உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இதோ ஆண்டவரின் புயல்! அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்." - எரேமியா 30:23

எரேமியா (The Book of Jeremiah)

[தொகு]

அதிகாரங்கள் 29 முதல் 30 வரை

அதிகாரம் 29

[தொகு]

நாடுகடத்தப்பட்டோர்க்கு எரேமியா எழுதிய மடல்

[தொகு]


1 எருசலேமிருந்து பாபிலோனுக்கு
நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள்
எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள்,
இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும்
இறைவாக்கினர் எரேமியா
எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.
2 அரசன் எக்கோனியா, அரச அன்னை,
அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள்,
தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர்
எருசலேமை விட்டுச் சென்ற பின்னர், [1]
3 சாப்பானின் மகன் எலாசா,
இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப்
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம்
யூதாவின் அரசன் செதேக்கியா
அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.
4 அதன் சொற்களாவன:
"இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான்
எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு
நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே:
5 வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்;
தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.
6 பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள்.
உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்;
உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்!
இவ்வாறு அவர்களும் தங்களுக்குப்
புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும்.
அங்கே பல்கிப் பெருகுங்கள்;
எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
7 உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ,
அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்;
அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;
ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான்
உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.
8 இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே:
உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும்
குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு
பார்த்துக்கொள்ளுங்கள்.
9 அவர்கள் காணும் கனவுகளை
நீங்கள் பொருட்படுத்தாதீர்கள்.
ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப்
பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.
நான் அவர்களை அனுப்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.


10 "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
'பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின்
நான் உங்களைச் சந்திக்க வருவேன்;
உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி
உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன். [2]
11 ஏனெனில் உங்களுக்காக
நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ!
அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும்
உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி,
கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
12 நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்!
அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.
13 நீங்கள் என்னைத் தேடுவீர்கள்;
உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது
நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். [3]
14 ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்,
என்கிறார் ஆண்டவர்.
அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்;
நான் உங்களை விரட்டியடித்துள்ள
எல்லா மக்களிங்களினின்றும்
இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ
அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.


15 'ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில்
இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்' என்று சொல்கிறீர்கள்.
16 ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும்
அரசனைப் பற்றியும்,
இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும்,
உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள்
சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே:
17 படைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
இதோ! அவர்கள் மீது வாள், பஞ்சம்,
கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன்.
தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன
காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன்.
18 வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு
அவர்களைப் பின்தொடர்வேன்.
உலகின் எல்லா அரசுகளும் அவர்களை
அருவருக்கும்படி செய்வேன்;
நான் அவர்களை விரட்டியடித்துள்ள
எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச்
சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்
கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன்.
19 ஏனெனில் என் ஊழியர்களான
இறைவாக்கினர்களை நான் அவர்களிடம்
திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும்,
அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.
20 எனவே, எருசலேமிலிருந்து
பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும்
நீங்கள் அனைவரும்
ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்."


21 "என் பெயரால் உங்களுக்குப் பொய்யை
இறைவாக்காக உரைத்து வரும்
கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும்,
மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும்
இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே:
இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய
மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன்.
அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே
வெட்டி வீழ்த்துவான்.
22 அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு,
பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும்
'பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த
செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும்
ஆண்டவர் உன்னை ஆக்குவாராக' என்று சாபமிடுவர்.
23 ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில்
மதிகேடானதைச் செய்துள்ளார்கள்;
பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்;
நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும்,
அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள்.
நானோ இவற்றை எல்லாம் அறிவேன்;
இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்."


24 நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம்
நீ சொல்லவேண்டியது:
25 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
நீ உன் பெயரால் மடல்கள் எழுதி,
எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும்
மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவுக்கும்
மற்ற குருக்கள் அனைவருக்கும்
அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.


26 செப்பனியாவுக்கு நீ எழுதியது:
ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய்
இருக்கும் பொருட்டும்,
இறைவாக்கினர்போல் நடிக்கும்
எந்தப் பைத்தியக்காரனையும்
தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும்
குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக
ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார்.
27 அப்படியிருக்க,
உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனத்தோத்தைச் சார்ந்த
எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது
விட்டு வைத்திருக்கிறீர்?
28 இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு,
'உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்;
எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்;
தோட்டங்கள் அமைத்து,
அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்'
என்று செய்தி அனுப்பியுள்ளான்.


