அலை ஓசை/புயல்/பகற் கனவு
Appearance
பகற் கனவு
ஒரு நிமிஷ நேரம் இந்தப் பூமண்டலம் மட்டுமின்றி ஈரேழு பதினாலு உலகங்களும் ஸ்தம்பித்து நின்றன. சப்தமயமான பிரபஞ்சத்தில் மிக மெல்லிய இலை அசையும் சத்தம் கூடக் கேளாத நிசப்தம் குடிகொண்டிருந்தது. வாயுபகவானும் தன்னுடைய இயற்கையான சலனத்தை மறந்து நின்றுவிட்டதாகத் தோன்றியது. பிறகு எங்கேயோ அதலபாதாளத்திலிருந்து பேசுவது போலச் சௌந்தரராகவனுடைய குரல் கேட்டது. "நான் காண்பது உண்மையா? அல்லது கனவு காண்கிறேனோ?" என்றான். "தாஜ்மகாலைச் சொல்கிறீர்களா? ஆம்; அதைக் 'காதல் கனவு' என்றும் 'பளிங்குக்கல் சொப்பனம்' என்றும் கவிகள் வர்ணித்திருக்கிறார்கள். ஆனாலும் இங்கு நின்று பார்க்கும் போது தாஜ்மகால் என்பது வெறும் கனவல்லவென்றும் நிஜக் கட்டிடந்தான் என்றும் தோன்றுகிறது!" இந்தப் பதிலைத் தாரிணி கூறினாள். இடையில் தாரிணியின் தோழி நிருபமா தலையிட்டு, "இவர் மிஸ்டர் ராகவன் அல்லவா? என்ன அதிசயமான சந்திப்பு?" என்றாள். "ஆம்; அந்தத் துரதிர்ஷ்டசாலி நான் தான்!" என்றான் ராகவன் நிருபமாவைப் பார்த்து. "ஆகா! இவ்வளவு அடக்கம் உங்களுக்கு எப்போது வந்தது? உங்கள் பின்னால் நிற்கும் பெண் யார்?" என்று நிருபமா கேட்கவும் ராகவனுடைய முகம் கொஞ்சம் சுருங்கியது. "அவரிடம் அதைக் கேட்பானேன்? உன்னால் ஊகிக்க முடியவில்லையா, நிருபமா? அவருடைய அருமை மனைவியாகத் தான் இருக்க வேண்டும்!" என்று தாரிணி கூறினாள். "இது உண்மைதானா?" என்று நிருபமா பிடிவாதமாகக் கேட்டாள். "உண்மைதான்!" என்று ராகவன் மென்று விழுங்கினான்.
"ஹா ஹா! எவ்வளவு அழகான பெண்! இப்படிப்பட்டவளைக் கலியாணம் செய்து கொண்டும் உம்மை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்கிறீரே! நல்ல வேடிக்கை இது" என்று கூறி நகைத்துவிட்டு, "அதோ பின்னால் வருகிற இளைஞர் யார்?" என்று கேட்டாள் நிருபமா. "என்னுடைய மனைவியின் பந்து" என்று ராகவன் முணுமுணுத்தான். "எனக்குக் கூடத் தெரிந்த முகமாய்த் தோன்றுகிறது. சமீபத்தில் எங்கேயோ பார்த்திருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இந்தப் பையனை நீ எப்படிப் பார்த்திருக்க முடியும்? வேறு யாரையோ பார்த்துவிட்டுத் தவறாகச் சொல்கிறாய்!" என்றான் சௌந்தரராகவன். இதற்குள் சூரியா கொஞ்சம் முன்னால் வந்து, "இவர் சொல்வது பிசகில்லை, ஹரிபுரா காங்கிரஸில் இவரை நான் பார்த்தேன்" என்று சொல்லிவிட்டு, தாரிணியை நோக்கி, "நீங்கள் சோஷலிஸ்ட் கட்சிக் கூட்டத்துக்கு வந்திருந்தீர்கள் அல்லவா?" என்றான். ஹரிபுரா காங்கிரஸ் என்றதும் எட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்த கராச்சி காங்கிரஸ் ராகவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. கராச்சி விமானக்கூடமும் அங்கே முதன் முதலில் தான் தாரிணியைச் சந்தித்த சந்தர்ப்பமும் நினைவுக்கு வந்தன. இதற்கிடையில் தாரிணியின் மதுரமான குரல், "ஆம்; சோஷலிஸ்ட் கூட்டத்துக்கு நான் வந்திருந்தேன். அங்கே நீங்கள் பிரமாதமான பிரசங்கம் ஒன்று செய்தீர்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!" என்று கூறியது கனவிலே கேட்பது போல் ராகவன் காதில் விழுந்தது.
