அலை ஓசை/பிரளயம்/டாக்டரின் உத்தரவு
மூன்றாம் அத்தியாயம்
டாக்டரின் உத்தரவு
வண்டியிலிருந்து இறங்கியவர்கள் சீதாவும் சூரியாவும் சுண்டுவுந்தான். ஆனால் சூரியாவையும் சுண்டுவையும் லலிதா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுச் சீதாவின் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள். "உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன். நம்முடைய கல்யாணத்தின்போது நாம் இரண்டுபேரும் தனியாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோ ம், பாரு! அதைப் பட்டுவுக்கும் பாலுவுக்கும் இப்பத்தான் காட்டிக் கொண்டிருந்தேன். பட்டு என் பெண்; பாலு என் பிள்ளை. அவர்களுக்கு உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன். சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் வண்டி வந்து விட்டது. வண்டியில் யார் வந்திருப்பார்கள் என்று வெளியே வந்து பார்த்தால் நீ இறங்குகிறாய், என்ன அதிசயத்தைச் சொல்வது? சற்று முன்னாலேதான் போஸ்டுமேன் கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். உன்னுடைய கடிதத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந்தார். நீ வருவதற்குள் நான் அங்கே வந்துவிட வேண்டுமென்று எழுதியிருந்தார். நீ புது டில்லியிலும் கல்கத்தாவிலும் இருந்து நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவளாம். உன்னை உபசரிப்பதற்கு இவருக்குத் தெரியாதாம்! வேடிக்கையாக இல்லையா இவர் எழுதியிருப்பது? நானும் உடனே திரும்பிவிடுவது என்றுதான் தீர்மானித்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா உன்னைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார். இங்கே ஒரு தடவை உன்னை அனுப்பி வைக்கும்படி சொன்னார். நான் அனுப்புவதற்குள் நீயே வந்துவிட்டாய்!" என்று லலிதா அளவில்லாத ஆர்வத்தோடு வார்த்தைகளைக் கொட்டினாள்.
இதற்குள் அவர்கள் வீட்டுக் கூடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே குழந்தைகள் இருவரும் நின்று அதிசயத்துடனும் சங்கோசத்துடனும் சீதாவை ஏறிட்டுப் பார்த்தார்கள். "இவர்கள்தானே உன் குழந்தைகள்? பட்டுவும் பாலுவும்?" என்று சீதா கேட்டாள். "ஆமாம்; இவர்கள்தான்!" என்று லலிதா கூறிவிட்டுக் குழந்தைகளைப் பார்த்துச் சொன்னாள்: "பார்த்தீர்களா? சீதா அத்தங்காளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனே? சொல்லி வாய் மூடுவதற்குள்ளே வந்து விட்டாள். அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள் என்று சொன்னேனோ, இல்லையோ? நான் சொன்னது நிஜமா இல்லையா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சீதா! நீ ஜெயிலில் இருந்து இன்னும் எத்தனையோ கஷ்டங்களைப் பட்ட பிறகும் இவ்வளவு அழகாயிருக்கிறாயேடி! உன் அகத்துக்காரர் உன்னை விட்டு எப்படித்தான் பிரிந்திருக்கிறாரோ, தெரியவில்லை! அவருக்கு நன்றாகச் சீமைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. சீமையில் இப்போது அப்படி என்ன அவசர வேலையாம்! அது போகட்டும், வஸந்தியை ஏன் நீ அழைத்துக் கொண்டு வரவில்லை?" ஏற்கெனவே வாட்டமுற்றிருந்த சீதாவின் முகம் குழந்தை வஸந்தியைப் பற்றிக் கேட்டதும் அதிகமாகச் சுணக்கமுற்றது. "வஸந்தி பள்ளிக்கூடம் போகிறாள். அவளுடைய படிப்பைக் கெடுப்பானேன் என்று அழைத்து வரவில்லை லலிதா! மாமா எங்கே? அவரைப் பார்க்க வேண்டாமா?" என்றாள். "பார்க்காமல் என்ன? பார்க்க வேண்டியதுதான். அப்பா சற்று முன்னால்தான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீ வந்தது அவருக்குச் சந்தோஷமாயிருக்கும். அப்பாவுக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றித் தெரியுமல்லவா, சீதா?..."
