும், ஏ.ஆர்.பி. ஸைரன் முன் எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாகப் பின் எச்சரிக்கை செய்கிறதென்றும் அமரநாத்தும் சித்ராவும் தெரிந்து கொண்டார்கள். இது அவர்களுக்குப் புதிய அனுபவ மாதலால் அவர்களுடைய உடம்பு நடுங்கிற்று. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சித்ரா அமரநாத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டாள். அமரநாத் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினான். வீதியில் எள் விழவும் இடமில்லாதபடி நெருங்கி நின்று கொண்டிருந்த ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடி மறைந்தார்கள். வண்டிகள் மட்டும் அப்படி அப்படியே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தன. குண்டுகளின் சத்தம் ஓய்ந்தது ஐந்து நிமிஷம் ஆயிற்று. 'சரி; இவ்வளவுதான் போலிருக்கிறது; இனிமேல் போகலாம்' என்ற எண்ணம் அவர்கள் மனதிலே தோன்றியது. அடுத்த கணத்தில், ஆகா! இது என்ன அதிசயமான வெளிச்சம்!

ஆயிரம் கோடி சூரியன் பூமியை நோக்கி விரைந்து வருவது போன்ற வெளிச்சம்! உடனே அந்த அதிசயமான வெளிச்சம் மங்குகிறது! ஒரு பெரிய சத்தம் அண்டங்கள் வெடித்து விழுவது போன்ற பயங்கரமான சத்தம் கேட்கிறது. காது செவிடாகி விட்டதென்றே தோன்றுகிறது. மோட்டார் கிடுகிடுவென்று நடுங்குகிறது. மோட்டாரின் கண்ணாடிக் கதவுகள் சடசடவென்று விரிந்து உடைகின்றன. சுற்றுப்புறமெங்கும் மக்கள் ஓலமிடும் பயங்கரமான சத்தம் எழுகின்றது. பயங்கரம் இத்துடன் முடிந்துபாய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் ஒரு பெரும் புகைத் திரள் குப்குப் என்று கிளம்பிப் பரவி வானை மறைக்கிறது புகைத் திரளுக்கு மத்தியிலிருந்து ஒரு செந்தீப் பிழம்பு வானை நோக்கி ஜுவாலை விட்டுக்கொண்டு மேலே மேலே போய் வானத்தையே மூடிவிடும் போல் தோன்றுகிறது. இத்தனை நேரமும் அமரநாத்தைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடியிருந்தாள். இப்போது வாயைத் திறந்து நடுநடுங்கிய மெல்லிய குரலில், "ஐயோ! இது என்ன இவ்வளவு பெரிய நெருப்பு எங்கிருந்து கிளம்புகிறது?" என்றாள். "எனக்கும் இப்போதுதான் தெரிகிறது; டி.என்.டி. வெடி மருந்துக் கிடங்கில் தீப் பிடித்திருக்க வேண்டும். அதுதான் இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது!" என்றான் அமரநாத். "உலகத்துக்கு கேடுகாலம் வந்து விட்டது; சந்தேகம் இல்லை" என்றாள் சித்ரா. "உலகத்துக்கு ஏதோ கேடுகாலம் முன்னமே வந்துவிட்டது; இப்போது தான் கல்கத்தாவுக்குக் கேடு வந்திருக்கிறது!" என்றான் அமரநாத். "நாம் சிவனே என்று மதராஸுக்கு போய் விடலாம்.

கல்கத்தாவில் இத்தனை நாள் இருந்தது போதும்!" என்றாள் சித்ரா. "முதலில் இன்று ராத்திரி வீடு போய்ச் சேரலாம் நாளைக்கு மதராஸுக்குப் போவது பற்றி யோசிக்கலாம்" என்றான் அமரநாத். "வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விடுங்கள்! ஹாவ்ராவுக்கு இன்றைக்கு வேண்டாம்!" என்றாள். "கொஞ்சம் என் கை நடுக்கம் நிற்கட்டும். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஹாவ்ராவுக்குப் போக நினைத்தாலும் இன்றைக்கு முடியாது!" என்றான் அமரநாத். அமரநாத் கூறியது உண்மை என்பதை எதிரிலே தோன்றிய காட்சிகளும் சுற்றுப்புறமெங்கும் கேட்ட சத்தங்களும் உறுதிப்படுத்தின. முதலில் கிளம்பிய பெரும் நெருப்பு மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்குச் சமீபத்தில் அங்குமிங்கும் இன்னும் சிற்சில சிறிய தீப்பிழம்புகள் தோன்றலாயின. திரள் திரளாகக் கரிய புகை கிளம்பிச் சுழன்று பரவி வானவெளியை யெல்லாம் மூடியது. தீப்பிடித்த இடங்களை நோக்கி ஜனங்கள் பலர் பயங்கரமான ஊளைச் சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து ஓடினார்கள். நாலாபக்கங்களிலிருந்தும் டாண் டாண் டாண் என்று மிக்க வேகமான மணி அடித்துக் கொண்டு நெருப்பு அணைக்கும் என்ஜின்கள் பறந்து ஓடி வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த மோட்டார் வண்டிகள் திடீரென்று ஏக காலத்தில் புறப்பட யத்தனித்தபோது அவற்றின் ஹாரன்கள் எழுப்பிய சத்தங்கள், மகா கோரமாகக் காது செவிடுபடக் கேட்டன. வானை மூடியிருந்த புகைத் திரள் காற்றின் வேகத்தினால் கொஞ்சம் விலகிக் கொடுத்துத் தீயின் வெளிச்சம் கட்டிடங்களில் மேலே விழும்படி செய்த போது, சாலையின் இருபுறமும் இருந்த நாலு மெத்தை ஐந்து மெத்தைக் கட்டிடங்களின் மேல்தளங்களில் ஜனங்கள் நிழல் உருவங்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காட்சி, பயங்கரமான யமலோகக் காட்சியை நினைவூட்டியது.

சித்ரா அதையெல்லாம் பார்க்கச் சகியாமல் கண்களை மூடிக் கொண்டாள். பிறகு கேட்கச் சகியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள். "வண்டியைத் திருப்பி ஓட்டப் போகிறீர்களா, இல்லையா!" என்றாள். "ஓட்டுகிறேன்! நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக முன்னாலும் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டு வா" என்றான் அமரநாத். கார் திரும்பிப் புறப்பட்டு அந்த வீதியைத் தாண்டி அடுத்த வீதியில் நுழைந்தது. அங்கே கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு பெரிய ஜனக் கூட்டம் அருகில் நெருங்கிப் பார்த்தபோது ஒரு மார்வாரியின் கடைக்குள் ஜனங்கள் புகுந்து கிடைத்த சாமான்களைச் சுருட்டிக் கொண்டு ஓடுவதாகத் தெரியவந்தது. கூட்டத்தின் மத்தியில் சில போலீஸ்காரர்களும் காணப்பட்டார்கள். ஜனங்கள் கடையில் புகுந்து சூறையாடுவதை அந்தப் போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஜனக் கூட்டத்தின் ஓரம் வரையில் அமரநாத் காரைக் கொண்டு வந்து விட்டுப் பிறகு சிறிது தயங்கினான். மறுபடியும் காரைத் திருப்பி விடலாமா என்று நினைத்தான். திரும்பிப் போவதற்கு வேறு நல்ல வழி கிடையாது ரொம்பவும் சுற்றி அலைய வேண்டும். மேலும் இந்தக் காலிக் கூட்டத்துக்குப் பயந்து திரும்பிப் போவதா? வீதி ஓரமாகக் கூட்டத்திற்குள்ளே அமரநாத் காரை விட்டான். கூட்டத்தில் சிலர் காரின் மேல்தட்டைத் தட்டினார்கள்; சிலர் கதவைத் தட்டினார்கள். சிலர் பின்னால் நின்று வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்தப் பார்த்தார்கள். சிலர் 'ஆய் ஊய்' என்று கத்தினார்கள். 'மாரோ! மாரோ!" என்று ஒரு குரல் கேட்டது. அமரநாத் கதிகலக்கத்துடன்தான் வண்டியை ஓட்டினான். நல்ல வேளையாக அபாயம் ஒன்றும் நேரவில்லை. கூட்டத்தைத் தாண்டியதும் வேகமாக வண்டியை விட்டான்.