சற்று அவன் நிதானித்துத் தாரிணி சூரியாவைப் பற்றித்தான் அவ்விதம் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டான். தன்னுடைய எழுத்துத் திறமையைக் குறித்துத் தாரிணி ஒரு சமயம் பாராட்டிப் பேசியது அவனுக்கு நினைவு வந்தது."ஓகோ! சூரியா அவ்வளவு பெரிய அதிகப்பிரசங்கி என்று எனக்குத் தெரியாதே?" என்றான்."அதிகப்பிரசங்கம் ஒன்றும் இவர் செய்யவில்லை.சுருக்கமாகத் தான் பேசினார்; பேசிய வரையில் அற்புதமாய்ப் பேசினார்" என்றாள் தாரிணி."ஏழை பணக்காரன் எல்லாம் ஒன்றாகி விடவேண்டும்; சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்; சுதேச ராஜாக்களை ஒழித்து விட வேண்டும் என்றெல்லாம் வெளுத்துக் கட்டினானாக்கும்!இப்படியெல்லாம் தீவிரமாகப் பேசுவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை.யார் வேணுமானாலும் இப்படி தடபுடலாய்ப் பேசலாம்!" என்றார் ராகவன். நிருபமா மறுபடியும் குறுக்கிட்டு, "தயவு செய்து கொஞ்சம் உங்கள் விவாதத்தை நிறுத்தி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுங்கள். என்னுடைய கணவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். இவர்தான் மிஸ்டர் வேணி பிரசாத் பி.ஏ.,எல்.எல்.பி.; இந்த ஊரில் பிரபல வக்கீல்; ஆனால் பிராக்டிஸ் மட்டும் கிடையாது! இப்போதைக்கு இவருடைய மனைவியின் சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது தான் இவருக்கு முக்கிய வேலை. தாரிணி எங்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். நீங்களும் வந்து தங்கினால் இவருக்கு மிக்க சந்தோஷமாயிருக்கும். எங்களால் முடிந்த சௌகரியம் செய்து கொடுப்போம். ஆக்ராவில் எத்தனை நாள் தங்கியிருப்பதாக உங்களுடைய உத்தேசம்?" என்று சௌந்தரராகவனைப் பார்த்து நிருபமா கேட்டாள்.
"இன்றைக்கும் நாளைக்கும்தான்; தங்களுடைய அன்பார்ந்த அழைப்புக்காக வந்தனம். ஆனால் இன்னொரு சமயம் வருகிறோம். பொய் சொல்லுகிறவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க எனக்கு இஷ்டமில்லை." "அது என்ன? யார் பொய் சொன்னது?" என்று நிருபமா கேட்டாள். "உங்களுடைய தோழிதான், நீங்களே கேளுங்கள்; இவள் இறந்து போய்விட்டதாகக் கடிதம் எழுதியது உண்டா இல்லையா என்று?" தாரிணி புன்னகை புரிந்து, "நான் இறந்து போய் விட்டதாக நானே எப்படி எழுதியிருக்க முடியும்?" என்றாள். "நீ எழுதாவிட்டால் வேறு யாரையோ கொண்டு எழுதச் சொல்லியிருக்கிறாய்!" "நான் இறந்து போனது என்னமோ உண்மையான செய்திதான்!" "அப்படியானால் இப்போது இங்கே எப்படி இருக்கிறாய்?" "இறந்து போனவள் மீண்டும் பிழைத்தெழுந்தேன்." "எதற்காக?" என்று ராகவன் கடுமையாகக் கேட்டான். "இறந்து போன பிறகு தங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைப் பற்றி நினைவு வந்தது. அதை நினைத்து நினைத்து நீங்கள் இராத் தூக்கம் இல்லாமல் தவிப்பீர்களே என்று எண்ணி மறுபடியும் பிழைத்து எழுந்து வந்தேன்."
"பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும். நீ ஒரே அண்டப் புளுகாய்ப் புளுகுகிறாய். அன்றைக்கு டில்லி ஸ்டேஷனில் பார்த்த போது, 'நான் தாரிணி இல்லை' என்று சொன்னாயே? அந்தப் பொய் எதற்காகச் சொன்னாய்?" "அப்படி நான் சொல்லவில்லையே? 'பழைய தாரிணி நான் இல்லை'யென்று தான் சொன்னேன். மேலே சொல்வதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது." "ஆகா! முன்னைப் போலவே எதற்கும் காரணம் சொல்லிச் சமாளித்துக் கொள்கிறாய்" என்றான் ராகவன். "நான் எல்லா விஷயங்களிலும் முன்னைப் போலவேதான் மாறாமல் இருக்கிறேன். மற்றவர்களும் அப்படியிருந்தால் இந்த மாதிரி பேச்சுக்கே இடமிராது போனால் போகட்டும். உங்களை மறுபடியும் எங்கே சந்திப்பது? பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா!" "அதற்கு அவசரம் ஒன்றுமில்லை; மெதுவாய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் உங்களை மறுபடியும் நான் சந்திக்க வேண்டும், தாஜ்மகால் பார்த்தாகிவிட்டதா?" "சாயங்காலம் மஞ்சள் வெளியில் பார்த்துவிட்டு இரவு பூரண சந்திரனுடைய நிலவிலும் பார்க்கலாம் என்று உத்தேசம்." "நாங்களும் அந்த நேரத்திற்குத்தான் வருவதாக இருக்கிறோம். பாக்கி விஷயம் அங்கே பேசிக் கொள்ளலாம்." "இதற்குள் இரண்டு கோஷ்டியும் பிரிந்து வெவ்வேறு வழி போக வேண்டிய இடம் வந்தது; விடை பெற்றுக் கொண்டு பிரிந்தார்கள்.
தாரிணி முதலியவர்கள் போனதும் இத்தனை நேரமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் மௌனமாயிருந்த சீதா, "ஏன்னா! இந்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "உன் அம்மாஞ்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்!" என்றான் ராகவன். "அம்மாஞ்சியைக் கேட்பானேன்? நீங்கள்தான் சொல்லுங்களேன்! உங்களுக்குத் தெரியாதா!" "பேஷாகத் தெரியும்! உன்னைப்போல் அவளும் ஒரு ஸ்திரீ தான்!" "ஸ்திரீதான் என்று எனக்கும் தெரிந்தது. ஆனால் உருவத்திலே தான் ஸ்திரீயே தவிர, நடவடிக்கை எல்லாம் ஆண்பிள்ளை மாதிரி! புருஷனாய்ப் பிறந்திருக்க வேண்டியவள்; தவறிப் பெண்ணாய்ப் பிறந்து விட்டாள் போலிருக்கிறது." "நீ சொல்வது ரொம்ப சரி; ஆகவே அந்தப் பெண்ணாய்ப் பிறந்த புருஷனோடு நான் பேசுவதினால் உனக்கு மனக்கஷ்டம் ஏற்படாதல்லவா?" "மனக் கஷ்டமா? எனக்கு எதற்காக மனக் கஷ்டம்? அசல் பெண்ணாய்ப் பிறந்தவளோடு நீங்கள் பேசினால்தான் எனக்கு என்ன வந்தது? என்னைச் சுத்தப் பட்டிக்காடு என்று நினைத்துக் கொண்டீர்களா? நானும் பம்பாய் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள்தான்." "அந்த மகத்தான விஷயத்தை மறந்து போய்விட்டேன் தயவுசெய்து மன்னிக்க வேணும். "
"ஆனால் என்னிடம் எதையும் மறைத்துப் பேசினால் மட்டும் எனக்குப் பிடிக்காது. டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் ஓடிப் போய் பேசினவள் இவள்தான்? அதை எதற்காக மறைக்க வேண்டும்?" "பார்த்தாயா? சூரியா, உன் அத்தங்காளின் சமர்த்தை? இவளிடம் பயந்துகொண்டு நான் எதையோ மறைத்தேனாம்! நம்ம பக்கத்துப் பெண்களிடம் இதுதான் ஒரு பெரும் சங்கடம் வெறும் சந்தேகப் பிராணிகள்?" "நான் ஒன்றும் சந்தேகப் பிராணி இல்லை. 'ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துப் பேசியவள் யார்?' என்று நான் கேட்டதற்குத் 'தெரியாது' என்று ஏன் மெழுகி மறைத்தீர்கள்?" "மெழுகவும் இல்லை; மறைக்கவும் இல்லை தெரிந்தவளாக்கும் என்று போய்ப் பேசினேன். அவள் இல்லை என்று சாதித்தாள்; அப்படியிருக்க, 'யார்? யார்?' என்று நீ துளைத்தால் நான் என்ன பதில் சொல்வது? இப்போது அவளும் நானும் பேசிக் கொண்டிருந்தோமே? அதிலிருந்து உனக்கு விஷயம் தெரியவில்லையா?" "ஏதோ இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தீர்கள்! என்ன பேசினீர்கள் என்று நான் கண்டேனா? அவ்வளவு இங்கிலீஷ் எனக்குத் தெரியாது." "தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு."
"இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்; அன்பாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாது." இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்னால் சூரியா வந்து கொண்டிருந்தான். பாரதியாரின் பாடலில், "தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமா?" என்ற வரிகள் அவனுடைய நினைவுக்கு வந்தன. அடடா! இவர்களுடைய இன்பமயமான இல்வாழ்க்கையில் இந்த ஒரு துளி விஷம் கலந்து விட்டதாகவல்லவா காணப்படுகிறது? என்று மனதிற்குள் பச்சாதாபப்பட்டான். "அத்தங்கா! நீ அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னது கொஞ்சமும் சரியல்ல; உத்தமமான தேச சேவகி அவள். ஹரிபுரா காங்கிரஸில் அவள் ஓடி ஓடித் தொண்டு செய்ததைப் பார்த்திருந்தாயானால் அவளுடைய குண மேன்மை உனக்குத் தெரிந்திருக்கும். அவள் 'பானி சாஹியே;' (தண்ணீர் வேண்டுமா?) என்று கேட்கும் வார்த்தையின் இனிமையினாலேயே தாகம் தணிந்துவிடும். அவளைப் பற்றி நீ ஒன்றும் தவறாக எண்ணிக் கொள்ளாதே!" என்று ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தான் சூரியா. "நீ பெரிய அதிகப்பிரசங்கி என்று தாரிணி சொன்னது சரிதான்? ஒரே வர்ணிப்பாய் வர்ணிக்கிறாயே!" என்றான் ராகவன். அதற்குப் பிறகு ஆக்ரா கோட்டையில் பாக்கியிருந்த கட்டிடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். ஆனால் முன்னைப் போல் அவ்வளவு உற்சாகம் யாருக்கும் இல்லை. "நடந்து நடந்து எனக்குக் காலை வலிக்கிறது; ஓட்டலுக்குப் போகலாமா?" என்றாள் சீதா. "ஆமாம்; பளிங்குக் கல்லாலேயே எல்லாக் கட்டிடங்களும் கட்டியிருப்பதால் ஒன்றைப் போலவே இன்னொன்று இருக்கிறது. ஒரு வித்தியாசமும் இல்லை; திரும்பிப் போக வேண்டியதுதான். சாயங்காலம் தாஜ்மகால் வேறே பார்க்க வேண்டும் அல்லவா?" என்றான் ராகவன். "தாஜ்மகாலைப் பற்றியும் இப்படித்தான் சொல்வீர்களோ, என்னமோ? அதுவும் பளிங்குக் கல்லால் கட்டியதுதானே?" என்று சொன்னான் சூரியா.
"ஆஹா! அது வேறு விஷயம்; தாஜ்மகால் கட்டிடமே இல்லை. அது உயிருள்ள தெய்வீக சிற்ப வடிவம்; இந்தியாவில் மொகலாயர் காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஜீவ பிம்பம்; ரதியும் மன்மதனும் பவனி வரும் வெண்மலர் விமானம்; சந்திர கிரணங்களையும் மந்தமாருதத்தையும் வானவில்லின் வர்ணங்களையும் காதல் இன்பத்தையும் குழைத்து எழுதிய உயிர்ச் சித்திரம்; ஒரு தடவை பார்த்தவர்களின் உள்ளத்திலிருந்து என்றென்றும் அகலாத சௌந்தர்ய மோகினி. தாஜ்மகாலை பார்க்காத ஜன்மம் மனித ஜன்மமேயல்ல!" என்று ராகவன் சொல்மாரி பொழிந்தான். மூவரும் ஆக்ராவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றார்கள். சாப்பிட்டுவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள். சீதா பட்டுப் பூச்சியின் பலவர்ண இறகுகள் போல் பிரகாசித்த உடைகள் அணிந்திருந்தாள். சிலந்திப் பூச்சியின் கூண்டைப் போல் தோன்றிய மெல்லிய சல்லாத் துணியைத் தலை பாதி மறையும்படியாகப் போர்த்திக் கொண்டிருந்தாள். விலை மதிக்க முடியாத முத்து மாலைகளையும் ரத்தின ஹாரங்களையும் அணிந்திருந்தாள். பாதங்களையும் விரல் நகங்களையும் செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டு இருந்தாள்.
