அலை ஓசை/பிரளயம்/நீர்மேற் குமிழி

விக்கிமூலம் இலிருந்து

ஆறாம் அத்தியாயம் நீர்மேற் குமிழி

கிட்டாவய்யர் மெலிந்து மலினமான குரலில், "சீதா! உன்னை ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருட்டி இத்தனை நேரம் வரையிலா குளத்தங்கரையில் உட்கார்ந்திருப்பது? முக்கியமான ஒரு விஷயம் பற்றி உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தேனே?" என்றார். "தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா! இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேதானே இருக்கப்போகிறேன்?" என்று சீதா சமாதானம் கூறத் தொடங்கினாள். "இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருக்கப் போகிறாய் என்பது சரிதான். ஆனால் நான் இருக்க வேண்டுமே உயிரோடு?" என்றார் கிட்டாவய்யர். "ஐயோ! மாமா! இப்படிப் பேசுகிறீர்களே! இந்தப் பாவியின் அதிர்ஷ்டமா இது? நான் அநாதை; திக்கில்லாதவள். நீங்களும் இவ்விதம் என்னிடம் கோபித்துக் கொண்டு பேசுவதாயிருந்தால்...." என்று கூறிக்கொண்டே சீதா கலகலவென்று கண்ணீரைப் பொழிந்தாள். "சீதா! நீ வருத்தப்படாதே! அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏதோ அபஸவ்யமாக வாயில் வந்து விட்டது. போனால் போகட்டும். ஆனாலும் நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடுமா என்ன? சாவைக் குறித்து எதற்காக நாம் பயப்பட வேண்டும்? என்றைக்காவது ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு எல்லோரும் போக வேண்டியதுதானே! 'நீர்மேற் குமிழி' என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? 'இன்றைக்கு இருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லையே!' என்று தாயுமான சுவாமிகள் அருளிச் செய்திருக்கிறார். இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டாம் நாள் ஆகிவிடுகிறது. பட்டினத்தடிகள் என்ன சொல்லியிருக்கிறார்? 'காலன் வருமுன்னே கண் பஞ்சடையுமுன்னே'...'

"மாமா! மாமா! என் பேரில் ஏதோ உங்களுக்குக் கோபம் போலிருக்கிறது. அதனாலேதான் இப்படிப் பேசுகிறீர்கள். கொஞ்சநாள் இங்கே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். உங்களைத் தவிர என்னிடம் அன்புள்ளவர்கள் இந்த உலகத்திலேயே யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு வந்தேன். நீங்களும் என்னை வெறுப்பதாகவே தெரிகிறது. நாளைக்கே நான் புறப்பட்டு விடுகிறேன்!" "சீதா! கொஞ்சம் பொறு! நான் சொல்வதைக் கேட்டுக்கொள்! உன் பேரில் எனக்கு யாதொரு கோபமும் இல்லை; என் பேரிலேதான் கோபம். கொஞ்சநாளாக நான் படுத்த படுக்கையாயிருக்கிறேன் அல்லவா? படுத்தபடியே யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில வருஷங்களாக நான் செய்த காரியங்கள் எல்லாம் தப்பு என்று தோன்றிக்கொண்டு வருகிறது. நம் நாட்டுப் பெரியவர்கள் வர்ணாசிரம தர்மம் என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் வர்ணத்தை மாத்திரம் நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம். சாதி ஆசாரத்தை அனுஷ்டிப்பதாகச் சொல்கிறோம். அதுவும் எப்படி? நமக்குச் சௌகரியமாயிருக்கும் வரையில்தான்! ஆனால் ஆசிரம தர்மத்தை எத்தனை பேர் அனுஷ்டிக்கிறார்கள்? மனிதர்களுக்கு வயது ஆகிவிட்டால் வானப் பிரஸ்த ஆசிர மத்தை மேற்கொள்ள வேண்டும். எனக்கு அந்த வயது முன்னமே ஆகிவிட்டது. பிள்ளைகள் தலையெடுத்து விட்டார்கள், பேரன் பேத்திகள் பிறந்து விட்டார்கள், இன்னமும் எதற்காக இந்தக் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டும்! அதனுடைய பலன் என்ன? இந்த ஊர்க்காரர்கள் சிலருடைய துர்ப்புத்தியைக் கேட்டுக் குடி படைகளின் விரோதத்தையெல்லாம் சம்பாதித்துக் கொண்டேன். என்னுடைய பாட்டனார் காலத்தி லிருந்து தலைமுறை தலைமுறையாக இந்தக் குடும்பத்துக்கு வந்த குடிபடைகள் இப்போது என்னிடம் வெட்டுப்பழி, குத்துப்பழியாகத் துவேஷம் கொண்டிருக்கிறார்கள்.

