சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/இரண்டாவது அரங்கேற்றம்
திருநாவுக்கரசு அடிகளுக்கு அப்போது ஏறக்குறைய ஐம்பத்தைந்து பிராயமிருக்கலாம். அப்பெருமானுடைய பொன் வண்ணத் திருமேனி முழுவதும் தூய வெண்ணீறு பூசியிருந்தது. அவருடைய கழுத்தையும் மார்பையும் ருத்திராட்ச கண்டிகைகளும் தாழ்வடங்களும் அலங்கரித்தன. சிரசிலும் கரங்களிலும் அவ்வாறே ருத்திராட்சங்கள் பொலிந்தன. காதுகளிலும் ருத்திராட்ச குண்டலங்கள் இலங்கின. இடையில் தூய வெண் துகில் உடுத்தியிருந்தார். அவருடைய திருமுகத்தில் ஞான ஒளி வீசிற்று. இறைவனை நினைந்து இடையறாது கண்ணீர்விட்ட அவருடைய கண்களில் பேரருள் ததும்பிற்று. கோயில் பிரகாரங்களில் புல் செதுக்குவதற்கான உழவாரப்படை அந்தத் தொண்டர் சிகாமணியின் திருத்தோளில் சாத்தப்பட்டிருந்தது.
திருநாவுக்கரசர் காஞ்சியில் அமைந்திருந்த சைவத் திருமடத்துக்கு அதிபராக விளங்கியபோதிலும், அவ்வப்போது ஸ்தல யாத்திரை சென்று திரும்புவது வழக்கம். தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களுக்கு அவர் சென்று சிவாநந்தமும் தமிழின்பமும் ததும்பும் தெய்வத் திருப்பதிகங்களைப் பாடினார். சென்ற இடங்களிலெல்லாம் ஜனங்கள் அவரைச் சிவிகையில் ஏற்றி ஊர்வலம் நடத்திச் சிறப்பாக வரவேற்றார்கள். அவர் சென்ற ஒவ்வொரு ஸ்தலத்திலும் கோயில் பிரகாரங்களில் முளைத்திருக்கும் புல்லை அவர் தம் கையில் பிடித்த உழவாரப்படையினால் செதுக்கிச் சுத்தம் செய்தார். இந்தச் சிவகைங்கரியத்தை ஆயிரக்கணக்கான மக்கள் அதிசயத்துடன் பார்த்தார்கள். அதுமுதல் தங்கள் ஊர்க் கோயில்களைப் புதுப்பித்துச் சுத்தமாக வைத்திருக்கத் தீர்மானித்தார்கள்.
வாகீசப் பெருமானுடைய திருவாக்கினால் தத்தம் ஊரிலுள்ள கோயிலுக்கு மகிமை உண்டாக வேண்டும் என்று ஜனங்கள் விரும்பினார்கள். "எங்கள் ஊருக்கும் விஜயம் செய்யவேண்டும். எங்கள் ஊர்க் கோயிலைப் பற்றியும் பாடி அருள வேண்டும்" என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். அவ்விதம் அப்பெருமான் பாடிய பாடல்களை அந்தந்த ஊர்க்காரர்கள் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொண்டு பெறுதற்கரிய பேறு அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.
இத்தகைய மகிமை வாய்ந்த நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் இடங்களில் ஜனங்கள் அருளொளி விளங்கிய அவருடைய திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் அவருடைய திருவாக்கிலிருந்து எப்போது, என்ன அமுத வார்த்தை வருமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அங்ஙனமிருக்க, இன்று அவருடைய சொந்த மடாலயத்தில் அவரிடம் பக்தி பூண்டு தொண்டு செய்யும் சீடர்கள்கூட, "ஆயனர் வருகிறார்!" என்ற சொல்லைக் கேட்டதும் ஒருமுகமாக வாசற்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள் என்றால், அதிலிருந்து மக்களின் உள்ளத்தில் ஆயனச் சிற்பியார் எப்பேர்ப்பட்ட இடம் பெற்றிருந்தார் என்று ஊகித்து அறியலாம். அங்கிருந்தோர் எல்லாரையும்விட நாவுக்கரசரின் அருகில் வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியின் உள்ளத்திலேதான் அதிகப் பரபரப்பு உண்டாயிற்று; 'இதோ ஆயனர் வருகிறார்!' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், 'ஒருவேளை அவருடன் சிவகாமியும் வருவாளோ!' என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றிக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அடுத்த கணத்தில், 'அவள் எதற்காக இங்கு வருகிறாள்?' என்ற எண்ணம் மனச் சோர்வை உண்டாக்கியது. இவ்விதம் அவர் மாறி மாறிக் கிளர்ச்சியும் சோர்வும் அடைவது அதிக நேரம் நீடித்திராதபடி இதோ ஆயனர் வாசற்படியண்டை வந்து விட்டார்! ஆகா! என்ன 'ஜல் ஜல்' சத்தம்; பாத சரத்தின் ஒலிபோல் இருக்கிறதே! அதோ, ஆயனருக்குப் பின்னால் வரும் பெண்? சந்தேகமென்ன சிவகாமியேதான்!
குமார சக்கரவர்த்தியின் கண்கள் சிவகாமியின் முகத்தை நோக்கின. சிவகாமியின் கண்களும் முதன்முதலில் மாமல்லரின் ஆவல் ததும்பிய கண்களைத்தான் சந்தித்தன. வாடியிருந்த சிவகாமியின் முகத்தில் ஒருகணம் புதுமலர்ச்சி காணப்பட்டது. ஆனால், ஒருகண நேரந்தான்! அடுத்த கணத்தில் அந்தச் செந்தாமரை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. தலை குனிந்து பூமியை நோக்கிய வண்ணம் சிவகாமி தன் தந்தையைப் பின் தொடர்ந்து அந்த மண்டபத்திற்குள்ளே நுழைந்தாள்.
நயன பாஷையில் நடைபெற்ற மேற்படி நாடகத்தை வேறு யாரும் கவனியாத வண்ணம் மண்டபத்துக்குள் அப்போது பெரும் கலகலப்பு ஏற்பட்டிருந்தது. பணிவுக்குப் பெயர்போன நாவுக்கரசர் பெருமான், ஆயனர் மண்டபத்துக்குள்ளே நுழைந்ததும் தானும் ஆசனத்தை விட்டு எழுந்து நாலு அடி நடந்து எதிர்கொண்டு, "வரவேணும்! சிற்ப சக்கரவர்த்தியே! வரவேணும்!" என்று உபசரித்து அழைத்தார். ஆயனர் இதைக் கண்டதும் விரைந்து முன்னால் வந்து, "அபசாரம்! அபசாரம்" என்று கூறி கொண்டே திருநாவுக்கரசரின் திருப் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். நாவுக்கரசர் ஆசனத்தைவிட்டு எழுந்தபோது அவருடன் எழுந்த சீடர்கள், நாவுக்கரசரும் ஆயனரும் அமர்ந்த பிறகு தாங்களும் தத்தம் இடத்தில் அமர்ந்தார்கள்.
எல்லாரும் உட்கார்ந்த பிறகும் சிவகாமி மட்டும் ஆயனருக்குப் பின்னால் தலைகுனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளைப் பார்த்த நாவுக்கரசர், "ஆகா! இந்தப் பெண் யார், ஆயனரே? தங்கள் குமாரி சிவகாமியா?" என்று கேட்க, ஆயனர் "ஆம், அடிகளே! தங்களைத் தரிசிக்கப் போகிறேன் என்று சொன்ன போது சிவகாமி 'நானும் வருகிறேன்' என்றாள்! அழைத்துக் கொண்டு வந்தேன்" என்றார். "மிக்க சந்தோஷம் உங்கள் குமாரியைப் பார்க்க வேண்டுமென்று நானும் மிக்க ஆவலாயிருந்தேன். நடனக் கலையிலே அவள் அடைந்திருக்கும் அபூர்வத் தேர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சமீபத்தில் அரங்கேற்றம் நடந்ததாமே? நான்தான் அச்சமயம் இல்லாமற் போய்விட்டேன்" என்று நாவுக்கரசர் கூறினார்.
"எனக்கும் அது மிக வருத்தமாயிருந்தது, சுவாமி! அன்று சிவகாமியின் நடனத்தைப் பார்த்துவிட்டு ருத்ராச்சாரியார் பிரமித்துப் போய்விட்டார். சிற்பம், சித்திரம், சங்கீதம் ஆகிய கலைகளுக்கெல்லாம் நடனக்கலைதான் ஆதாரம் என்பதை அன்றைக்குத்தான் அவர் ஒத்துக்கொண்டார். 'சிவகாமியின் நடனத்தைப் பார்த்த பிறகு சங்கீதக் கலையில் நான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதென்பதை அறிந்தேன்' என்று சபை நடுவில் வாய்விட்டுச் சொன்னார்..."
இவ்விதம் ஆயனர் கூறியபோது அவருடைய குரலிலும் முகத்திலும் பெருமிதம் கொந்தளித்தது. அப்போது வாகீசர், "ஆயனரே! சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய தெய்வக்கலைகளுக்கு ஆதாரமும் நடனந்தான்! அண்ட பகிரண்டங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் பெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயில்கிறார் அல்லவா?" என்று திருவாய் மலர்ந்தார். இதுவரை மௌனமாக இருந்த குமார சக்கரவர்த்தி, "சுவாமி! நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைப் பற்றிய தங்களுடைய பாடல் ஒன்றுக்கு, அன்று ஆயனர் மகள் அபிநயம் பிடித்தாள்; தாங்கள் அதை அவசியம் பார்க்க வேண்டும்!" என்றார்.
"ஆம், சுவாமி! தங்களுடைய மூன்று திருப்பாடல்களுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பதாயிருந்தாள். ஆனால், ஒரு பாடலுக்குத்தான் அபிநயம் பிடிக்க முடிந்தது. அரங்கேற்றம் நடுவில் நின்ற செய்தி கேட்டிருப்பீர்களே!" என்று ஆயனர் கூறியபோது, அதனால் ஏற்பட்ட வருத்தம் இன்னும் அவருக்குத் தீரவில்லையென்று தோன்றியது. "கேள்விப்பட்டேன், ஆயனரே! யுத்தத்தினால் சிவகாமியின் அரங்கேற்றம் மட்டுந்தானா தடைப்பட்டது? இன்னும் எத்தனையோ காரியங்கள் தடைபடும் போலிருக்கின்றன. உம்மை நான் அழைத்த காரியம் கூட அப்படித்தான்!" என்று வாகீசப் பெருமான் கூறினார். "சுவாமி! என்ன காரியமாக என்னை வரச்சொல்லிப் பணித்தீர்கள்?" என்று ஆயனர் கேட்டார்.
"நமது திருமடத்தை இந்த ஏகாம்பரர் சந்நிதியிலிருந்து திருமேற்றளிக்குக் கொண்டு போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த இடம் நகரின் மத்தியில் இருப்பதால் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு உகந்ததாயில்லை. ஆனால் திருமேற்றளியில் அமைதி குடிகொண்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள நந்தவனத்தில் மல்லிகை மலர்களும் கொன்றை மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. சந்தடி கூச்சல் ஒன்றும் கிடையாது. இறைவனைத் துதிப்பதற்கும் தமிழ் பயில்வதற்கும் திருமேற்றளி தக்க இடம்."
"பெருமானே! திருமேற்றளி இறைவன் மீது பாடல் ஏதாவது பாடப் பெற்றதோ?" என்று ஆயனர் கேட்க, நாவுக்கரசர் தமது சீடர்களைப் பார்த்தார். உடனே ஒரு சீடர் திருமேற்றளிப் பதிகத்திலிருந்து பின்வரும் பாடலைப் பாடினார்: "செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியிற் கரை யிலாத காஞ்சிமா நகர்தன் னுள்ளார் எல்லியல் விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே!" மேற்கண்ட பாடலைச் சீடர் இனிய குரலில் உருக்கமாய்ப் பாடிவந்தபோது நாவுக்கரசர் பெருமானின் கண்களில் நீர் ததும்பி நின்றது. திருமேற்றளிக் கோயிலில் மல்லிகையும் கொன்றை மலரும் சூடிச் சூரியனைப்போல் ஜோதிமயமாக விளங்கிய சிவபெருமானை மீண்டும் அகக் கண்ணால் அவர் நேருக்கு நேரே தரிசித்துப் பரவசமடைந்தவராகத் தோன்றினார். அந்தக் காட்சியை அங்கிருந்த மற்றவர்கள் பார்த்துப் பரவசமடைந்திருந்தார்கள்.
பாடல் முடிந்து சிறிது நேரம் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பின்னர், நாவுக்கரசர் பரவச நிலை நீங்கித் தம்மைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தார். உடனே ஆயனர், "அடிகளே! தாங்கள் உண்மையிலேயே நாவுக்கரசர்தான். தங்களுடைய திருவாக்கு அப்படி மகிமை வாய்ந்திருக்கிறது. தங்களுடைய பாடலில் இடம் பெற்று விட்டபடியால் இந்தக் காஞ்சி நகருக்கும் இதிலுள்ள திருமேற்றளிக்கும் இனி அழிவென்பதே இல்லை. தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடாலயத்திருப்பணியை மேற்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் துறைமுகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான திருப் பணியைத் துரிதமாகச் செய்து முடிக்கும்படி சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எதை முதலில் செய்வது என்று குமார சக்கரவர்த்தி ஆக்ஞை இடவேண்டும்" என்று கூறி, மாமல்லரை நோக்கினார்.
ஆயனருடைய கேள்விக்கு மாமல்லர் மறுமொழி கூறுவதற்குள், நாவுக்கரசர் சொல்லுவார்: "அதற்கு இப்போது அவசியமேயில்லை. சிற்பியாரே! தாங்கள் வரும்போதுதான் சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தை மாமல்லர் எனக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். யுத்தம் முடியும் வரையில் என்னைச் சிஷ்யர்களுடன் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உள்ள ஸ்தலங்களைத் தரிசித்து வரும்படி சக்கரவர்த்தி யோசனை கூறியிருக்கிறார். எனக்கும் வெகுகாலமாக அந்த ஆசை உண்டு. காஞ்சிக் கோட்டை ஒரு வேளை பகைவர் முற்றுகைக்கு இலக்கானாலும் ஆகலாம், அம்மாதிரி சமயங்களில் என் போன்ற துறவிகள் விலகியிருப்பதே நல்லது."
இவ்விதம் நாவுக்கரசர் கூறியதைக் கேட்ட நரசிம்மவர்மர் "அடிகளே! தாங்கள் இப்போது கூறிய அபிப்பிராயம் போற்றத்தக்கது. அதைச் சமண முனிவர்களும் புத்த பிக்ஷுக்களும் ஒப்புக் கொண்டு அரசியல் விஷயங்களில் தலையிடாமல் நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றார். புத்த பிக்ஷு என்ற வார்த்தையைக் கேட்டதும் ஆயனருக்குச் சுருக்கென்றது. அதோடு பரஞ்சோதியைப் பற்றிய நினைவும் வந்தது. "அடிகளே! ஒரு விஷயம் தெரிவிக்க மறந்துவிட்டேன். தங்களுடைய மடாலயத்தில் சேர்ந்து தமிழ் கற்பதற்காக ஒரு பிள்ளை சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியிலிருந்து வந்தான். திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து தங்களுக்கும் எனக்கும் அவன் ஓலை கொண்டு வந்திருந்தான். சித்திரக்கலை சம்பந்தமான ஒரு மகா இரகசியத்தை அறிந்து வருவதற்காக அவனை வடக்கே ஸரீ பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறேன்...."
"அவ்வளவு தூரமா அனுப்பியிருக்கிறீர்கள்? அங்கேயெல்லாம் யுத்தம் நடக்கும் இடமாயிற்றே? சிறு பிள்ளை என்று சொன்னீர்கள்?" என்று நாவுக்கரசர் சிறிது கவலையுடன் கேட்டார். "சிறு பிள்ளையாயிருந்தாலும் மகா வீரன் சுவாமி!" என்று ஆயனர் கூறி, அரங்கேற்றத்தன்று மதயானை மீது அவன் வேல் எறிந்ததை விவரித்தார். கடைசியாக, "பரஞ்சோதி திரும்பி வந்ததும் உடனே தங்களிடம் அனுப்பிவிடுகிறேன், சுவாமி!" என்றார் ஆயனர். "வேண்டாம் ஆயனரே! அவன் திரும்பிவரும் போது நான் எங்கே இருப்பேனோ, தெரியாது. எப்போது அவன் உங்கள் தொண்டில் ஈடுபட்டானோ, உங்களுடைய சீடனாகவே இருக்கட்டும். சிற்பக்கலை பயிலும் பேறு இலேசில் கிடைக்கக் கூடியதா? என்றும் அழிவில்லாத ஈசனுக்கும் என்றும் அழியாத கற்கோயில்களை அமைக்கும் கலையை காட்டிலும் சிறந்த கலை உலகில் வேறென்ன உண்டு...?"