வெண்ணிலாவின் நிறத்தையொத்த பளிங்குக் கல்லினால் கட்டி, பலவர்ண இரத்தினக் கற்களினால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அரண்மனையின் மண்டபங்களிலும் மாடங்களிலும் அங்குமிங்கும் நடமாடினாள். ஆங்காங்கு, பளிங்குக் கல் வாய்க்கால்களில் சலசலவென்று ஓடிய நீரோடையைப் பார்த்து மகிழ்ந்தாள். சிற்சில இடங்களில் நீரோடையில் சிறு குளங்கள் அமைந்திருந்தன. அந்தக் குளங்களில் அன்று மலர்ந்த குமுதங்களும் தாமரைகளும் செங்கழுநீர்ப் பூக்களும் கொடிகளுடனும் இலைகளுடனும் காணப்பட்டன. இன்னும் சில குளங்களில் அன்று பூத்த ரோஜா மலர்களைக் கொட்டியிருந்தார்கள். புஷ்பங்களின் வாசனையோடு, ராணி நூர்ஜஹான் கண்டுபிடித்து உலகத்துக்கு அளித்த ரோஜா அத்தரின் வாசனையும் அகிற்புகை வாசனையும் கலந்து பரிமளித்தன. குளங்களின் ஓரமாக நின்று, மலர்ந்து மிதந்த புஷ்பங்களைச் சில சமயம் சீதா உற்றுப் பார்த்தாள். சில சமயம் ஸ்படிகம் போன்ற தண்ணீரில் தன்னுடைய பொன் மேனியின் அழகைக் கண்ட ஆனந்தத்தினால் அவளுடைய தேகமெல்லாம் சிலிர்த்தது. திடீரென்று அவளைச் சுற்றிப் பல பணிப் பெண்கள் நின்றார்கள். எங்கிருந்து வந்தார்களோ தெரியாது எல்லாரும் அழகிகள்தான். படமெடுத்து ஆடி அவ்வப்போது சீரும் நாக சர்ப்பத்தின் அழகை அவர்களுடைய அழகு ஒத்திருந்தது.
நாகப் பாம்பு தன் நீண்ட நாவை நீட்டுவது போல் அந்தப் பணிப் பெண்கள் எல்லாரும் சீதாவை நோக்கித் தங்கள் ஆட்காட்டி விரலைச் சுட்டிக் காட்டினார்கள், நெருப்புத் தழலைப் போல் அவர்களுடைய கண்கள் பிரகாசித்தன. "இவள்தான்!" இவள்தான்!" என்று சொல்லி ஏககாலத்தில் எல்லாரும் சீறினார்கள். "வா! எங்களுடன் வா!" என்று சீதாவை அழைத்தார்கள். அவர்களுடைய அழைப்பை மறுக்க முடியாமல் சீதா அவர்களுடன் சென்றாள். விசாலமான பளிங்குக் கல் மண்டபம் ஒன்றில், தோகை விரித்த மயிலைப் போல் பின்புறச் சாய்வு அமைந்த ரத்தின சகிதமான சிம்மாசனத்தில் மொகலாய மன்னனின் பட்ட மகிஷி அமர்ந்திருந்தாள். "ஆஹா! அந்த மாதரசியின் கர்வந்தான் என்ன? சீதாவை, "வா!" என்று கூட அழைக்கவில்லை; உட்காரவும் சொல்லவில்லை. "இந்த அசட்டுப் பைத்தியக்காரி யார்? எதற்காக இவளை இவ்விடம் கொண்டு வந்தீர்கள்?" என்று பணிப் பெண்களைப் பார்த்துச் சக்ரவர்த்தினி கேட்டாள். "மஹாராணி! இவள்தான் நம் இளவரசரின் காதலைக் கவர்ந்த காதகி? ராஜபுத்திர மங்கை சீதா!" என்று ஒரு பணிப்பெண் கூறினாள். "ஓகோ! அப்படியா? இவளுக்குத் தக்க தண்டனை விதிப்போம். இன்று நள்ளிரவு வரையில் இவள் உயிரோடு இருக்கட்டும்!" என்று அரசியின் ஆக்ஞை பிறந்தது.