"தேவபட்டணத்துக்கு நேற்றைக்கு வந்ததும் தெரிந்தது. உன் அகத்துக்காரர் அம்மாஞ்சியிடம் சொன்னாராம். அதைக் கேட்டதும் மறுவண்டியில் புறப்பட்டோ ம். உன் அகத்துக்காரர் கூட ஒரு நாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று சொன்னாராம்..." "சொன்னாராம் என்கிறாயே? உன்னிடம் சொல்லவில்லையா? அவருக்குப் பொம்மனாட்டிகளைக் கண்டாலே ரொம்ப சங்கோசம். ஆனால் உன்னிடம் அவருக்கு ரொம்ப மரியாதை. நீ தேசத்துக்காக ஜெயிலுக்குப் போயிருக்கிறாய் என்று கேட்டதுமுதல் அடிக்கடி உன்னைப்பற்றி விசாரித்துக் கொண்டிருப்பார். இப்போது நீயே வந்து விட்டாய். சீதா! உன் அகத்துக்காரர் சீமையிலிருந்து திரும்பி வரும் வரையில் தேவபட்டணத்தில் எங்கள் வீட்டிலேயே நீ தங்கியிருக்க வேண்டும். வேறு எந்த இடத்துக்கும் போகக்கூடாது. தெரிகிறதா?" "அதைப் பற்றி இப்போது என்ன அவசரம், லலிதா! பிறகு சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். இப்போது மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!" என்றாள் சீதா. இந்தச் சந்தர்ப்பத்தில் சரஸ்வதி அம்மாள் அங்கு வரவே, "அம்மா! இதோ சீதா அத்தங்கா வந்திருக்கிறாள், பார்த்தாயா?" என்றாள் லலிதா. "நமஸ்காரம், மாமி! சௌக்கியமா?" என்று சீதா பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தாள். சரஸ்வதி அம்மாளோ முகத்தைச் சுளுக்கிக்கொண்டு, "வந்தாயாடி, அம்மா! வா! என்னவெல்லாமோ கேள்விப்பட்டேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாயில்லை. ஏதோ இந்த மட்டும் வந்து சேர்ந்தாயே? மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரியுமோ, இல்லையோ? யாராயிருந்தாலும் சரி; அவரிடம் அதிகமாக நச்சு பிச்சு என்று பேசக் கூடாது.
டாக்டரின் உத்தரவு! புது மனுஷாளைக் கண்டால் அவருக்குத் தலைகால் தெரியாமல் போய்விடும் லலிதா! நான் சொல்லுகிறது தெரிகிறதோ, இல்லையோ? அப்பா அதிகமாகப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்" என்றாள். லலிதாவின் மனம் வேதனை அடைந்தது. அவள் கோபமாக அம்மாவைப் பார்த்தாள். அப்போது சீதா, "மாமி! நான் மாமாவிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. உடம்பு சரியில்லாதவர்களோடு அதிகமாகப் பேசக் கூடாதென்று அவ்வளவு தூரம் தெரியாதா எனக்கு?" என்றாள். "உனக்குத் தெரியாமலிருக்குமா, அம்மா! நீ மெட்ராஸ், பம்பாய், டில்லி, கல்கத்தா எல்லாப் பட்டணங் களிலும் இருந்தவள். நான் இந்தப் பட்டிக்காட்டிலேயே விழுந்து கிடக்கிறவள். ஏதாவது கொஞ்சம் உடம்பு அதிகம் என்றால் என் தலையிலேதானே விடிகிறது! வயது வேறே ஆகிவிட்டது, முன்னேயெல்லாம்போல் சக்கரமாகச் சுற்றிக் காரியம் செய்ய முடிகிறதா? யாராவது இரண்டு பேர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று பயமாயிருக்கிறது. முன்னைப்போல் சமைக்கப் பரிசாரகனாவது இருக்கிறானா? அதுவும் இல்லை. உன் மாமாவுக்குக் கடன் உடன் அதிகமாகப் போய் விட்டது. பரிசாரகன் வைத்துக் கொள்ளக் கட்டவில்லை!...." "போதும், அம்மா! உன்னுடைய பஞ்சப் பாட்டை அப்புறம் பாடலாம். அத்தங்கா வந்ததும் வராததுமாக இதெல்லாம் எதற்காகச் சொல்லுகிறாய்? எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை! நீ வா, சீதா! மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!" என்று சொல்லிச் சீதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் லலிதா.
