அலை ஓசை/புயல்/கடல் பொங்கிற்று
ராகவன் அந்த அறையில் வாசற்படி வரையில் சென்று கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். மச்சுப் படிகளில் சூரியா நிற்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டான். பிறகு ஜன்னல் வழியாக வீதியில் எட்டிப் பார்த்தான். சூரியா வீதியில் போய்க் கொண்டிருக்க கண்டான்.
திரும்பி வந்து தாரிணியின் முன்னால் நாடக பாத்திரத்தைப் போல் நின்று கொண்டு, "தாரிணி! உன்னிடம் தனிமையில் நான் என்ன சொல்ல விரும்பினேன் என்பது உனக்குத் தெரியவில்லையா? உண்மையாகவே என் மனோ நிலையை நீ அறிந்து கொள்ளவில்லையா? அல்லது தெரிந்திருந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்கிறாயா?" என்று கேட்டான்.
"தங்களுடைய மனோ நிலை எனக்குத் தெரிந்திருந்ததானால், என்னுடைய மனமும் தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படியென்றால், பேச்சுக்கு அவசியமில்லையே? சொல்லுவதற்கும் கேட்பதற்கும் ஒன்றும் இராதே?" என்றாள் தாரிணி.
"இல்லை; உன்னுடைய மனதை நான் அறியக்கூடவில்லை. தாரிணி! அப்படி ஒரு காலம் இருந்தது. உன்னுடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றுவதற்குள்ளே என்னுடைய மனதில் அது பிரதிபலித்தது. அவ்விதமே என் மனமும் உனக்குத் தெரிந்திருந்தது. நான் நினைப்பேன்; அதை நீ சொல்லுவாய். நீ நினைப்பாய்; அந்த க்ஷணமே அதை நான் காரியத்தில் செய்வேன். இப்போது அப்படி இல்லை. உன் மனதை நான் அறிய முடியவில்லை. ஏதோ ஒரு மாயத் திரை என் மனதை மூடிக் கொண்டிருக்கிறது. அது உன் மனதில் உள்ளதை நான் காண முடியாமல் தடை செய்கிறது. உனக்கும் எனக்கும் மத்தியில் அந்தத் திரையைத் தொங்கவிட்ட சண்டாளப் பாதகன் யார் என்று மட்டும் தெரிந்தால்..." என்று ராகவன் சீறினான்.
"ஐயா! அந்த மாயத் திரையை வேறு யாரும் தொங்கவிடவில்லை. தாங்களே தான் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரோ என்று எண்ணிக் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்? பிரயாணம் கிளம்புவதற்கு முன்னால் எனக்கும் சில காரியங்கள் பாக்கி இருக்கின்றன. தயவு செய்து தாங்கள் சொல்ல விரும்பியதைச் சீக்கிரம் சொல்லி விட்டால் நல்லது."
"சொல்லுகிறேன்; பேஷாகச் சொல்லுகிறேன். சொல்லுவதற்குத் தான் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். சுற்றி வளைத்து மூக்கைத் தொட நான் விரும்பவில்லை. மனதிலிருப்பதை அப்படியே பட்டவர்த்தனமாய்ச் சொல்லி விடுகிறேன். தாரிணி! நீ இல்லாமல் இனிமேல் ஒரு நிமிஷமும் என்னால் உயிர் வாழ முடியாது. மூன்று மாதத்திற்கு முன்னால் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் உன்னை நான் பார்த்ததிலிருந்து என்னுடைய மனது என் வசத்தில் இல்லை. தாஜ்மகாலில் உன்னைப் பார்த்து இரண்டு மூன்று நாள் சேர்ந்து வசித்தது முதல் பித்துப் பிடித்தவன் போலாகிவிட்டேன். இந்த மூன்று மாத காலமாக எனக்கு எந்த வேலையிலும் மனம் செல்வதில்லை. ஆபீஸிலும் சரியாக வேலை செய்கிறதில்லை. என் பேரில் அளவில்லாத அபிமானம் கொண்ட துரை கூட அடிக்கடி என் பேரில் குற்றம் கூறுகிறார். 'உனக்கு என்ன வந்து விட்டது?' என்று கேட்கிறார். சிம்லாப் பயணத்தைக் கூட உனக்காகவே நான் நிறுத்தி விட்டேன். நீ டில்லியில் இருக்கும் போது சிம்லாவுக்குப் போய் என்ன சந்தோஷத்தைக் காண போகிறேன் என்று எண்ணித் தான் போகவில்லை. சிம்லாவுக்குப் போனால் என்ன? காஷ்மீருக்குப் போனால் என்ன? நீ இல்லாமல் எங்கே போனாலும் எனக்கு எந்தவித சந்தோஷமும் கிட்டப் போவதில்லை. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, தாரிணி நாம் கலியாணம் செய்து கொண்டதும் 'ஹனிமூன்' கொண்டாடக் காஷ்மீருக்குப் போவதாகத் திட்டம் போட்டிருந்தோமே, அது ஞாபகம் இருக்கிறதா?..."
"நண்பரே! தங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து அந்தப் பழைய கதைகளை இப்போது சொல்ல வேண்டாம். அதையெல்லாம் ஒரு பழைய கனவு என்று எண்ணி மறந்து விடுங்கள்."
"நீ மறந்து விட்டாய் தாரிணி! அது நன்றாய் தெரிகிறது. நீ அதிர்ஷ்டக்காரி; அதனால் மறந்துவிட்டாய். ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. அந்தப் பழைய நினைவுகள் என் மனதை ஓயாமல் அரித்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த நினைவுகள் எனக்கு இன்பத்தை அளிக்கின்றனவா, துன்பத்தை அளிக்கின்றனவா என்றே சொல்ல முடியவில்லை. பம்பாயில் ஒரு நாள் நாம் சௌபாத்தி கடற்கரையில் உலாவிவிட்டு மலபார் குன்றிலுள்ள தொங்கும் தோட்டத்துக்குப் போனோமே, அது உனக்கு நினைவிருக்கிறதா, தாரிணி? அதைக் கூட மறந்து விட்டாயா? தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு கொடி வீட்டின் கீழே கிடந்த பெஞ்சிப் பலகையில் உட்கார்ந்தோம். அந்தக் கொடி வீட்டின் மீது படர்ந்திருந்த கொடிகளிலே பல வர்ண இலைகளும் தளிர்களும் அடர்ந்து தழைத்திருந்தன. அந்த இலைகள், தளிர்கள், மலர்களோடு கலந்து பல வர்ணப் பட்டுப் பூச்சிகள் காணப்பட்டன. அந்தப் பட்டுப் பூச்சிகள் படபடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு எழுந்து ஒரு நிமிஷம் பறப்பதும் மறுபடியும் உட்காருவதுமாயிருந்தன. பட்டுப் பூச்சிகளில் ஒன்று உன்னுடைய தோளின் மீது உட்கார்ந்தது. அதைப் பார்த்த நான், 'தாரிணி! இந்தப் பட்டுப் பூச்சியைப் பார்! உன்னை ஒரு பூங்கொடி என்று எண்ணிக்கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறது. ஆனால் அது அவ்வளவு பெரிய தவறு செய்து விட்டதாகச் சொல்ல மாட்டேன்!' என்றேன். உடனே நீ உன்னுடைய உடம்பைச் சிலிர்த்தாய். பட்டுப் பூச்சி பறந்து போயிற்று. 'பூங்கொடி என்பது ரொம்பப் பொருத்தம். இப்போது நீ உடம்பைச் சிலிர்த்தபோது தென்றல் காற்றில் பூங்கொடி அசைவது போலவே இருந்தது' என்றேன். அதற்கு நீ 'தென்றல் காற்றோடு போயிற்றே? புயற் காற்றாயிருந்தால் கொடியின்பாடு ஆபத்து தான். கவிஞர்கள் பெண்களைக் 'கொடி' என்று வர்ணிப்பது ஒன்றும் எனக்குப் பிடிப்பதில்லை. கொடியைப் போல் அவ்வளவு பலவீனமாக இருந்துவிட்டால் இந்த உலகத்தில் பெண்கள் எப்படிச் சுதந்திரமாக வாழ முடியும்?' என்று கேட்டாய். 'பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது தான். ஆனால் பெண்களுக்குச் சுதந்திரம் எதற்காக? கொடியைத் தாங்குவதற்கு மரம் இருக்கும் போது கொடி எதற்காக தனித்து நிற்க வேண்டும்?' என்று நான் சொன்னேன். அதற்கு நீ 'என்னை வேணுமானால் கொடி என்று சொல்லுங்கள்; செடி என்று வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் உங்களை மரம் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்' என்றாய். 'உன்னைப் போன்ற ஒரு கொடியைத் தாங்கும் பாக்கியம் கிடைத்தால் நான் இந்த நிமிஷமே மரமாகி விடத் தயார். என்ன சொல்கிறாய்?' என்றேன் நான். 'ஜாக்கிரதை! அருகில் நெருங்க வேண்டாம்; உங்களை மரமாகும்படி சபித்து விடுவேன்!' என்றாய் நீ. 'எங்கே! சபித்து விடு! உன் சக்தியைப் பார்க்கலாம்!' என்று நான் கூறினேன். நீ கோபம் கொண்டதாகப் பாசாங்கு செய்து என் முகத்தை உற்று நோக்கினாய். நானும் அசையாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். நேரமாக ஆக, நம்முடைய முகங்கள் நெருங்கி வந்தன. முகத்தை முகம் பார்ப்பதற்குப் பதிலாகக் கண்களைக் கண்கள் வெகு சமீபத்தில் நின்று உற்றுப் பார்த்தன. கடைசியாக நீ தோல்வியுற்றாய். சட்டென்று எழுந்து நின்று, 'இந்த மரம் பொல்லாத மரமாயிருக்கிறது. நின்ற இடத்தில் நிற்காமல் நெருங்கி நெருங்கி வருகிறது' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாய். இருவரும் கை கோத்துக்கொண்டு அவ்விடமிருந்து கிளம்பினோம். மலபார் குன்றின் தோட்டத்திலிருந்து சாலையில் இறங்கியபோது அஸ்தமித்து விட்டது. கீழே பம்பாய் நகரின் லட்சக்கணக்கான தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு ஜொலித்தன. உலகமே இன்பமயமாகத் திகழ்ந்தது. அச்சமயத்தில் பக்கத்திலிருந்த ஒரு மாளிகையிலிருந்து கிராமபோன் கீதம் ஒன்று வந்தது. 'பிரேம நகர்மே பனாவூங்கிகர்', என்னும் பாட்டு அது. சினிமா நடிகர் ஸைகல் பாடியது. 'இந்தப் பாட்டு நமக்காகத்தான் பாடப்பட்டது போலிருக்கிறது. பிரேமை என்னும் நகரத்திலேயே நாமும் நம்முடைய வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்' என்றேன் நான். தாரிணி! இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா? நான் இப்போது சொன்ன பிறகாவது நினைவு வருகிறதா! அல்லது என்னமோ பைத்தியக்காரன் உளறுகிறான் என்று அலட்சியம் செய்து வேறு எதையாவது பற்றி எண்ணிக் கொண்டிருந்தாயா?"
இந்த நெடிய பேச்சைக் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு வந்த தாரிணியின் உள்ளம் கனிந்து போயிற்றோ என்னவோ, தெரியாது. பளிச்சென்று அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தயங்கித் தடுமாறிக் கூறினாள்:- "நீங்கள் சொல்லுவதையெல்லாம் கவனமாகக் கேட்டு வந்தேன். அவ்வளவும் எனக்கும் நினைவு இருக்கிறது. ஒன்றும் மறந்து போகவில்லை. ஆனால் அப்போது நாம் இருவரும் செய்த தவறு இப்போது எனக்குத் தெரிகிறது. பிரேம நகரம் என்பதாக உண்மையில் ஒன்று கிடையாது. அது வெறும் மாயா நகரம். கவிகளின் கற்பனைச் சித்திரம். பிரேம நகரம் என்பது உண்மையாக இருந்தாலும் அந்த நகரத்தில் வீடு கட்டிக் கொள்ள இப்போது நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாகச் சேவா நகரத்தில் வீடு கட்டிக் கொண்டு வாழ விரும்புகிறேன். ராகவன், நான் பார்த்ததையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தால், என்னுடைய அனுபவமெல்லாம் உங்களுக்கும் ஏற்பட்டிருந்தால், என்னைப் போலவே நீங்களும் நினைப்பீர்கள். பிரேமை காதல் என்னும் பிரமைகளில் மனதைச் செலுத்த மாட்டீர்கள். இந்த உலகத்தில் வாழும் மக்களின் துன்பத்தை ஒரு அணுவளவேனும் நம்மால் குறைக்க முடியுமா என்று என்னைப் போலவே அல்லும் பகலும் சிந்திப்பீர்கள்."
"தாரிணி! இது என்னப் பேச்சுப் பேசுகிறாய்? உலகத்து மக்களின் துன்பத்தை உன்னாலும் என்னாலும் குறைத்து விட முடியுமா? நீயும் நானும் கடவுளைவிடச் சக்தி வாய்ந்தவர்களா? கடவுளுடைய நியதியால் மனிதர்கள் இன்பமோ துன்பமோ அடைகிறார்கள். அவரவர்களுக்குத் தனித்தனியே கடவுள் வழி வகுத்துவிட்டிருக்கிறார். அந்தந்த வழியில் அவரவர்களும் போய்த் தானே ஆகவேண்டும்? உலகத்தை நாம் சீர்திருத்திவிட முடியும் - உலகத்து மாந்தரின் துன்பத்தைக் குறைத்து விட முடியும் - இன்பத்தைப் பெருக்கிவிட முடியும் என்று நினைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அகம்பாவம்? அந்த மடையன் சூரியாவைப்போல் நீயும் பேசுகிறாயே? அவனிடந்தான் கற்றுக் கொண்டாயா?" என்று நிதானத்தை இழந்து பதட்டமாகப் பேசினான் ராகவன்.
ஆனால் தாரிணி நிதானம் இழக்கவில்லை; பதட்டம் அடையவும் இல்லை. "ஐயா! எதற்காக இவ்வளவு படபடப்பாய்ப் பேசுகிறீர்கள்? சூரியாவின் பெயரை இதில் இழுக்க வேண்டியதேயில்லை. நான் அவரைச் சந்திப்பதற்குப் பல நாளைக்கு முன்பே சில அனுபவங்களைப் பெற்றேன்; சில முடிவுகளுக்கு வந்தேன். கடவுள் சிருஷ்டித்த உலகத்தை அபிவிருத்தி செய்து விடலாம் என்ற அகம்பாவத்தினாலோ, விதியை மாற்றி விடலாம் என்ற அசட்டு நம்பிக்கையினாலோ நான் தொண்டு வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. துன்புற்றவர்களுக்குத் தொண்டு செய்வதிலேதான் என் மனம் இன்பத்தை அடைகிறது; நிம்மதியைக் காண்கிறது. வேறுவித வாழ்க்கையில் என் மனம் செல்லவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? கடவுள் அவரவர்களுக்குத் தனித்தனியே வழி வகுத்து விட்டிருக்கிறார் என்று தாங்களே சற்று முன் சொன்னீர்கள். தங்களுக்கு வேறு வழியும் எனக்கு வேறு வழியும் ஆண்டவன் வகுத்திருக்கிறார். அவரவர்களுடைய வழியில்தானே அவரவர்கள் போக வேண்டும்? நம்முடைய வழிகள் வெவ்வேறு என்பதைத் தங்களை முதன் முதலில் சந்தித்த காலத்தில் நான் தெரிந்து கொள்ளவில்லை. அந்த நாளிலே ஏதோ ஒரு மாயத்திரை என் அறிவை மூடியிருந்தது. திரை விலகியதும் உண்மையைக் கண்டேன். தயவு செய்து மன்னித்து விடுங்கள். என்னை என் வழியில் போக விடுங்கள்."
