திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

விக்கிமூலம் இலிருந்து
மோசே இறுதி ஆசி வழங்கலும், அவரது இறப்பும். ஓவியர்: லூக்கா சிஞ்ஞொரெல்லி. ஆண்டு: 1481-1482. சிஸ்டைன் கோவில், வத்திக்கான் நகர்.

இணைச் சட்டம் (Deuteronomy)[தொகு]

அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

அதிகாரம் 33[தொகு]

இஸ்ரயேலின் குலங்களுக்கு மோசேயின் ஆசிகள்[தொகு]


1 கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:
2 ஆண்டவர் சீனாயினின்று வந்தார்; சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்; பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்; பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்; அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார்.
3 உண்மையாகவே, மக்களினங்களின் அன்பர் அவர்; அவர்தம் புனிதர்கள் அவர் கையில் உள்ளனர். அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்; அனைவரும் அவரது கூற்றுகளை ஏற்றுக்கொள்வர்.
4 மோசே எங்களுக்குத் திருச்சட்டத்தைக் கட்டளையாக வழங்கினார்; அதுவே யாக்கோபினது திருக்கூட்டத்தின் உடைமை.
5 மக்கள் தலைவர்களும் இஸ்ரயேலின் குலங்களும் ஒன்று திரட்டப்பட்ட பொழுது அவர் எசுரூன்மீது அரசனாய் இருந்தார்.
6 ரூபன் வாழட்டும்; அவன் மடிந்து போகாதிருக்கட்டும்; அவன்தன் புதல்வர் குறையாதிருக்கட்டும்!
7 யூதாவுக்கான ஆசி இதுவே. அவர் கூறியது: ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்; அவனை அவனுடைய மக்களிடம் கொண்டு வாரும்; அவனது கைகள் அவனுக்குப் போதுமானது ஆகட்டும். அவனுக்குத் துணை நின்று அவனுடைய பகைவரிடமிருந்து காத்தருளும்.
8 லேவியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம் என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு மெரிபாவின் நீரூற்றருகில் வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம் இருக்கட்டும். [*]
9 அவனிடமே அவற்றைக் கொடும்; ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி 'நான் உங்களைப் பாரேன்' என்றவன்; தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்; தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்; உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்;
10 யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ரயேலுக்கு உம் திருச்சட்டத்தையும் கற்றுத்தருபவன்; உமது முன்னிலையில் தூபம் காட்டுபவன்; உமது பீடத்தில் எரிபலிகளைச் செலுத்துபவன்.
11 ஆண்டவரே, அவனது ஆற்றலை ஆசியால் நிரப்பும்; அவனுடைய கரங்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும்; அவனுக்கு எதிராக எழும்புவோரை அவர்களின் இடுப்பு ஒடிந்துவிழும் வண்ணம் வதையும். அவனைப் பகைப்பவர் மீண்டும் எழாதவாறு செய்யும்.
12 பென்யமினைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அன்புக்கு உரியவன்; அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்; அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான்.
13 யோசேப்பைக் குறித்து அவர் கூறியது: அவனது நிலம் ஆண்டவரால் ஆசி பெற்றது; அது வானத்தின் செல்வத்தாலும் பனியாலும்,
14 ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும் கதிரவன் வழங்கும் கனிகளாலும் பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும்
15 பண்டைய மலைகளின் உயர் செல்வங்களாலும், என்றுமுள குன்றுகளின் அரும் பொருள்களாலும் ஆசிபெற்றது.
16 நிலம் தரும் பெரும் விளைச்சலும் அதன் நிறைவும், முட்புதரில் வீற்றிருந்தவரின் அருளன்பும், எல்லா ஆசிகளும் யோசேப்பின் தலைமீதும் தன் சகோதரருள் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமீதும் தங்குவதாக!
17 அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது. அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை; அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான். அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும்.
18 செபுலோனைக் குறித்து அவர் கூறியது: செபுலோனே. நீ பயணம் செய்கையில் மகிழ்ந்திடு! இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும் போது மகிழ்ந்திடு!
19 அவர்கள் மக்களினங்களை மலைக்கு அழைத்துச் செல்வர்; அங்கு அவர்கள் ஏற்புடைய பலிகளைச் செலுத்துவர்; அவர்கள் கடலில் பலுகியிருப்பதும் மணலில் புதைந்திருப்பதுமான திரளான செல்வங்களை அனுபவிப்பர்.
20 காத்தைக் குறித்து அவர் கூறியது: காத்தைப் பெருகச் செய்பவர் போற்றி! போற்றி! காத்து சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் தலையையும் பீறிப் பிளந்திடுவான்.
21 அவன் தனக்கெனச் சிறந்த இடத்தைத் தேர்ந்து கொண்டான்; தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின் தலைவனாகி, அவன் ஆண்டவரின் நீதியை நிலை நிறுத்தினான்; ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து, அவர்தம் நீதிமுறையை நிலைநாட்டினான்.
22 தாணைக் குறித்து அவர் கூறியது: தாண் பாசானினின்று பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.
23 நப்தலியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அருளன்பால் நிறைவு பெற்றவன்; கலிலேயக் கடலையும் தென்திசையையும் உடைமையாக்கிக் கொள்வான்.
24 ஆசேரைக் குறித்து அவர் கூறியது: ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான்; தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான்; அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான்.
25 தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை; உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்.
26 எசுரூனின் இறைவன்போல் எவருமில்லை; அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.
27 என்றுமுள கடவுளே உனக்குப் புகலிடம்; என்றுமுள அவரது புயம் உனக்கு அடித்தளம்; 'பகைவரை உன் முன்னின்று விரட்டியடித்து, அவர்களை அழித்துவிடு' என்பார் அவர்.
28 அப்போது, இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழ்ந்திடும்; யாக்கோபின் உறைவிடம், தானியமும், இரசமும் மிகுந்த நிலத்தில் இருக்கும்; அவர்தம் மேகங்கள் பனி மழை பொழியும்.
29 இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்; ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக்குறுகுவர்! அவர்களின் தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய்.

குறிப்பு

[*] 33:8 = விப 17:7; 28:30; எண் 20:13.

அதிகாரம் 34[தொகு]

மோசேயின் இறப்பு[தொகு]


1 அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார்.
2 மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்;
3 மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார்.
4 அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: 'நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்'. [1]


5 எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.
6 மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.
7 மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை.
8 மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.
9 நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.
10 ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. [2]
11 ஏனெனில். எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார்.
12 இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.

குறிப்புகள்

[1] 34:4 = தொநூ 12:7; 26:3; 28:13.
[2] 34:10 = விப 33:11.


(இணைச் சட்டம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை