அலை ஓசை/புயல்/தாஜ்மகால்
புது மணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பது போலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப் பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்திய டாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப் போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன. உலகம் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசைகொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணம் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.
சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. "தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலை குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்! பளிங்குக் கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா! எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே அவள் வந்திருக்கிறாள்! அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன?
தாஜ்மகாலின் முன் வாசலில் பிரவேசித்த பிறகு பிரதான கட்டிடம் வரையில் உள்ள நிலா முற்றம் ஏறக்குறைய இரண்டாயிரம் அடி நீளமும் ஆயிரம் அடி அகலமும் உள்ளது. இந்த நிலா முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நீலோத்பலம் மலர்ந்த நீரோடைகள் பல இருக்கின்றன. வெள்ளைப் பளிங்குக் கல் ஓடைகளில் நீல வர்ண ஜாலமும் நீலோத்பலமும் நீல வானத்தின் பிரதிபலிப்பும் நட்சத்திரங்களின் கிலுகிலுப்பும் வர்ணிக்க முடியாத சௌந்தர்யக் காட்சியாகத் திகழ்கின்றன. கட்டிடத்தை நெருங்கும்போது நீர் ஓடைகளில் தாஜ்மகாலின் பிரதிபிம்பத்தையும் காணலாம். பௌர்ணமியன்று பூரண சந்திரனுடைய பிரதிபிம்பமும் ஓடை நீரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் என்று சொல்லவா வேண்டும்? "தங்க நிலாவின் ஒளியில், வெள்ளிப் பளிங்குக் கல் தரையில், நீல ஓடைக் கரையில், சீதா, ராகவன், சூரியா, தாரிணி, நிருபமா, அவளுடைய கணவர் வேணிப்பிரஸாத் ஆகியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மாலை நேரமெல்லாம் அவர்கள் தாஜ்மகாலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். உள்ளே சென்று ஷாஜஹான் - மும்தாஜ் சமாதிகளைப் பார்த்தார்கள். சமாதிகளைச் சுற்றிலும் சலவைக் கல்லில் அமைந்திருந்த அதி அற்புதமான சித்திர விசித்திர வேலைகளைப் பார்த்தார்கள். தூர தூர தேசங்களிலிருந்து தருவித்துப் பதித்திருந்த இரத்தினக் கற்களினாலான புஷ்ப ஹாரங்களைப் பார்த்தார்கள். நாலு மூலையிலும் நூற்றறுபது அடி உயரம் நிமிர்ந்து நின்ற காவல் கோபுரங்களிலே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறி உச்சியிலிருந்து நாலாபுறமும் பார்த்து மகிழ்ந்தார்கள். யமுனை நதியில் இறங்கிக் களித்தார்கள்.அங்குமிங்கும் ஓடியாடினார்கள்; ஓடியவர்களைத் துரத்திப் பிடித்தார்கள். கலகலவென்று சிரித்தார்கள் விளையாட்டாக ஒருவரையொருவர் அடித்தார்கள்.
இப்படியெல்லாம் குதூகலமாக மாலை நேரத்தைக் கழித்த பிறகு எல்லாரும் ஓரளவு உடல் சோர்ந்து ஓடைக் கரையில் உட்கார்ந்தார்கள். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும்; புற உலகமெங்கும் அமைதி நிலவியது. ஆனால் நம்முடைய நண்பர்கள் எல்லாருடைய உள்ளத்திலும் அமைதி நிலவியது என்று சொல்ல முடியாது. சீதா, ராகவன், தாரிணி, சூரியா ஆகிய ஒவ்வொரு வருடைய உள்ளமும் வெவ்வேறு காரணத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. "மனித ஜன்மம் எடுத்துத் தாஜ்மகாலைப் பார்க்காமலிருப்பதில் என்ன பயன்? அப்படிப்பட்ட ஜன்மமும் ஒரு ஜன்மமா?" என்று சீதா பேச்சைத் தொடங்கினாள். "அதுவும், பகலில் பார்த்தால் மட்டும் போதாது. இந்த மாதிரி பௌர்ணமி நிலவிலே பார்க்க வேண்டும்" என்றான் ராகவன். "பார்த்துவிட்டு உடனே உயிரை விட்டுவிட வேண்டும்; அப்புறம் உயிர் என்னத்திற்கு?" என்றான் சூரியா. அவன் பரிகாசமாகச் சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட சீதா, "ஆமாம், அம்மாஞ்சி! தாஜ்மகாலைப் பார்த்த பிறகு உயிரோடிருப்பது அவசியமில்லைதான்!" என்றாள்.