அந்தி மாலையில் அரண்மனை உத்தியான வனத்தில் சீதா அங்குமிங்கும் அலைந்தாள். ரோஜா மலர்களையும் மல்லிகைப் பூக்களையும் பறித்து முகர்ந்தாள். அவளுடைய மனதில் கவலை குடிகொண்டிருந்த போதிலும் இளவரசர் வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது. இளவரசருடைய முகத்தோற்றத்தை எண்ணிப் பார்த்தபோது மொகலாய உடை தரித்த சௌந்தரராகவனுடைய வடிவமும் முகமும் சீதாவின் அகக்கண் முன்னால் வந்தன. மாலை மயங்கி இருளான போது அவளுடைய உள்ளத்தில் திகில் தோன்றியது. அதிதுரிதமாக நள்ளிரவு நெருங்கி வந்தது. அரண்மனையை ஜோதிமயமாகச் செய்து கொண்டிருந்த தீபங்கள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. பிறகு சீதா இருளும் தானும் தனிமையுமாக ஆனாள். சலவைக்கல் சுவரில் அமைந்திருந்த சித்திரப் பலகணி வழியாகச் சந்திரனுடைய கிரணம் ஒன்று உள்ளே புகுந்து சீதாவின் கன்னத்தைத் தொட்டுத் தன்னுடைய மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது. திடீரென்று அறைக்கு வெளியே பேச்சுக் குரல் கேட்டது. "அடியே! தூங்கிவிட்டாள் போலிருக்கிறதடி!" "இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே தூக்கமாய்த் தூங்க வேண்டியவள் தானே!" "எனக்கு என்னமோ இவளை ஒரேயடியாக் கொன்று விடுவதில் விருப்பமில்லை. அனார்க்கலியைச் சிறையில் அடைத்ததுபோல் இவளையும் அடைத்துவிட்டால், தானே பைத்தியம் பிடித்துப் புலம்பிச் சாகிறாள்!" "எல்லாவற்றுக்கும் மகாராணியைக் கேட்டுக் கொண்டு வருவோம், வாருங்கள்!"
பேச்சுக் குரல்கள் நின்று மௌனம் குடிகொண்டது. உடல் நடுக்கத்துடன் சீதா எழுந்தாள்; இனி அங்கே ஒரு கணம் தாமதிப்பது ஆபத்தாகிவிடும். உடனே கிளம்பி எப்படியாவது இந்த அந்தப்புரச் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து ஓடிப் போக வேண்டும். இளவரசர் இங்கு வந்து தன்னைத் தப்புவிப்பார் என்று நினைப்பது மதியீனம். தான் இங்கு இருப்பதே அவருக்குத் தெரியாதே. பின் எப்படிக் காப்பாற்றுவார்?' 'டில்லியிலேயே இருக்கவும், ஆக்ராவுக்கு வரவேண்டாம்' என்று இளவரசர் சொன்னதைக் கேட்காமல் அல்லவா வந்து விட்டோ ம். இருள் சூழ்ந்த அந்தப்புரத்தின் தாழ்வாரங்கள் வழியாகச் சீதா தட்டுத்தடுமாறி நடந்து சென்றாள். கையினால் சுவர்களைத் தடவிக் கதவு உள்ள இடத்தைத் தேடிக் கொண்டே சென்றாள். ஆங்காங்குப் பலகணிகளின் வழியாக வந்த நிலா வெளிச்சம் அவளுக்கு ஒருவாறு வழிகாட்டிக் கொண்டிருந்தது. பல இடங்களில் சுவரைக் கதவு என்று எண்ணி ஏமாந்தாள். கதவு தட்டுப்பட்டாலும் அதைத் திறக்க முடியாமல் ஏமாற்றமடைந்தாள். ஒரு யுகம் போலத் தோன்றிய ஒரு நாழிகை நேரம் இப்படி அலைந்து திரிந்த பிறகு கடைசியில் ஒரு கதவு அவள் கையை வைத்ததும் திறந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, வாசற் படியைத் தாண்டினாள். வெளியே வந்ததும் தன் எதிரே பிரம்மாண்டமான கோர ராட்சஸ உருவம் ஒன்று நிற்பதைக் கண்டு திகைத்து நின்றாள். அந்த உருவம் யார் என்பதை அவள் அறிவாள். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி அவன். அதோடு செவிட்டு ஊமை; காது கேளாது, பேசவும் முடியாது. ஆனால் அவன் கண் பார்வை தீட்சண்யமானது.