கிட்டாவய்யர் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் சூரியாவும் சுண்டுவும் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். லலிதாவும் சீதாவும் அறைக்குள் வந்ததும் அவர்கள் எழுந்தார்கள். "அத்தங்கா! அப்பாவுக்கு நான் வந்ததில்கூட அவ்வளவு சந்தோஷமில்லை. உன்னை அழைத்து வந்ததிலேதான் திருப்தி. உன் கதையையெல்லாம் அப்பாவுக்குக் கேட்க வேண்டுமாம்!" என்று சூரியா சொல்லிவிட்டுச் சுண்டுவையும் அழைத்துக் கொண்டு போனான். மாமாவுக்குச் சீதா நமஸ்காரம் செய்தாள். அவர் உட்காரச் சொன்னதும் உட்கார்ந்தாள். கிட்டாவய்யரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, சீதாவின் தலையை அன்புடன் தொட்டு, "மகராஜியாக இரு!" என்றார். மாமாவை அந்தப் பலவீனமான நிலையில் உடம்பில் காயக்கட்டுகளுடன் பார்த்ததினாலும், "மகராஜியா இரு!" என்ற அவருடைய ஆசீர்வாதம் வேறு பல நினைவுகளை உண்டு பண்ணியதனாலும் சீதாவின் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது. அந்தக் கண்ணீரின் காரணத்தைக் கிட்டாவய்யர் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார். தம் மனையாள் சீதாவை வரவேற்றுச் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவருடைய காதிலும் விழுந்து அவருக்கு வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தன. எனவே அவர் உணர்ச்சி ததும்பிய குரலில், "நீ வருத்தப்படாதே, சீதா! உன் மாமியின் சுபாவந்தான் தெரியுமே! உலகத்தில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் உன் மாமி மட்டும் கொஞ்சங்கூட மாறாமல் அப்படியேயிருக்கிறாள்!"
சீதா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அதற்காக நான் வருத்தப்படவில்லை, மாமா! உங்களை இப்படிப் பார்த்ததும் எனக்குத் துக்கமாயிருக்கிறது. மாமி சொன்னதில் ஒரு குற்றமும் கிடையாது. நான் பிறந்த வேளை அப்படி!" என்றாள். "நீ பிறந்த வேளைக்கு என்ன வந்தது? திவ்யமான நாள் நட்சத்திரத்தில் நீ பிறந்தவள். உனக்கு மலைபோல் வரும் கஷ்டங்கள் எல்லாம் பனிப்போல் நீங்கிவிடும். கொஞ்ச நாளில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி நீ சௌக்கியமாக இருப்பாய்" என்றார் கிட்டாவய்யர். "தங்களுடைய ஆசீர்வாதத்தினால் அப்படியே ஆகட்டும். மாமா! முதலில் தங்களுடைய உடம்பு சௌக்கியமாக வேண்டும். உங்களை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் துடித்துப் போய்விட்டேன். ஒரு ஈ காக்காய்க்குக் கூடத் தீங்கு எண்ணாத தங்களை அடித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சண்டாளப் பாபிகளாய் இருக்கவேண்டும்?" என்றாள் சீதா. "தலைவிதி, அம்மா! தலைவிதி! அதற்கு அவர்களைத் திட்டி என்ன பிரயோஜனம்? சீதா! ஒரு விஷயத்தைக் கேள், திருடர்கள் நான் வந்த வண்டியை வழிமறித்து அடித்தபோது ஒரு அடி படார் என்று மண்டையில் விழுந்தது என் கதி கலங்கியது.
அந்த நிமிஷமே உயிர் போய்விடும் போலத் தோன்றியது. அப்போது நான் என்ன நினைத்தேன் தெரியுமா? என் மனக்கண் முன்னால் யார் வந்தது தெரியுமா? உன் தாயார் ராஜம்மாள்தான் வந்தாள், அவள் எங்கேயோ வானவெளியில் நின்று தன் மெலிந்த கரங்களை நீட்டி, "அண்ணா! வாருங்கள்!' என்று என்னை அழைப்பது போலத் தோன்றியது. அப்போது நான், "அடாடா! குழந்தை சீதாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டோ மே? சீதா சௌக்கியமா என்று இவள் கேட்டால் பதில் என்ன சொல்வது?" என்று நினைத்துக்கொண்டேன். இவ்வளவும் அடிபட்டுக் கலங்கிய ஒரு நிமிஷ நேரத்தில் என் மனத்தில் நடந்தது?" என்றார் கிட்டாவய்யர். "மாமா! இதிலிருந்து என் பேரிலும் அம்மா பேரிலும் உங்களுக்கு எவ்வளவு அன்பு என்று தெரிகிறது. ஆனால் நீங்கள் அதிகமாகப் பேசவேண்டாம். டாக்டரின் உத்தரவுப்படி நடக்க வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "ஆமாம்; ஒரே மூச்சில் அதிகமாகப் பேசக்கூடாதுதான். உன்னைப் பார்க்கவேண்டும் என்றும் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்றும் எவ்வளவோ ஆவலாயிருந்தேன். உன்னைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீயே என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டாய். மற்றதெல்லாம் இராத்திரி சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். நீ இப்போது போய்க் குளித்துவிட்டுச் சாப்பிடு அம்மா!" என்று கிட்டாவய்யர் அருமையுடன் கூறினார்.