ஆயனர் அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! சிற்பக் கலையைக் காட்டிலும் சிறந்த கலை வேறொன்று இருக்கிறது. எங்களுடைய கற்கோயில்கள் சிதைந்து உருத்தெரியாமல் அழிந்து போகலாம். ஆனால் தங்களுடைய கவிதைக் கோயில்களுக்கு ஒருநாளும் அழிவில்லை; கற்பகோடி காலம் அவை நிலை பெற்றிருக்கும்" என்றார். அப்போது குமார சக்கரவர்த்தி, "சற்று முன்னால் பேசி முடிவு செய்ததை இரண்டு பேரும் மறந்துவிட்டீர்களே? எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலையல்லவா?" என்று சொல்லவே, அங்கிருந்த எல்லாருடைய முகத்திலும் புன்னகை பூத்தது. ஆனால், சிவகாமி மட்டும் குனிந்த தலை நிமிராமலிருந்தாள்.
நாவுக்கரசர், "நல்லது, குமார சக்கரவர்த்தி! நாங்கள் மறந்து தான் போய்விட்டோம்! எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலைதான். தில்லையம்பலத்தில் ஆடும் பெருமான் முன்னால் நிற்கும் போது உள்ளமானது பொங்கிக் கவிதை வெள்ளமாய் வருவது போல் மற்ற மூர்த்தங்களுக்கு முன்னால் நிற்கும்போது வருவதில்லை!" என்று கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே! தங்கள் புதல்வியின் நடனத்தை நான் பார்க்க வேண்டாமா? தென்னாட்டுக்கு யாத்திரை சென்றால் திரும்பி எப்போது வருவேனோ தெரியாது. நாடெல்லாம் புகழும் சிவகாமியின் நடனக் கலையைப் பார்க்காமல் போக எனக்கு மனமில்லை. ஒரே ஒரு பாடலுக்கு அபிநயம் பிடித்துக் காட்டினாலும் போதும்!" என்றார்.
ஆயனர், "சுவாமி! சிவகாமிக்கு அத்தகைய பாக்கியம் கொடுத்து வைக்கவேண்டுமே?" என்று கூறி, தமக்குப் பின்னாலிருந்த சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். அவள் முகமலர்ச்சியின்றித் தலை குனிந்த வண்ணம் இருப்பதைக் கண்டதும் ஆயனருக்குச் சிறிது வியப்பு உண்டாயிற்று. இதையெல்லாம் கவனித்த மாமல்லர், "ஒருவேளை நான் இங்கு இருப்பதால் சிவகாமி ஆட விரும்பாமலிருக்கலாம். சுவாமி விடை கொடுங்கள்! போய் வருகிறேன்!" என்று நாவுக்கரசரைப் பார்த்துக் கூறினார்.
இந்த வார்த்தை காதில் விழுந்ததும் சிவகாமி பளிச்சென்று துள்ளி எழுந்து, நடனத்துக்கு ஆயத்தமாக நின்று, "அப்பா! எந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும்!" என்று கேட்டது அழகிய மான்குட்டி ஒன்று குயிலின் குரல் பெற்று அமுதத் தமிழ் மொழியின் மழலை பேசுவதுபோல் தொனித்தது. "பூவணத்துப் புனிதனார் முதலில் தோன்றட்டுமே!" என்று ஆயனர் பெருமிதம் தோன்றக் கூறினார். நாவுக்கரசர், கலை அரசர், இளவரசர் ஆகிய மூன்று மன்னர்களின் முன்னிலையில் சிவகாமியின் நடனக் கலை அரங்கேற்றம் இரண்டாவது முறை ஆரம்பமாயிற்று.