"ஒரு நாளும் முடியாது உன்னை இப்போது தான் மாயை வந்து மூடியிருக்கிறது. அந்த நாளில் நீ கண்டது தான் உண்மை. உன்னுடைய வழி வேறு, என்னுடைய வழி வேறு என்பதும் தவறு. இந்து தர்மத்திலே புருஷனுடைய வழி தான் ஸ்திரீயின் வழி, ஸ்திரீக்குத் தனி வழி கிடையாது."
"அவ்விதம் பரிபூரணமாய் நம்பித் தங்களைத் தெய்வத்துக்கும் மேலாக மதித்துப் போற்றுகிற ஒரு பெண்ணைத் தாங்கள் மனைவியாகப் பெற்றிருக்கிறீர்கள். அது தங்களுடைய பாக்கியம். ராகவன்! கொஞ்சம் யோசித்துப் பார்த்துச் சொல்லுங்கள். என்னிடம் காதலைப்பற்றி பேசும்போது தங்களுக்குச் சீதாவின் நினைவே கிடையாதா? நிர்க்கதியாகத் தங்களையே நம்பி வந்திருக்கும் அந்தப் பேதைப் பெண் மீது உங்களுக்கு இரக்கம் கொஞ்சமும் இல்லையா? அவளுக்குத் துரோகம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?"
"ஆ! துரோகத்தைப் பற்றியா பேசுகிறாய்? துரோகம் யாருக்கு யார் செய்தார்கள்? - எனக்கும் சீதாவுக்கும் சேர்ந்து நீ துரோகம் செய்தாய். தாரிணி! உன்னைப் பரிபூரணமாக நம்பியிருந்த என்னை நட்டாற்றில் விட்டுவிட்டுச் சென்னையிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனாய். தப்பர்த்தத்துக்கு இடமாயிருந்த ஒரு முட்டாள் கடிதத்தையும் விட்டுவிட்டுப் போனாய். அதுவும் வேண்டுமென்று நீ செய்த சூழ்ச்சிதானோ என்னமோ, தெரியாது. அதோடு உன் துரோகம் முடிந்ததா? இல்லை! அப்புறம் பீஹாரிலிருந்து பூகம்பத்தின் பிளவில் விழுந்து மாண்டாய் என்று நான் நம்பும்படியாகக் கடிதம் எழுதப் பண்ணினாய். இம்மாதிரியெல்லாம் நீ செய்த துரோகங்களினாலே தான் நான் சீதாவை மணக்கும்படி நேர்ந்தது..."
"நான் செய்தது துரோகமாகவேயிருக்கட்டும். தக்க காரணத்தோடு நான் அவ்விதம் செய்தேன். ஆனால் சீதாவையும் தாங்கள் மற்றவர்களைப் போல் சாதாரணமாய்க் கலியாணம் செய்து கொண்டு விடவில்லையே? வேறு ஒரு பெண்ணைப் பார்க்கப் போன இடத்தில் சீதாவைப் பார்த்து..."
"ஆமாம்; இவளைப் பார்த்து மோகித்துக் கலியாணம் செய்து கொண்டு விட்டேன்; அப்படி உன்னிடம் சீதா பெருமை அடித்துக் கொண்டாளாக்கும்! இதிலிருந்து அவளுடைய பட்டிக்காட்டுத்தனத்தை நீயே தெரிந்துகொள்ளலாம். தாரிணி! சில சமயம் சீதாவை நான் வைஸ்ராய் மாளிகைப் பார்ட்டிகளுக்கும் மற்றும் பெரிய உத்தியோகஸ்தர்கள் கொடுக்கும் பார்ட்டிகளுக்கும் அழைத்துப் போகிறேன். அழைத்துப் போய் விட்டு ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எந்தச் சமயத்தில் அவள் என்ன தவறு செய்வாளோ? பிளேட்டைக் கீழே போட்டு உடைத்து விடுவாளோ, - மேலே டீயைக் கொட்டிக் கொண்டு விடுவாளோ, - யாரிடம் என்ன உளறிவிடுவாளோ என்று ஒவ்வொரு நிமிஷமும் எனக்குக் கதிகலக்கமாகவேயிருக்கும். அப்போதெல்லாம் உன்னை நினைத்துக் கொள்வேன். நீ மட்டும் என்னோடு புது டில்லிப் பார்ட்டிகளுக்கு வந்தால்..."
"நீங்கள் நினைப்பது முற்றும் தவறு பார்ட்டிகளில் நடந்து கொள்வதில், சீதாவைவிட நான் மோசமாயிருப்பேன். நாகரிக நடை உடை பாவனை ஒன்றுமே எனக்குத் தெரியாது...."
"உன் விஷயம் வேறு, தாரிணி! பார்ட்டிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரே நாளில் உனக்கு நான் கற்றுக் கொடுத்து விடுவேன். அப்படியே நீ ஏதாவது தவறு செய்தாலும் அதனால் எனக்கு அவமானம் ஒன்றும் ஏற்படாது. சீதா ஏதேனும் தவறு செய்தால் அதைப் பார்த்து நாலு பேர் சிரிப்பார்கள். நீ செய்தால் அதுதான் புது நாகரிகம் என்று நினைத்துக் கொள்வார்கள். காதில் அணிந்துகொள்ளும் லோலக்கை நீ மூக்கில் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு நாள் வந்தால் மறுநாள் எல்லோரும் அப்படியே செய்வார்கள். நீ புடவைத் தலைப்பில் டீயைக் கொட்டிக் கொண்டால், அதைப் பார்த்து அவ்வளவு பேரும் டீயைக் கொட்டிக் கொள்வார்கள். இதெல்லாம் அவரவர்களுக்கு இறைவன் அளித்த பாக்கியம்; ஒருவரைப் பார்த்து ஒருவர்..."
"அதைத்தான் நானும் சொல்கிறேன், சீதா தாங்கள் இழுத்த இழுப்புக்கு வருகிறாள். பார்ட்டிகளுக்கும் வருகிறாள். நானோ பார்ட்டிகளுக்கே வரமாட்டேன். இத்தனைக்குப் பிறகும் என்னுடைய இயல்பை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனாலும் நாம் சேர்ந்து வாழ முடியும் என்று சொல்கிறீர்கள்."
"தாரிணி! அப்படி நீ பிடிவாதம் பிடித்தால் நான் பின்வாங்கி விடுவேன், என்று நினையாதே. 'இந்த உத்தியோகத்தை விட்டு விடுங்கள்; ஏதோ ஒரு ஆசிரமத்துக்குப் போவோம், வாருங்கள்!' என்று சொல்லு. அடுத்த நிமிஷம் விட்டுவிட்டு வரத் தயாராயிருக்கிறேன். என்னுடைய காதலின் ஆழத்தை நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உனக்காக எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்ய நான் தயார்! எனக்கு நீ என்ன சோதனை வேணுமானாலும் வைத்துப் பார்க்கலாம்."
"தங்களுக்கு நான் ஏற்படுத்தக் கூடிய சோதனை ஒன்றே ஒன்று தான். என் பேரில் தங்களுக்கு அபிமானம் உண்டு என்பதில் லவலேசமும் உண்மையிருந்தால் தங்கள் மனைவி சீதாவை அன்புடன் ஆதரித்துக் காப்பாற்றுங்கள். அந்தப் பேதைப் பெண்ணைக் கைவிட்டு விடாதீர்கள்."