தன்னுடைய கடமை என்னவென்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப்புரத்திலிருந்து வெளியே போகிறவர்களைத் தடுப்பது அவனுடைய முதற்கடமை. மீறிப் போக யத்தனிப்பவர்களைக் கொஞ்சமும் தாட்சண்யம் பாராமல் கண்ட துண்டமாக வெட்டுவதற்காக அவன் கத்தி வைத்திருந்தான். கத்திக்கு இரையாகாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியும் வைத்திருந்தான். இவனைப் போல் பல அலிகள் மொகலாய பாதுஷாவின் அந்தப்புரத்தைப் பாதுகாத்து வந்தார்கள். இவற்றையெல்லாம் நன்கறிந்திருந்த சீதா நடுநடுங்கினாள். அந்த அலியோ ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை உற்றுப் பார்த்து விழித்தான். அவ்வளவுதான்; சீதா பீதியினால் தன்னை மறந்து விட்டாள். "சூரியா! சூரியா!" என்று கதறினாள். தன்னைக் காப்பாற்றுவதற்காகத் தன் அம்மாஞ்சி சூரியா அந்தக் கோட்டைக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒளிந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேதான், "சூரியா!" என்று அவள் கதறினாள்.
சீதாவின் கதறலுக்கு ஒரு பதில் குரல் வந்தது. "இங்கே சூரியா இல்லை; நான் இருக்கிறேன்; வருகிறேன்!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. அது யாருடைய குரல் என்று சீதா அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் வெண்ணிலவு பிரகாசித்த நிலா முற்றத்துக்கு அப்பால் இருள் சூழ்ந்திருந்த மண்டபத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. கொஞ்ச தூரம் வந்ததும் அது யாருடைய உருவம் என்பது சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. அன்றொரு நாள் தன் தாயார் நோயாய்ப் படுத்திருந்தபோது அவளைப் பார்க்க வந்து பணமும் நகையும் கொடுத்து விட்டுப் போன ஸ்திரீதான். புதுடில்லிச் சாலை முனையில் கையில் கத்தியுடன் மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாளே, அவள்தான்! அந்த ஸ்திரீ இப்போதும் அக்கத்தியைக் கையில் பிடித்திருந்தாள். நிலா வெளிச்சத்தில் கத்தியில் சுடர் விளிம்பு தழல் கீற்றைப்போல் பிரகாசித்தது. அந்த ஸ்திரீ யார்? அவள் எதற்காக வருகிறாள்? அலியைக் கொன்று தன்னைக் காப்பாற்ற வருகிறாளோ? அல்லது அந்தப்புரத்திலிருந்து தப்ப முயன்றதாகத் தன்னையே கொன்று விடுவதற்குத்தானோ?... "அத்தங்கா! அத்தங்கா! இது என்ன தூங்கிக்கொண்டே பேசுகிறாய்? எழுந்திரு!" என்றான் சூரியா. சீதா கண் விழித்தாள்; பட்டப்பகலில் தான் தூங்கியது மட்டுமல்லாமல், பயங்கரமான கனவு கண்டு பிதற்றியும் இருக்க வேண்டும் என்று தெரிந்து வெட்கினாள். வெட்கத்தை மறைப்பதற்காக, "நான் ஒன்றும் பிதற்றவில்லையே, சூரியா! இவர் எங்கே போனார்?" என்று கேட்டாள். "டோ ங்கா கொண்டு வருவதற்காக வாசலுக்குப் போனார். எழுந்திரு, சீக்கிரம்! தாஜ்மகாலுக்குப் புறப்பட வேண்டாமா? மணி நாலு அடித்துவிட்டதே!" என்றான் சூரியா.