பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணையும் வெள்ளமும்

காட்டாறு ஒன்று இருந்தது. அதன் கரையிலே ஒரு சிற்றுார் அமைந்திருந்தது. அந்தக் காட்டாற்றிலே திடீர் திடீர் என்று வெள்ளம் பெருகும். வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஊரில் உள்ள குடிசைகளையும், ஆடு மாடுகளையும் அடித்துக் கொண்டு போய்விடும். இந்தத் திடீர் ஆபத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் அந்த ஊரார் பலமுறை துன்பம் அனுபவித்து விட்டார்கள். கடைசியில் நல்லான் என்ற ஒருவன், அந்தக் காட்டாற்றிற்கு ஒர் அணை கட்டுவதென்று திட்டமிட்டான். ஊர்ப் பெரியார்களின் அன்பும் ஆதரவும், இளந்தோழர்களின் ஒத்துழைப்பும் கொண்டு நல்லான் அந்த அணையைக் கட்டி முடித்தான்.

அணை வெள்ளப் பெருக்கைத் தடுத்ததோடு, தோட்டந் துரவுகளுக்கு நீர் தரவும் பயன்பட்டது. அதற்கு நல்லான் அணையென்று பெயரிட்டு அழைத்தார்கள். ஊரார் அவ்வப்போது பழுது பார்த்து அணை உடையாமல் பார்த்துக் கொண்டார்கள். நல்லான் மூப்படைந்து இறந்த பிறகும் அணை இருந்தது. பாட்டிமார் தங்கள் பேரன் பேத்தியர்க்கு அந்த அணைக்கட்டின் வரலாற்றைக் கதையாகக் கூறுவார்கள். நல்லான் செய்த முயற்சிகளைக் கதை கதையாகக் கூறுவார்கள்.