மந்த மாருதத்தில் மிதந்து வரும் தேன் வண்டின் ரீங்காரம் போன்ற குரலில் சிவகாமி பின்வரும் திருத் தாண்டகத்தைப் பாடிக்கொண்டு, அதன் பொருளுக்கேற்ப அங்கங்களின் சைகைகளினாலும் முகபாவத்தினாலும் அபிநயம் பிடித்தாள். பாடலில் ஒவ்வொரு வரியிலும், 'தோன்றும்' 'தோன்றும்' என்று வந்த போது, சிவகாமியின் பாதரசங்கள் 'ஜல்' 'ஜல்' என்று தாளத்துக்கிசைய ஒலித்தன. "வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணிதோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வைதோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்துதோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க் கே." இந்த தெய்வீகமான பாடலைப் பாடிக்கொண்டு சிவகாமி அதன் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தபோது, அங்கிருந்தவர்கள் எல்லாரும் தங்களை மறந்தார்கள். தாங்கள் இருக்குமிடத்தை மறந்தார்கள். அங்கு நடப்பது என்ன என்பதையும் மறந்தார்கள்.
சற்று முன்னால் நாவுக்கரசரின் சீடர் பாடியபோது அவர்களுடைய செவிகளில் இனிய தமிழ்ச் சொற்கள் நின்றன. அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கின. அப்பாடலை அவர் அனுபவித்து உருகுவதைப் பார்த்து அவர்கள் மனமும் கசிந்தன. சிவகாமி அபிநயம் பிடித்தபோது அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கவில்லை. குமார சக்கரவர்த்தியையோ, ஆயனச் சிற்பியாரையோ அவர்கள் காணவில்லை. அந்த மடாலயத்தின் சுவர்களோ, தூண்களோ அவற்றில் அமைந்திருந்த சிற்பங்களோ, சித்திரங்களோ அவர்கள் கண்ணில் படவேயில்லை.
அவர்கள் கண்முன்னால் பாடி ஆடி அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த சிவகாமியைக்கூட அவர்கள் பார்க்கவில்லை? பின் அவர்கள் யாரை அல்லது எதனைப் பார்த்தார்கள்? சாக்ஷாத் சிவபெருமானையே தங்கள் கண் முன்னால் தத்ரூபமாக நேருக்கு நேரே பார்த்தார்கள்! அவருடைய கரத்தில் தோன்றிய திரிசூலத்தையும், அவருடைய வளர் சடைமேல் இயங்கும் இளமதியையும் பார்த்தார்கள்.
அவருடைய திருமிடற்றில் கொன்றை மாலையைப் பார்த்தார்கள். காதிலே வெண் குழையைப் பார்த்தார்கள். திருநீறு பொழியும் திருமேனி முழுவதையும் பார்த்தார்கள். அந்தத் தெய்வீகக் காட்சியில் தங்களை மறந்தார்கள்; இந்தப் பூவுலகையே மறந்தார்கள். பூவுலகிலிருந்து கைலாசத்துக்கு அவர்கள் போய்விட்டார்கள். பாட்டும் அபிநயமும் நின்ற சிறிது நேரத்துக்குப் பிறகு தான் எல்லாரும் சுய உணர்வு பெற்றுப் பூவுலகிற்கு வந்து சேர்ந்தார்கள்.
சுய உணர்ச்சி தோன்றியதும், அனைவருடைய கவனமும் இயல்பாக நாவுக்கரசர்பால் சென்றது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகி வெண்ணீறு அணிந்த திருமேனியை நனைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்தனை நேரமும் பாவனைக் கண்ணால் தாங்கள் தரிசித்துக் கொண்டிருந்த சிவபெருமான் இந்த மகான்தானோ என்று அவர்களில் பலர் எண்ணினார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் நாவுக்கரசர் தழுதழுத்த குரலில், 'ஆயனரே! திருக்கயிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானைத் தங்கள் குமாரி எங்கள் முன்னால் பிரத்தியட்சமாகத் தோன்றச் செய்துவிட்டாள்!" என்றார். ஆயனரும் கண்களில் ஆனந்தக் காண்ணீர் ததும்ப, "எல்லாம் தங்கள் ஆசீர்வாதந்தான், சுவாமி!" என்று கூறி சிவகாமியைப் பார்த்து, "இன்னும் ஒரு பாட்டுக்கு அபிநயம் பிடிக்கிறாயா, அம்மா! இது அகத்துறைப் பாடலாக இருக்கட்டுமே!" என்றார்.