குடியிருந்த மனைக்கட்டுகளிலிருந்து அவர்களைத் துரத்தியடித்தேன். கோர்ட்டிலே கேஸ் போட்டு ஜயித்தேன், என்ன உபயோகம்? தலைமுறை தலைமுறையாக நம் குடும்பத்தை வாழ்த்திக் கொண்டிருந்தவர்கள் இன்று சபித்துக் கொண்டிருக் கிறார்கள். கடைசியாக இந்த ஆபத்து ஒன்று வந்து சேர்ந்தது. நம்முடைய மூதாதைகள் செய்த பூஜாபலத்தினால் இன்றுவரை உயிர் பிழைத்திருக்கிறேன். அங்கேயே என்னைக் கொன்று போட்டுவிடாமல் இந்த மட்டும் உயிரோடு விட்டார்களே! அந்தத் திருடர்கள் நன்றாயிருக்கட்டும்!" "மாமா! உங்களை அடித்த மகா பாவிகள் நன்றாயிருக்கவா? அவர்கள் நாசமாய்ப்போக வேண்டும். அவர்கள் கை அழுகிப் போக வேண்டும். யாரை வேண்டுமானாலும் நான் மன்னிக்கத் தயார், மாமா! உங்களை அடித்த பாவிகளை மட்டும் மன்னிக்க முடியாது." அவர்களை மன்னிப்பதற்கு நீ யார், அம்மா! அல்லது நான்தான் யார்? அவர்களைக் குற்றம் சொல்லுவதற்குத்தான் நாம் யார்? எய்தவனைவிட்டு அம்பை நோவதில் பயன் என்ன? எல்லா உயிர்களிலும் பகவான் குடிகொண்டிருக்கிறார் அடித்தவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். அடிப்பட்டவர்களிடத்திலும் அதே கடவுள்தான் இருக்கிறார். என்னை அடித்தவர்கள் மீது நான் கோபித்துக் கொண்டால், பகவானையே கோபித்துக் கொண்டதாகவல்லவா ஏற்படும்? உண்மையில் பகவான் என்னை அடித்தவர்களின் உருவத்தில் வந்து எனக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கிறார். 'வயது அறுபது ஆகப் போகிறதே! உனக்கு இன்னும் இந்த ஊரில் என்ன வேலை? போகிற கதிக்கு வழி தேடிக்கொள்ள வேண்டாமா? இனி மேலும் இந்தச் சம்சார பந்தத்தில் கிடந்து உழலப் போகிறாயா? புத்தி கெட்டவனே!' என்று பகவான் திருடனைப்போல வந்து எனக்கு உபதேசம் செய்திருக்கிறார்.

சீதா! எனக்கு இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் பிரியம் இல்லை. நல்ல வேளையாக நீ வந்த காரணத்தினால் சூரியாவும் வந்திருக்கிறான். அவனிடம் இந்தக் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளிக் கிளம்பிவிடப் போகிறேன். காசிக்குச் சென்று கங்கையில் ஸ்நானம் செய்ய வேணும். அப்புறம் ஹரித்வாரம், ரிஷிகேசம், பத்ரிநாத் முதலிய ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். கைலாசகிரிக்கே போக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பெரியவர் 'கைலாச யாத்திரை'யைப் பற்றி எழுதியிருந்த ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதைப் படித்து முதல் கைலையங்கிரியே எனக்குத் தியானமாயிருந்து வருகிறது". "மாமா! நீங்கள் அப்படி யாத்திரை கிளம்புவதாக இருந்தால் என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போகிறேன்!" என்று சீதா மகிழ்ச்சி ததும்பக் கூறினாள். வாழ்நாளைக் கழிப்பதற்கு ஒரு ஆனந்தமான மார்க்கம் கிடைத்துவிட்டதே என்று அவளுடைய உள்ளம் குதூகலித்தது. "ஆகட்டும், சீதா! உன்னோடு அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்திரை போகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், அதைக்காட்டிலும் எனக்குச் சந்தோஷமான காரியம் வேறொன்றும் இராது. அதற்காகத்தான் உன்னிடம் இதையெல்லாம் பற்றிச் சொன்னேன் ஆனால் நீயும் நானும் யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் உன்னுடைய வாழ்க்கையை நீ செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்!" என்றார் கிட்டாவய்யர். சீதா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தலை குனிந்தாள்.

"நான் எதைப்பற்றிச் சொல்கிறேன் என்பதை நீ தெரிந்து கொண்டாய்; அதனாலேதான் மௌனமாயிருக்கிறாய். உனக்கும் உன் புருஷனுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்ததிலிருந்து எனக்கு ஏற்பட்டிருக்கும் மன வேதனையைச் சொல்லி முடியாது. இந்த ஊரிலே உனக்குக் கலியாணம் நிச்சயமாகி நடந்தது. லலிதாவைப் பார்க்க வந்தவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொன்னான். உன் அம்மாமிக்கு வயிறு எரிந்தது, எத்தனையோ பேர் சூயைப்பட்டார்கள். ஆனால் நான் பரிபூரணமாகச் சந்தோஷமடைந்து லலிதாவுடன் ஒரே பந்தலில் உனக்குக் கலியாணம் செய்து கொடுத்தேன். இப்படிப்பட்ட பாக்கியம் உனக்குக் கிடைத்ததே என்று எல்லாத் தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தினேன். அது இப்படி ஆக வேண்டுமா? உன் தாயார்தான் கடைசி வரையில் கஷ்டப்பட்டு வேதனைப்பட்டுச் செத்துப் போனாள். நீயும் அப்படி இருக்க வேணுமா? ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொண்ட புருஷனுடன் நீ சந்தோஷமாயிருக்கக்கூடாதா? சொல், சீதா!" "தலைவிதி வேறு விதமாயிருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும், மாமா? நீங்கள் எவ்வளவோ சந்தோஷத்துடன் கலியாணம் செய்து வைத்தீர்கள். நானும் பிரியப்பட்டுத்தான் கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் அவருடைய குணம் இப்படி யிருக்கும் என்று யார் கண்டது?" "அவனுடைய குணத்தைப்பற்றிச் சொல்கிறாய். உன்னுடைய குணம் எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா? பிறத்தியாரிடம் உள்ள குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சுலபம்.நம்மிடமுள்ள குற்றத்தை உணர்வது கஷ்டம்.