"சித்ரா! பார்த்தாயல்லவா இலட்சணத்தை! எங்கேயோ குண்டு வெடித்தது! எங்கேயோ தீப்பிடித்தது! இங்கே கடையிலே புகுந்து காலிகள் கொள்ளையடிக்கிறார்கள்! இந்த இலட்சணத்தில் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம்! உருப்பட்டாற் போலத்தான்!" என்றான் அமரநாத். இப்படி அமரநாத் சொல்லிக் கொண்டிருக்கும் போது காரின் மேல் ஒரு கல் விழுந்தது. ஓடும் வண்டியில் விழுந்தபடியால் வெடி குண்டு வெடித்தது போலச் சத்தம் கேட்டது. "நான் சொன்னது சரியாகப் போய்விட்டதல்லவா? இந்தக் கல் என் பேரிலோ எதிர்க் கண்ணாடியின் பேரிலோ விழுந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும்?" என்றான் அமரநாத். "நான்தான் சொல்லிவிட்டேனே? இந்தக் கல்கத்தாவிலே இருந்ததும் போதும்; சம்பாதித்ததும் போதும். நாளைக்கே ஊருக்குப் புறப்படலாம்; உள்ளதைக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்." "ஊருக்குப் போனால் நிம்மதி வந்துவிடுமா? அங்கேயும் இந்த மாதிரியான ஜனங்கள் தானே இருப்பார்கள்? இங்கே செய்வதைப்போல் அங்கேயும் செய்ய மாட்டார்களா?" "நம்ம பக்கத்து ஜனங்கள் ஒரு நாளும் இந்த மாதிரி மிருகப் பிராயமாக நடந்துகொள்ள மாட்டார்கள்!" என்று தீர்மானமாகக் கூறினாள் சித்ரா. கொஞ்ச தூரம் போனதும் ஒரு மோட்டார் பஸ் சாலை ஓரத்தில் பக்கவாட்டில் விழுந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். "பஸ்ஸில் எப்படித் தீப்பிடிக்கும்?" என்றாள் சித்ரா. "தானாகப் பிடித்திராது! யாரோ காலிகள் தீ வைத்திருக்கிறார்கள்!" என்றான் அமரநாத். "எதற்காக?" "எதற்காக என்று கேட்டால் என்ன சொல்லுவது? காலிகளுடைய காரியங்களுக்குக் காரணம் சொல்ல முடியுமா? கொள்ளை, கொலை, தீ வைத்தல் ஆகிய காரியங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம்! நிஷ்காம்ய கர்மமாகவே செய்வார்கள்!" வண்டி இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் சாலை ஓரத்தில் ஓர் உருவம் விழுந்து கிடப்பது தெரிந்தது.

