பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறிவியல் வினா விடை

வேதியியல்

1. வேதியியல் துறைகள்

1. வேதியியல் என்றால் என்ன?

தனிமம், சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்பையும் ஆராயும் துறை. தவிர இது பொருள்களின் சேர்க்கையையும், அவை ஒன்றின் மீது மற்றொன்று ஆற்றும் வினை ஆகியவற்றையும் ஆராய்வது.

2. இது எவ்வகை அறிவியல்?

ஓர் அடிப்படை அறிவியல்.

3. இதன் முக்கியப் பிரிவுகள் யாவை?

இயற்பியல் வேதியியல், கனிம வேதி இயல், கரிம வேதி இயல் எனப் பலவகை.

4. இரசவாதம் என்றால் என்ன?

இரும்பைப் பொன்னாக்கும் கலை. இடைக்கால வேதி இயல். இதுவே பின் வேதியியலாக வளர்ந்தது.

5. இரசவாதி என்பவர் யார்?

இரும்பைப் பொன்னாக்குபவர். சித்தர்கள் இதில் வல்லவர்கள்.

6. மருந்து வேதிஇயல் என்றால் என்ன?

இடைக்கால வேதி இயல்.சில்வியஸ் என்பவரால் ஆய்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவத்தில் மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முதன்மையாக ஆராய்ந்தது.

7. திண்ம வேதியியல் என்றால் என்ன?

மூலக்கூறுகளில் அணுக்களின் இட அமைவு பற்றி ஆராயுந் துறை.

8. தனிம அளவை இயல் என்றால் என்ன?

தனிமங்கள் சேர்மங்களை உருவாக்கும் அளவுகள்.