'இரண்டு கையையும் கொட்டினால்தான் சத்தம்' என்று கேட்டதில்லையா? புருஷன் எவ்வளவுதான் குணங்கெட்டவனா யிருந்தாலும் ஸ்திரீ குணமுடையவளாயிருந்தால் கடைசியில் புருஷனும் சீர்திருந்தி விடுவான், சீர்திருத்த முடியும். சீதா! நீ படித்தவள்; நாலும் அறிந்தவள்; நீ தேசத்துக்குச் செய்த சேவையைப் பற்றிச் சூரியா புகழ்ந்து சொன்னான். அதையெல்லாம் பற்றி எனக்குச் சந்தோஷந்தான். ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள். இந்தியா தேசம் விடுதலை அடைய வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் பாடுபடுகிறீர்கள். இந்த நாட்டின் முக்கியமான பெருமை என்ன தெரியுமா? உலகத்தில் எத்தனையோ தேசங்கள் சில காலம் மிகவும் மேன்மையோடு இருக்கின்றன; பிறகு அடியோடு அழிந்து போகின்றன. ஆனால் நம்முடைய இந்தியா தேசம் பதினாயிரம் வருஷமாக அழிந்து போகாமலும் மேன்மை குன்றாமலும் இருந்து வருகிறது. மகாத்மா காந்தியைப் போன்ற உத்தம புருஷர்கள் இந்தப் பாரத தேசத்தில் இன்னும் அவதரிக்கிறார்கள். ஏன் தெரியுமா? இந்தத் தேசத்துப் பெண்மணிகளின் மகிமையினால்தான். ஆதிகாலத்திலிருந்து இந்தத் தேசத்தில் புருஷன் எவ்வளவு மூர்க்கனாயும் குணக்கேடனாயு மிருந்தாலும் அவனோடு ஒத்து வாழ்க்கை நடத்துகிறது என்று ஸ்திரீகள் இருந்து வந்தார்கள். அவர்களுடைய புண்ணியந்தான் இந்தப் பாரத தேசத்தைக் காப்பாற்றி வருகிறது. காந்தி மகாத்மா தம்முடைய தர்மபத்தினி கஸ்தூரிபாயைப் பற்றி எழுதியிருப்பதை நீ படித்திருப்பாய். மகாத்மா காரணமின்றிக் கஸ்தூரிபாயைக் கடிந்து கொண்டபோது அந்த மாதரசி எவ்வளவு பொறுமையாக நடந்து, கணவரே பின்னால் பச்சாதாபப் படும்படியாகச் செய்திருக்கிறாள்?

அவ்வளவு தூரம் போக வேண்டாம். உன்னுடைய மாமியையே எடுத்துக்கொள். ஓயாமல் அவள் என்னிடம் சண்டை பிடிக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் காரியாம்சத்தில் என் விருப்பத்தை மீறி அவள் ஏதாவது செய்வதுண்டா? எத்தனையோ தடவை நான் அவளை ரொம்பக் கோபித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவள் இந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறேன் என்று எப்போதாவது சொன்னதுண்டா?" "மாமா! கஸ்தூரிபாய் தெய்வாமிசம் பொருந்தியவர். மாமி மிகவும் பாக்கியசாலி; உங்களைப் பதியாகப் பெற்றார். ஆனால் நானோ எல்லாவிதத்திலும் துர்பாக்கியம் செய்தவள். கல்கத்தாவில் அலிப்பூர் ஜெயிலில் நான் இருந்த காலத்தில் ஒரு வருஷம் இவர் கல்கத்தாவில் இருந்திருக்கிறார். நான் சிறையில் இருப்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவையாவது அவர் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படியிருந்த போதிலும் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் அவரைப் போய்ப் பார்த்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்று எண்ணியிருந்தேன், ஆனால் என்ன ஆயிற்று? நான் விடுதலையாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாலேதான் அவர் சீமைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கல்கத்தாவில் அவர் நடத்திய வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு எனக்கு அடியோடு புளித்துப் போய்விட்டது. இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ்வது இயலாத காரியம் என்று தீர்மானித்து விட்டேன்!"

