பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46 நல்வழிச் சிறுகதைகள்

நல்லான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருநாள் முனியன் என்ற ஓர் இளைஞன் அந்த அணைக்கட்டின் பக்கம் சென்றான். அதற்கு முந்திய நாள் வெள்ளம் வந்து அணைக்கட்டு நிரம்பியிருந்தது.

முனியன் நீர் நிறைந்த அந்த அணைக் கட்டைப் பார்த்தான். அவனுக்கு மனத்தில் பொல்லாத ஆசையொன்று தோன்றியது. அந்த அணைக் கட்டை ஒர் இடத்தில் உடைத்துவிட்டு அது எப்படிப் பாய்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதுதான் அவ்வாசை. ஒரு கடப்பாரையினால் யாரும் பார்க்காதபோது அணைக்கட்டுச் சுவரைப் பெயர்த்தான். சிறு துளையின் வழியாக நீர் குபுகுபு வென்று பாய்ந்தது. சிறிது நேரத்தில் சிறு துளை பெரிதாகி ஓடியது. அந்த வெள்ளப் பெருக்கில் ஊரி லிருந்த பல குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.

முனியன் பயந்து ஊருக்குள் திரும்பினான். அவன் தாய் தந்தையரும், அவர்கள் வீடும் ஆடும் மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. தன்னால் வந்த வினையைக் கண்டு முனியன் பொங்கிப் பொங்கி அழுதான் அழுதால் போனதெல்லாம் திரும்பியா வந்துவிடும் ? அதன்பின் அவன் பல துன்பங்களை அனுபவித்துத் திருந்தினான்.

கருத்துரை :- அணை கட்டுவது அரிய செயல் , உடைப்பது எளிது. நற்செயல்கள் செய்தல் அரிது ; தீது, செய்தல் எளிது. அரிய செயல் செய்தலே சிறப்பு.