"தீப ஒளியைப் பார்க்கிற விட்டில் பூச்சி அப்படித்தான் எண்ணிக் கொள்கிறது!" என்றான் சூரியா. "என்னைப் பொறுத்த வரையில், இந்த மாதிரி ஒரு கட்டிடம் என்னைப் புதைக்குமிடத்துக்கு மேலே கட்டுவதாயிருந்தால், நான் இங்கேயே இந்த நிமிஷமே உயிரை விடத் தயார்!" என்றாள் நிருபமா. "அப்படி ஏதாவது செய்து வைக்காதே! இப்போதெல்லாம் உயிரோடிருப்பவர்கள் வசிப்பதற்கு வீடு கட்டுவதே கஷ்டமாயிருக்கிறது. செத்துப் போனவர்களுக்கு எப்படிக் கட்டிடம் கட்ட முடியும்? நிச்சயமாக என்னால் முடியாது?" என்றார் நிருபமாவின் கணவர் வேணிபிரஸாத். "மிஸ்டர் பிரஸாத்! தங்களுடைய மனைவிதான் இம்மாதிரி முதன் முதலில் சொன்னார் என்பதில்லை. இதற்கு முன் இங்கு வந்து பார்த்த ஸ்திரீகள் வெள்ளைக்கார துரைசானிமார்கள் உள்பட இம்மாதிரியே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சிறிதும் யோசனை யின்றித்தான் சொல்லியிருக்கிறார்கள். செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன? அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன? இறந்தவர்களுக்கு எப்படிச் செய்தாலும் ஒன்றுதான்!" என்று சூரியா சொன்னான்.
"சரியான பேச்சு! என்னுடைய கட்சியும் அதுதான். செத்துப் போன ஷாஜஹானுடைய ராணிக்கு இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் யாதொரு பயனும் இல்லை. ஆனால் நம்மைப் போல் உயிரோடிருப்பவர்கள் எத்தனையோ பேர் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. உமர்கய்யாமின் கவிதை இந்த மாதிரி இடத்துக்குத்தான் பொருந்தும். "தங்குவதற்கு தாஜ்மகால்; ஒரு கூஜா திராட்சை ரசம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகிலே நீ; இதைக்காட்டிலும் வேறு சொர்க்கமும் உண்டோ ?" என்று கூறி சௌந்தரராகவன் தாரிணியை உற்று நோக்கினான். "இத்தகைய மனோரதம் உங்களுக்கும் வேணிபிரஸாத்துக்கும் நிறைவேற இடம் உண்டு. ஆனால் தாரிணியையும் மிஸ்டர் சூரியாவையும் போன்றவர்கள் என்ன செய்வது?" என்று நிருபமா சொன்னாள். "அவரவர்களுக்கும் ஒரு நாள் கலியாணம் நடந்து விடுகிறது. சூரியா விஷயத்தில் கலியாணத்தைப் பற்றி கவலையே இல்லை. அவன் சம்மதிக்க வேண்டியதுதான்! மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்!" என்றாள் சீதா. "அத்தங்கா! உனக்கு எப்போதும் காதலும் கலியாணமும் தான் நினைவு. காதலைத் தவிர உலகத்தில் வேறொன்றும் கிடையாதா?" என்றான் சூரியா.
"சந்தேகம் என்ன? காதலைக் காட்டிலும் உலகத்தில் முக்கியமானது ஒன்றுமில்லைதான். கவிதைகள், காவியங்கள், எல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டுதானே புனைகிறார்கள்! காதல் இல்லாவிட்டால் வால்மீகியின் ராமாயணம் ஏது? காளிதாஸனின் சாகுந்தலம் ஏது? ஷேக்ஸ்பியரின் நாடகம் ஏது? மற்றும் இந்த நாளில் நவீன ஆசிரியர்கள் நவ நவமாக எழுதி வெளியிடும் அற்புதமான நாவல்களைத்தான் அவர்கள் எப்படி எழுத முடியும்" என்றான் ராகவன். "ஆகா! உங்கள் நாவல்களைக் கொண்டு போய் குப்பையிலே போடுங்கள். வேறு ஒன்றும் விஷயம் இல்லாதவர்கள் காதற் கதைகள் எழுதுகிறார்கள், வேலையற்ற வீணர்களே காதற் கவிதைகள் புனைகிறார்கள்!" என்று சூரியா சொன்னான். நிமிஷத்துக்கு நிமிஷம் அவனுடைய உள்ளத்தில் ஆவேசமும் அவன் குரலில் ஆத்திரமும் பெருகிக் கொண்டிருந்தன. "பின்னே எல்லோரும் காரல்மார்க்ஸைப் போலவே எழுத வேண்டும் என்கிறாயாக்கும்!" என்று சௌந்தரராகவன் கேலியாகக் கேட்டான். "எல்லாரும் காரல்மார்க்ஸைப் போல் எழுத வேண்டாம்; டால்ஸ்டாயைப் போல் எழுதட்டுமே? காந்தி மகானைப் போல் எழுதட்டுமே? ஜவாஹர்லால் நேருவைப் போல் எழுதட்டுமே? பெர்னாட்ஷாவைப் போல் எழுதட்டுமே?" "அம்மாஞ்சி! பாரதியாரைப் போல் எழுதலாமா, கூடாதா? பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? நினைவிருக்கிறதா?" என்றாள் சீதா.
"பாரதியார் என்ன சொல்லியிருந்தால் இப்போது என்ன? அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லையே? பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்த போது தேசத்தின் சுதந்திரத்தைப் பாடினார். கொஞ்சம் மயக்கமாயிருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்!" என்றான் சூரியா. "இவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ காதலில் ஏமாற்றமடைந்தவர் போலத் தோன்றுகிறது!" என்று தாரிணி கூறிப் புன்னகை புரிந்தபோது அவளுடைய முல்லைப் பற்கள், நிலா வெளிச்சத்தின் முகத்தைப்போல் பிரகாசித்தன. அவளுடைய முகபாவத்தில் அனுதாபம் காணப்பட்டது. "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொல்லி சூரியா வெட்கத்தினால் தலையைக் குனிந்து கொண்டான். "சூரியா இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்வான், அவனுடைய போக்கே ஒரு தனி. சீதா! பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? அதைச் சொல்லு? நாங்கள் கேட்கிறோம்" என்றான் ராகவன். "அன்பு வாழ்கென்று அமைதியில் ஆடுவோம்! ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்!" என்று மெல்லிய பொய்க் குரலில் பாடிக் காட்டினாள் சீதா. "அந்தப் பாட்டை முழுவதும் நன்றாகப் பாடுங்கள்! கேட்க விருப்பமாயிருக்கிறது" என்றாள் தாரிணி. "ஆம்; பாடுவதற்கேற்ற சமயம் இது; இவ்வளவு நேரம் வீண் பேச்சில் போய்விட்டது. சங்கோஜப்படாமல் குரலை நன்றாக விட்டுப் பாடுங்கள்!" என்றாள் நிருபமா. "சீதா, ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். "அபஸ்வரமில்லாமல் பாடுவதாயிருந்தால் பாடு" என்றான் ராகவன். ராகவனுடைய பதில் சீதாவுக்குக் கோபத்தை ஊட்டியது. ஆயினும் சமாளித்துக்கொண்டு, "அபஸ்வரமோ; ஸுஸ்வரமோ, எனக்குத் தெரிந்தபடிதானே பாடமுடியும்?" என்றாள்.
"எங்களுக்கு ஸுஸ்வரமும் தெரியாது; அபஸ்வரமும் தெரியாது. எல்லா ஸ்வரமும் எங்களுக்கு ஒன்றுதான் தைரியமாகப் பாடுங்கள்!" என்றாள் நிருபமா. பிறகு ராகவனைப் பார்த்து, "உங்களுக்குப் பிடிக்காவிட்டால் காதை அடைத்துக் கொள்ளுங்கள்!" என்றாள். "பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!" என்ற பாட்டைச் சீதா பாடினாள். பாடும்போது எல்லாரும் சீதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராகவன் மட்டும் தாரிணியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டு முடிந்ததும், தாரிணியும் நிருபமாவும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். நிருபமாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் தாரிணி, பாட்டின் கருத்தை விளக்கினாள். ராகவன், "இது என்ன பாட்டு, டா, டூ, என்று? எனக்கு ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை" என்றான். இந்தப் பாட்டில் நல்ல கருத்துக்கள் பல இருக்கின்றன. ஆனால் காதலைப்பற்றி இவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டாம். "காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!" என்பதெல்லாம் மிகைப்படுத்துவதில் சேர்ந்தது. காதற் பெண்கள் கடைக்கண்ணால் பணித்தால் என்ன வேணுமானாலும் செய்து விடலாமாக்கும்! சுத்த அபத்தம்! இந்த மாதிரிக் காரியம் செய்தவர்களால்தான் இந்திய தேசம் அடிமைப்பட்டுப் பாழாய்ப் போயிற்று, பிருதிவிராஜனைப் போல? அத்தங்கா! பாரதியாரின் தேசிய கீதம் ஒன்று பாடு!" என்றான் சூரியா.
"எனக்குத் தேசீய கீதம் ஒன்றும் தெரியாது. பாடினாலும் அபஸ்வரமாயிருக்கும் டா, டூ என்று கர்ண கடூரமாயிருக்கும்!" என்றாள் சீதா. "தாரிணி உனக்கு ஹிந்துஸ்தானியில் ஒரு தேசீய கீதம் தெரியுமே? அதைப் பாடு!" என்றான் ராகவன். "ஆமாம், தாரிணி! 'ஸாரே ஜஹான்ஸே அச்சா' என்ற கீதம் உனக்குத் தெரியுமே? அதைப் பாடு, கராச்சியிலிருந்து பம்பாய்க்கு கப்பலில் போனபோது கடைசியாக நீ பாடிக் கேட்டது, அப்புறம் கேட்கவே இல்லை" என்றாள் நிருபமா. தாரிணி பாடினாள்; இரவு நேரத்தில் சப்தம் செய்யும் பட்சிகளும் வண்டுகளும் காற்றும் கூட அடங்கி நின்றன. பூரண சந்திரன் தாஜ்மகால் மோகினியை ஒரு கணம் மறந்து தாரிணியின் கீதத்தில் கவனம் செலுத்தினான். நட்சத்திரங்கள் கண் கொட்டுவதைக் கூட நிறுத்தி ஆர்வத்தோடு கேட்டன. நிலா வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரரும் அவருடைய துரைசானியும் கூடத் தங்கள் காமிராவை மூடிவிட்டுக் காது கொடுத்துக் கேட்டனர். பாடி முடித்ததும் நிருபமாவும் அவளுடைய கணவரும், "அச்சா! பஹூத் அச்சா!" என்றார்கள். "பலே பேஷ்!" என்றான் சூரியா. "பாடினால் இப்படிப் பாடவேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும்" என்றான் ராகவன். சீதாவின் உள்ளம் புண்பட்டது என்பதைச் சூரியா கவனித்தான். அவளைப் பார்த்து, "அத்தங்கா! நீ கூட இந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ளலாம். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 'உலகில் எல்லாத் தேசங்களிலும் சிறந்தது நம்முடைய ஹிந்துஸ்தானம்' என்பது முதல் வரியின் கருத்து" என்றான்.
"அதற்குக் கூடச் சந்தேகமா? உலகத்திலெல்லாம் மிகச் சிறந்த தேசம் நம் இந்திய தேசம் தான். அதை நிரூபிக்க இந்தத் தாஜ்மகால் ஒன்று போதுமே!" என்றாள் சீதா. "நீ சொல்வது தப்பு; இந்தியாவின் மகிமை தாஜ்மகாலில் ஏற்படவில்லை. இமயமலையினாலும் கங்கை நதியினாலும் புத்தராலும் அசோகராலும் சிவாஜியினாலும் ஜான்ஸிராணியினாலும் இந்தியாவுக்கு மகிமை ஏற்பட்டது" என்றான் சூரியா. "இமயமலையும் கங்கை நதியையும் போல் வேறு தேசங்களில் மலையும் நதியும் இருக்கின்றன. ஆனால் தாஜ்மகாலைப் போன்ற ஒரு கட்டிடம் கிடையாது. ஆகையால் இந்தியா தாஜ்மகாலினாலே தான் பெருமையடைந்திருக்கிறது" என்று சொன்னான் ராகவன். "இந்தப் பெருமை இந்தியாவுக்கு வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்" என்றான் சூரியா. "உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் உனக்கு மட்டும் அதிசயமில்லை யாக்கும்!" என்றான் ராகவன். "மிஸ்டர் சூரியாவுக்கு அதிசயமில்லாவிட்டால் உலகம் அஸ்தமித்துவிடாது. இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் இந்தியாவின் மகிமை விளங்குகிறது; சலனமில்லாத காதலின் பெருமையும் இதன் முலம் வெளியாகிறது!" என்றார் பிரஸாத். "ஆ! நீங்கள் கூடக் காதலைப் புகழ ஆரம்பித்து விட்டீர்களா!" என்று சூரியா அருவருப்பு நிறைந்த குரலில் கேட்டான்.