"அப்படிச் சொல்லாதே, சீதா! கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரித்ததே மெய் என்று ஒரு பழமொழி உண்டு. நீ இல்லாதபோது நீ கண்ணால் பார்க்காத விஷயங்களைப் பற்றி யாரோ சொன்னதை வைத்துக்கொண்டு ஒன்றையும் முடிவு கட்டக் கூடாது. உன் பேரில் ராகவனுக்குக் கோபம் ஏற்படவும் காரணம் இருக்கிறது. சூரியாவுக்கு நீ வீட்டில் இடம் கொடுத்ததினாலும் பிற்பாடு ஜெயிலுக்குப் போனதினாலும் ராகவனுக்கு உத்தியோகம் போய்விட்டது. உத்தியோகம் என்றால் சாதாரண உத்தியோகமா? மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள உத்தியோகம். உன்னுடைய காரியத்தினால் அவ்வளவு பெரிய சர்க்கார் உத்தியோகம் போச்சு என்றால் புருஷனுக்குக் கோபமாயிராதா?" என்றார் கிட்டாவய்யர். "அந்த வேலை போனதினால் ஒன்றும் மோசமில்லை, மாமா! அதைவிடப் பெரிய சம்பளத்துடன் அவருக்குப் பாங்கி வேலை கிடைத்திருக்கிறது" என்றாள் சீதா. "அது எப்படியிருந்தாலும் சரி, ராகவன் சீமையிலிருந்து வந்தவுடன் அவனை நான் பார்க்கப் போகிறேன், நீயும் என்னுடன் வரவேண்டும். உங்கள் இரண்டு பேருக்கும் மத்தியில் உள்ள தடங்கல்களையெல்லாம் போக்கி மறுபடியும் உங்களைக் குடியும் குடித்தனமுமாகப் பார்த்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். மறு உலகத்தில் உன் தாயாரின் ஆத்மாவும் சாந்தி அடையும். இருக்கட்டும், சீதா! உன் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் இல்லையா?" என்று கிட்டாவய்யர் கேட்டார்.

"மாமா! எனக்கு அப்பாவைப் பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. அது ஒரு ஊகமான சந்தேகந்தான். உங்களிடம் சொல்லக்கூட என் மனம் தயங்குகிறது. நாக்குக் கூசுகிறது." "என்னிடம் உனக்கு என்ன கூச்சம். அம்மா! என்ன விஷயமிருந்தாலும் தயக்கமில்லாமல் சொல்லு!" "அப்பா இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டதாக எனக்குச் சந்தேகம், மாமா!" "சிவசிவ சிவா! கேட்பதற்கே கர்ண கடூரமாயிருக்கிறதே!- எதனால் உனக்கு இப்பேர்ப்பட்ட சந்தேகம் உண்டாயிற்று சீதா?" "நானும் அம்மாவும் பம்பாயில் இருந்தபோது, ஒரு ஸ்திரீ வந்து எனக்காக ரத்தின ஹாரமும் பணமும் கொடுத்துவிட்டுப் போனது ஞாபகம் இருக்கிறதல்லவா? அம்மா உங்களிடம் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாளே?" "ஞாபகம் இருக்கிறது. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" "அந்த ஸ்திரீயை ஒரு சமயம் நான் டில்லியில் பார்த்தேன். அவளுடன் தாடி வளர்ந்த சாயபு ஒருவரையும் கண்டேன். என் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் உதித்தது. பிறகு நான் டில்லியிலிருந்து கல்கத்தாவுக்குப் போகும் மார்க்கத்தில் ஆக்ராவில் ஒரு பெரிய ஆபத்து எனக்கு வந்தது. ரயிலில் ஒரு பெட்டியை எடுத்ததாகத் திருட்டுக் குற்றம் சாட்டி என்னைக் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