அது பெண் உருவமாகவும் காணப்பட்டது. அதன் பக்கத்தில் ஒரு பையன் குனிந்து நின்று கொண்டிருந்தான். "நிறுத்துங்கள்! வண்டியை நிறுத்துங்கள்!" என்று சித்ரா கூறினாள். வண்டி நின்றது அதைப் பார்த்ததும் பெண் உருவத்தின் பக்கத்தில் நின்ற பையன் விழுந்தடித்து ஓடினான். "அந்தப் பையன் என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று சித்ரா கேட்டாள். "கையிலிருந்த வளையலைக் கழற்றிக் கொண்டிருந்தான். நம்மைப் பார்த்ததும் ஓடினான்! சித்ரா! கொஞ்ச நாளாகக் கல்கத்தா சாலைகளில் பிரேதங்களைக் காண்பதில்லையென்று குறைப்பட்டாயல்லவா? இதோ உன் குறை தீர்ந்து விட்டது?" "ஏதாவது கன்னாபின்னாவென்று சொல்லா தீர்கள்! நான் பிரேதத்தைக் காணவில்லையென்று குறைப்பட்டேனாக்கும்! ஒருவேளை இன்னும் உயிர் இருக்கிறதோ, என்னமோ? இறங்கிப் பார்க்கலாம் வாருங்கள்" என்றாள் சித்ரா. இருவரும் இறங்கி அந்த உருவத்தின் அருகில் போனார்கள். "அடாடா! மதராஸ் பக்கத்துப் பெண் போல அல்லவா இருக்கிறது? வயதும் அதிகமிராது; சிறு பெண்!" என்றாள் சித்ரா. "மதராஸ் பெண் என்பதற்காக யமன் விட்டுவிடுவானா, என்ன? பார்த்தாகிவிட்டது! வா, போகலாம்" என்றான் அமரநாத். "செத்துப் போய் விட்டதாக அவ்வளவு நிச்சயமாய் ஏன் சொல்ல வேண்டும்? உயிர் இருக் கிறதா என்று பாருங்கள்!" "நீயே பார்! உனக்குத் தான் இந்த மாதிரிக் காரியங்களில் அனுபவம் அதிகம்!" என்றான் அமரநாத்.

கீழே கிடந்த பெண்ணின் மூக்கின் அருகே சித்ரா விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு இலேசாக வந்து கொண்டி ருந்தது. மார்பில் கை வைத்துப் பார்த்தாள், மார்பு அடித்துக் கொண்டிருந்தது என்பதும் நன்கு தெரிந்தது. "நிச்சயமாக உயிர் இருக்கிறது! சீக்கிரம் பிடியுங்கள்!" என்று சொல்லிச் சித்ரா அந்தப் பிரக்ஞையற்ற பெண்ணின் தலையின் கீழ் கையைக் கொடுத்துத் தூக்கினாள். "ஏன் மரம் மாதிரி நிற்கிறீர்கள்! சீக்கிரம் காலின் பக்கம் பிடித்துத் தூக்குங்கள்" என்றாள். "யாரோ தெருவில் கிடக்கிறவளுக்காக நான் 'மரம்' என்று வசவு வாங்க வேண்டியிருக்கிறது! அவளுடைய காலையும் பிடித்துத் தொலைக்க வேண்டியிருகிறது!" என்று சொல்லிக் கொண்டே அமரநாத் அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துத் தூக்கினான் இருவருமாகக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள். "விடுங்கள்! சீக்கிரம் காரை விடுங்கள்! ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்!" என்றாள் சித்ரா. வண்டி கிளம்பிப் போகத் தொடங்கியதும், "எங்கே விடுகிறது! காரை எங்கே விடுகிறது?" என்று அமரநாத் கேட்டான். "வீட்டுக்குத் தான் விடவேண்டும்! வேறு எங்கே?" "அப்படியானால் நான் வண்டியை நிறுத்தி வெளியில் எடுத்து எறிந்து விடுவேன். வீட்டுக்குக் கொண்டு போகவே கூடாது. யாரோ? என்ன சங்கடமோ? நம் வீட்டில் செத்து வைத்தால் என்ன செய்கிறது?" என்றான் அமரநாத். "உங்களைப் போல் இரக்கமற்ற மனிதரை நான் பார்த்ததே கிடையாது. அப்படியானால், அனாதை விடுதிக்கு விடுங்கள்! சீக்கிரம் போனால் சரி!" என்றாள் சித்ரா. அமரநாத் அதிவேகமாகக் காரை விட்டுக்கொண்டு சென்றான். பிரக்ஞையற்றுக் கிடந்த பெண்ணின் முகத்தில் வேகமாகக் காற்றுப் பட்டதினாலேயே அவளுக்கு உயிரும் உணர்வும் வரத் தொடங்கின. அனாதை ஆசிரமத்திற்குக் கொண்டுபோய்ச் சிறிது நேரம் ஆரம்ப சிகிச்சை செய்ததும் நன்றாக உயிர் வந்துவிட்டது. இனி அபாயம் இல்லையென்று தெரிந்து கொண்டு அமரநாத்தும் சித்ராவும் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.