"அவளைக் கை விடுவதாக யார் சொன்னார்கள்? அந்த எண்ணம் எனக்கு லவலேசமும் இல்லை அவளும் இருந்து விட்டுப் போகட்டும்."
"வைதிக காரியங்களுக்குத் தாலி கட்டிய மனைவி இருந்து விட்டுப் போகட்டும்; நான் ஆசை நாயகியாயிருக்கட்டும் என்கிறீர்களாக்கும்."
"சீச்சீ! என்ன வார்த்தை சொன்னாய்? அவ்வளவு கீழ் மகன் நான் அல்ல தாரிணி! உன்னையும் நான் கலியாணம் செய்து கொள்ளத் தயாராயிருக்கிறேன். அதனால் என்ன ஏச்சு வந்தாலும், என்ன பேச்சுப் புறப்பட்டாலும், எவ்வளவு அவமானத்துக்கு நான் உட்பட வேண்டியிருந்தாலும் பாதகமில்லை."
"என்ன? என்ன? தயவு செய்து இன்னொரு தடவை சொல்லுங்கள்!" என்று அடங்கா வியப்புடன் கேட்டாள் தாரிணி.
"உன்னையும் அக்கினி சாட்சியாகக் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொல்கிறேன். இந்த நிமிஷம் நீ உன்னுடைய சம்மதத்தைச் சொல்ல வேண்டியது தான்; அடுத்த நிமிஷத்தில் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்" என்றான் ராகவன்.
"ராகவன்! இது விஷயத்தில் உங்களுடைய முதல் மனைவியின் அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று யோசித்தீர்களா?" என்றாள் தாரிணி. அவளுடைய பேச்சில் இப்போது கடுமை தொனித்தது. போகப் போக அந்தக் கடுந்தொனி அதிகமாயிற்று.
"அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒருவருக்காக இன்னொருவர் தன்னுடைய வாழ்க்கை இன்பத்தையே பறிகொடுத்து விட முடியுமா? - மேலும் அவளை நான் அடியோடு வேண்டாம் என்று சொல்லிவிடவில்லையே? அவளும் இருந்துவிட்டுப் போகட்டும்!" என்றான் ராகவன்.
"ஐயோ! பாவம்! ரொம்பப் பெரிய மனது செய்து சொல்கிறீர்கள். இன்னொரு விதமாக யோசனை செய்து பாருங்கள். உங்களைப் போல் சீதா இன்னொரு புருஷனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினால், நீங்கள் சம்மதிப்பீர்களா?"
"சீச்சீ! என்ன வார்த்தை சொல்கிறாய், தாரிணி; அது இந்து தர்மத்துக்கு விரோதமான காரியம்."
"புருஷர்களை மட்டும் இந்து தர்மம் இஷ்டப்படி செய்யலாம் என்று தண்ணீர் தெளித்து விட்டிருக்கிறதா?"
"ஆமாம்; நீயே யோசித்துப் பாரேன்! இந்து தர்மம் புருஷர்கள் பலதார மணம் செய்ய இடம் கொடுத்திருக்கவில்லையா? மகாவிஷ்ணுவுக்கும் பரமசிவனுக்கும் சுப்பிரமணியருக்கும் இரண்டு இரண்டு மனைவிகள் உண்டல்லவா? கிருஷ்ண பகவானோ எட்டுப் பேரை மணந்து கொண்டார்...."