திக்குத்திசை புரியாமல் நான் திகைத்து நின்ற சமயத்தில் ஒரு சாயபு கோர்ட்டுக்கு வந்து அந்தப் பெட்டியை அவர் திருடியதாக ஒப்புக் கொண்டார். அதற்காகத் தண்டனையும் அடைந்தார். எனக்காக அப்பேர்ப்பட்ட தியாகத்தைச் செய்தவர் யாராயிருக்கும் என்று கல்கத்தா சிறையில் வசித்தபோது யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அப்பாவாக இருக்கலாமென்று தோன்றியது. அப்புறம் யோசிக்க யோசிக்க அவர்தான் என்று உறுதி பெற்றேன்." "பகவானே! இப்படியும் உண்டா? நீ சொல்வது ஏதோ கதை மாதிரி இருக்கிறதே தவிர, உண்மையாகவே தோன்ற வில்லை. துரைசாமிக்கு இப்படிப் புத்தி கெட்டுப்போகும் என்று யாரால் நம்ப முடியும்? ஏதோ ஸ்திரீ விஷயமான சபலம் இருந்தாலும், கொஞ்ச நாளைக் கெல்லாம் விட்டுத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அதற்காக மதம்விட்டுமதம் மாறுவார்களா? அதிலும் எப்பேர்ப்பட்ட மதம்? கோயிலை இடிக்க வேண்டும்; விக்கிரகத்தை உடைக்க வேண்டும் என்று சொல்லும் மதம்! மத சம்பந்தமான விஷயங்களில் உன் புருஷன் எப்படி அம்மா!" "அவருக்கு ஹிந்து மதத்தில் ரொம்ப பற்று உண்டு. வேறு மதங்களைப் பிடிப்பதேயில்லை. அதிலும் முஸ்லிம் மதம் என்றால் அவருக்கு ரொம்பக் கோபம் வரும்.

சர்க்கார் உத்தியோகம் பார்த்தபோது அவருக்குக் கீழேயிருந்த துருக்க உத்தியோகஸ்தர்களை அவருக்கு மேலே தூக்கிப் போட்டு விட்டார்களாம். அதனால் அந்த மதத்தின் பேரிலேயே அவருக்கு அசாத்தியமான கோபம்" என்றாள் சீதா. "பிற மதத்தின் பேரில் கோபத்துக்குக் காரணம் அழகாய்த்தானிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஹிந்து மதத்தில் பற்று உள்ள வரையில் விசேஷந்தான். எப்படியாவது நான் திருத்தி விடுகிறேன் பார், சீதா! கூடிய சீக்கிரம் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் முடிந்துவிடும்" என்றார் கிட்டாவய்யர். "மாமா! என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்றா சொல்கிறீர்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லையே? காரணமில்லாமல் அடிக்கடி மனதில் பீதி உண்டாகிறது. அப்போதெல்லாம் மார்புப் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அடிவயிற்றை ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. இராத்திரியில் நிம்மதியான தூக்கம் கிடையாது. மாமா! பயங்கரமான கனவுகள் காண்கிறேன்!" என்றாள் சீதா. அவளுடைய உடம்பு நடுங்கிற்று; கண்ணீர் பெருகிற்று. இதுவரை படுத்துக்கொண்டும் சாய்ந்து கொண்டும் பேசி வந்த கிட்டாவய்யர் எழுந்து உட்கார்ந்தார். சீதாவின் தலையைத் தொட்டுக்கொண்டு, "குழந்தாய்! அதெல்லாம் வீண் பிரமை. ஏதோ பழைய கஷ்டங்களை அநுபவித்த ஞாபகத்தினால் உன் மனம் கொஞ்சம் பேதலித்திருக்கிறது. அப்படிப் பீதி உண்டாகும் போதெல்லாம் ராமராம என்று தாரக நாமத்தைச் சொல்லு; பீதி மறைந்துவிடும். மேலும் நான்தான் உன்னுடன் வரப் போகிறேனே! உனக்கு ஒரு கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றார் கிட்டாவய்யர். இந்தச் சமயத்தில் லலிதா அந்த அறைக்குள்ளே வந்தாள். கிட்டாவய்யர் கடைசியில் கூறிய மொழிகளைக் கேட்டுவிட்டு "அப்பா! இது என்ன? தேவபட்டணத்துக்கு என்னுடன் வரப்போவதாகச் சொன்னீர்கள். அரைமணியில் மறந்துவிட்டு இப்போது சீதாவுடன் புறப்பட ஆயத்தம் செய்கிறீர்களே! இந்த பம்பாய் அத்தங்காளிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி கட்டாயம் இருக்கிறது" என்றாள்.