29 இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி,
குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.
30 அப்பொழுது ஆண்டவரின் வாக்கு
எரேமியாவுக்கு அருளப்பட்டது:
31 நாடு கடத்தப்பட்டோர் எல்லாருக்கும்
நீ எழுதி அனுப்ப வேண்டியது:
நெகலாமியனான செமாயாவைப்பற்றி
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நான் அனுப்பாதிருந்தும்
செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து,
அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான்.
32 எனவே ஆண்டவர் கூறுகிறார்:
இதோ! நெகலாமியனான செமாயாவையும்
அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன்.
இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது.
என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை
அவன் காணமாட்டான்;
ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக
மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,"
என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 29:1-2 = 2 அர 24:12-16; 2 குறி 36:10.
[2] 29:10 = 2 குறி 36:21; எரே 25:11; தானி 9:2.
[3] 29:13 = இச 4:29.


அதிகாரம் 30

[தொகு]

விடுதலை பற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும்

[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு
மீண்டும் அருளப்பட்டது:
2 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம்
ஏட்டுச் சுருளில் எழுதிவை.
3 ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்.
அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும்
யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று
அழைத்து வருவேன்;
அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு
அவர்களைத் திரும்பிவரச் செய்வேன்.
அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள்,
என்கிறார் ஆண்டவர்."


4 இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து
ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:


5 ஆண்டவர் கூறுகின்றார்:
திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்;
அது அச்சத்தின் ஒலி;
சமாதானத்தின் ஒலி அன்று.


6 'ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா?'
என்று கேட்டுப் பாருங்கள்.
அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்
பேறுகாலப் பெண்ணைப்போலத்
தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை
நான் ஏன் காண்கிறேன்?
எல்லா முகங்களும் மாறிவிட்டன;
அவை வெளிறிப்போய்விட்டன!


7 அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;
மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை.
யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்;
ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.


8 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும்
அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்;
அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.
9 அயல்நாட்டவர் அவனை மீண்டும்
அடிமைப்படுத்தமாட்டார்.
ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும்,
அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும்
மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!


10 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே!
இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர்.
தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்;
அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன்.
யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்;
அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.


11 நான் உன்னோடு இருக்கின்றேன்;
உன்னை மீட்பதற்காக உள்ளேன்,
என்கிறார் ஆண்டவர்.
எந்த மக்களினத்தார் இடையே
நான் உன்னைச் சிதறடித்தேனோ
அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்;
உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்;
உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்;
உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்;
உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன். [*]


12 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:
உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது;
உனது புண் புரையோடிப்போனது.


13 உனக்காக வாதிட எவனும் இல்லை;
உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை;
உன்னைக் குணப்படுத்தவே முடியாது.


14 உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்;
உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;
மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்;
கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்;
ஏனெனில் உனது குற்றம் பெரிது;
உன் பாவங்களோ எண்ணற்றவை.


15 நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்?
உனது வேதனையைத் தணிக்கமுடியாது;
ஏனெனில் உனது குற்றமோ பெரிது;
உன் பாவங்களோ எண்ணற்றவை;
எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.


16 ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்;
உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;
உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும்,
கொள்ளையடிக்கப்படுவர்;
உன்னைச் சூறையாடுவோர் அனைவரும்,
நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.


17 நான் உனக்கு நலம் அளிப்பேன்;
உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,
என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில், 'தள்ளப்பட்டவள்' என்று
உன்னை அழைத்தார்கள்;
'இந்தச் சீயோனைப் பற்றிக்
கவலைப்படுவார் யாருமிலர் ", என்றார்கள்.


18 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்:
அடிமைத்தனத்தினின்று நான்
யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்;
அவனுடைய உறைவிடங்கள்மீது
நான் இரக்கம் காட்டுவேன்;
அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர்
மீண்டும் கட்டி எழுப்பப்படும்;
அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.


19 அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;
மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும்.
அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்;
அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள்.
நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;
இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.


20 அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்;
அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்;
அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன்.


21 அவர்களின் தலைவன்
அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;
அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;
அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;
அவனும் என்னை அணுகிவருவான்;
ஏனெனில், என்னை அணுகிவர வேறு
யாருக்குத் துணிவு உண்டு?,
என்கிறார் ஆண்டவர்.


22 நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;
நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.


23 இதோ ஆண்டவரின் புயல்!
அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும்.
அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.


24 ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள
திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி
நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது;
வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.


குறிப்பு

[*] 30:10-11 = எரே 46:27-28.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 31 முதல் 32 வரை