"நீங்கள் ஏன் காதல் என்றால் கரிக்கிறீர்கள்? இந்தத் தெய்வீக அழகு வாய்ந்த தாஜ்மகால் ஷாஜஹானுடைய காதலிலிருந்து தானே உற்பவித்தது?" என்று நிருபமா கூறினாள். "அம்மணி! தயவு செய்து கேளுங்கள், ஷாஜஹானுடைய காதலிலிருந்து இந்தத் தாஜ்மகால் கட்டிடம் பிறக்கவில்லை. பாதுஷா ஷாஜஹானுடைய கொடுங்கோன்மையிலிருந்து பிறந்தது. அந்தக் கொடுங்கோன்மை அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்கே பொறுக்கவில்லை. அதற்காக அவன் தன்சொந்தத் தகப்பனைச் சிறையில் அடைத்து வைத்தான்." "ஆ! ஔரங்கசீப் கலை உணர்ச்சி என்பது அறவே இல்லாதவன். அவன் கொடுங்கோலன் என்பது சரித்திரப் பிரசித்தமானது. ஷாஜஹான் எப்படிக் கொடுங்கோலனாவான்? அவன் ரொம்ப நல்லவன் என்று சரித்திரம் சொல்கிறதே!" "ஆமாம்; ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனால் அந்த ஒரு நல்லவனுடைய தற்பெருமைக்காக எத்தனை ஜனங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா? இந்தத் தாஜ்மகாலைக் கட்டி முடிக்க இருபது வருஷம் ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியுமா? இருபதாயிரம் தொழிலாளர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ இரவு பகல் பாடுபட்டார்கள் என்று தெரியுமா? மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த வரிப் பணத்தில் கோடானு கோடி ரூபாய் செலவழிந்தது என்பது தெரியுமா? ஒரு தனி மனிதனுடைய தற்பெருமைக்காக இருக்கட்டும்; அல்லது அவனுடைய அதிசயமான காதலுக்காகவே இருக்கட்டும்; இருபதினாயிரம் பேர் இருபது வருஷம் உழைத்து உழைத்து உயிர் விட வேண்டுமா? இதை ஒருநாளும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஆங்காரத்துடன் கூறிச் சூரியா மூச்சு விடுவதற்காக நிறுத்தினான். "உமக்கு அதிகாரம் இருந்தால் என்ன செய்வீர்?' என்று தாரிணி புன்னகை புரிந்த வண்ணம் கேட்டாள்.
அன்று மாலை தாஜ்மகால் வாசலில் இருந்த விளையாட்டுச் சாமான் கடையில் சீதா ஒரு பளிங்குக் கல் 'மாடல்' தாஜ்மகாலை வாங்கியிருந்தாள். அது சூரியாவின் பக்கத்தில் இருந்தது. சூரியா அதைக் கையில் எடுத்துக் கொண்டான். "ஆயிரம் பதினாயிரம் மக்களைக் கொடுமைப்படுத்தி ஒரு மூட அரசன் தன்னுடைய தற்பெருமைக்காகக் கட்டிய இந்த தாஜ்மகாலை, எனக்கு அதிகார மிருந்தால், இந்த நிமிஷமே இடித்துத் தள்ளிச் சுக்குநூறாக்குவேன்!" என்று இரைந்து கத்தியவண்ணம், கையில் எடுத்திருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தான். எறிந்த தாஜ்மகால் பொம்மை தாரிணியை நோக்கிச் சென்றது. அவளுடைய தலையிலோ முகத்திலோ அது விழப் போகிறது என்ற பயத்தினால், பார்த்திருந்தவர்கள் எல்லாரும், ஆஹா!" என்றார்கள். தாரிணியும் திடுக்கிட்டுச் சிறிது தலையைப் பின்வாங்கிக் கொண்டாள். நல்லவேளையாக, எறியப்பட்ட தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் பக்கத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் சுக்குநூறாயிற்று. உடைந்த பகுதி ஒன்று எகிரிக் கிளம்பிச் சென்று தாரிணியின் நெற்றியில் தாக்கியது. முன் கூந்தலுக்குக் கீழே காயம் பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. தாரிணியின் தந்த நிற நெற்றியிலிருந்து கசிந்த இரத்தத் துளியை வெண்ணிலவின் கிரணம் தழுவி அதை ஜோதி மயமான நாகரத்தினம் போலத் திகழச் செய்தது.
தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் கீழே விழுந்ததினால் பயம் நீங்கப் பெற்றவர்களை இந்த விபரீதம் மீண்டும் திடுக்கிடச் செய்தது. சூரியாவைத் தவிர மற்றவர்கள், "ஆஹா!" என்று சத்தமிட்டுக்கொண்டு தாரிணியைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் அவளை அணுகிச் சென்று நெற்றியில் கையை வைத்து இரத்தத்தை நிறுத்த முயன்றவன் ராகவன்தான். நிருபமா பலாத்காரமாக அவனுடைய கையை அப்புறப்படுத்திவிட்டுத் தன்னுடைய கைக்குட்டையினால் காயம்பட்ட இடத்தில் கட்டினாள். மற்றவர்களைப் போலவே கவலையுடன் தாரிணியின் அருகில் சென்ற சீதா, ராகவனுடைய செய்கையைப் பார்த்து நெஞ்சினிலே அம்பு பாய்ந்தவளைப் போன்ற வேதனை அடைந்தாள். சிறிது நேரம் தாரிணியைச் சுற்றி ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அமைதி ஏற்பட்டது. எல்லாரும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள். வேணிப் பிரஸாத் ராகவனைப் பார்த்து, "உங்கள் சிநேகிதர் மிக்க முரடர் போலிருக்கிறதே?" என்றார். "சுத்த இடியட்! செய்ததற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுக் கொள்ளாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருக்கிறான்!" என்றான் ராகவன். "இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு எதற்காக தடபுடல் செய்கிறீர்கள்?" என்றாள் தாரிணி. "நல்லவேளை, நெற்றில் பட்டதோடு போயிற்று! ஒருவேளை கண்ணிலே பட்டிருந்தால் என்ன ஆகும்?" என்றான் ராகவன். "அதுதான் படவில்லையே? பின் எதற்காக இந்தப் பேச்சு! நீங்கள் எல்லாரும் சும்மா இருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்!" என்று தாரிணி கூறினாள்.
சீதா மௌனமாயிருந்தாள்; அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு சிறு கடுகத்தினை காயம் நெற்றியில் ஏற்பட்டதற்கு இவ்வளவு உபசாரமா, இவ்வளவு தடபுடலா என்று ஒரு கணம் நினைத்தாள். "இவளுக்கு நன்றாக வேண்டும்! காயம் இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பட்டிருக்கக் கூடாதா?" என்று மறுகணம் நினைத்தாள். "இந்தக் காயம் நமக்குப் பட்டிருக் கக்கூடாதா? நம்மையும் இப்படி எல்லாரும் சூழ்ந்து உபசாரம் செய்வார்கள் அல்லவா?" என்ற எண்ணமும் ஒரு பக்கத்தில் இருந்தது. "பாவம்! சூரியா என்ன செய்வான்? தவறிப் பட்டதற்கு அவன் பேரில் இவ்வளவு எரிந்து விழுகிறார்களே?" என்று அனுதாபப்பட்டாள். "இந்த உலகத்திலேயே நம்மிடம் உண்மையான அபிமானம் உள்ளவன் சூரியா ஒருவன் தான். முன்னேயெல்லாம் அவனை நாம் கண்டபடி பரிகாசம் செய்து அவமானப்படுத்தினோமே?" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னுடைய அனுதாபத்தைப் பார்வையின் மூலம் தெரியப்படுத்த எண்ணிச் சூரியாவை அடிக்கடி நோக்கினாள். ஆனால் அவனோ ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான். தாஜ்மகால் நொறுங்கித் தாரிணிக்குக் காயம் பட்ட சம்பவத்துக்குப் பிறகு பேச்சு ஒன்றும் அவ்வளவாகச் சுவாரஸ்யப் படவில்லை. "போதும் தாஜ்மகால் பார்த்த இலட்சணம்; ஓட்டலுக்குத் திரும்பிப் போகலாமே?" என்றாள் சீதா. "சரி" என்று சொல்லி எல்லாரும் உடனே எழுந்தார்கள். ஓட்டலுக்குச் சென்றதும் சூரியா தன் சாமான்களை எடுத்துக்கொண்டு அவசரமாக டில்லிக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டான்.