"ராகவன்! அவர்கள் தெய்வங்கள்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கிருஷ்ண பகவான் எட்டுப் பேரை மணந்தார் என்பது உண்மை தான். ஆனால் அதே கிருஷ்ணன் துரியோதனனுக்கு முன்னால் விசுவ ரூபத்தைக் காட்டினார். சக்ராயுதத்தினால் சூரியனையே மறைத்தார், இதெல்லாம் உங்களால் முடியுமா? இராமாவதாரத்தைப் பாருங்கள். இராமாவதாரத்தில் பகவான் மனிதர்களைப் போல நடந்து காட்டினார். இராமர் சீதை ஒருத்தியைத்தானே மணந்தார். தங்களுடைய பெயர் ராகவன்; தங்கள் மனைவியின் பெயர் சீதா. ராமர் சீதையைக் காப்பாற்றியது போல் உங்கள் சீதாவை நீங்கள் காப்பாற்றுங்கள். இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லுகிறேன். உங்கள் மனைவி எப்பேர்ப்பட்டவள் என்பதை நீங்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உலகமெல்லாம் தேடினாலும் அவளைப் போன்ற பெண் கிடைப்பது துர்லபம். உங்களிடம் அவளுக்குள்ள அன்பு இமயமலையைக் காட்டிலும் பெரியது. சப்த சமுத்திரங்களைவிட விசாலமானது. அவளை அன்புடன் பேணி ஆதரியுங்கள். அதுதான் உங்களுடைய வாழ்க்கை தர்மம்; உங்களுக்கு நன்மை தருவதும் அதுதான்."
"இந்த தர்மோபதேசமெல்லாம் எனக்கு வேண்டாம். ஒன்று சொல்கிறேன், கேள்! சீதாவை விவாகரத்துச் செய்து அவளுக்கு இஷ்டமிருந்தால் வேறு யாரையாவது கலியாணம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறேன். அப்போது நீ என்னை மணக்கச் சம்மதிப்பாயா?"
"சீதா உங்களை விட்டுப் போக மாட்டாள். உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பாள் என்ற தைரியத்தினால் இப்படிச் சொல்கிறீர்கள். சீதா விஷயம் இருக்கட்டும்; உங்கள் தாயாரிடம் ஒரு சமயம் நீங்கள் பயபக்தியோடு இருந்தீர்கள். அவர் தங்களுடைய காரியத்தைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசித்தீர்களா?"
"என் தாயார் தனக்குப் பணிவுள்ள சாதுவான நாட்டுப்பெண் வேண்டும் என்று சொன்னாள். அத்தகைய நாட்டுப் பெண் அவளுக்குக் கிடைத்து விட்டாள். இன்னும் என்ன அவளுக்கு வேண்டும்? என் தாயாரிடம் எனக்கும் பக்தி உண்டு தான். அதற்காக அவள் என்னை எப்போதும் அடிமையாக்கி வைத்திருக்க முடியாது. என்னுடைய வாழ்க்கையை அடியோடு பாழாக்க அவளுக்கு உரிமை கிடையாது. தாரிணி! கடைசியாக நான் ஒன்று சொல்கிறேன். அதைக் கேள். நாளைக்கு நீ லாகூருக்குப் புறப்படுவதை நிறுத்திவிடு. நம்முடைய விஷயத்தைப் பற்றி இன்னும் நன்றாய் யோசித்து முடிவு செய். பிரயாணம் கிளம்புவதாயிருந்தால் நாம் இருவரும் கிளம்பலாம். உன்னை நான் காஷ்மீருக்கும் டேராடூனுக்கும் டார்ஜிலிங்குக்கும் உதகமண்டலத்துக்கும் அழைத்துப் போகிறேன். அப்புறம் லண்டனுக்கும் பாரிஸுக்கும் வியன்னாவுக்கும் நேபிள்ஸுக்கும் அழைத்துப் போகிறேன். ஐரோப்பாவைச் சுற்றிப் பார்த்த பிறகு அமெரிக்காவுக்கும் போவோம். ஸான்பிரான்ஸிஸ்கோ, நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்செலஸ் முதலிய இடங்களுக்கெல்லாம் போகலாம் என்ன சொல்கிறாய், தாரிணி!"
"ஆரம்பத்தில் நான் சொன்னதைத் தான் திரும்பச் சொல்கிறேன். தங்களுடைய வாழ்க்கை இலட்சியம் வேறு; என்னுடைய வாழ்க்கை இலட்சியம் வேறு. ஒருநாளும் நம்முடைய இலட்சியங்கள் ஒன்று சேர முடியாது. தாங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கெல்லாம் சீதாவை அழைத்துக் கொண்டு போங்கள். அதுதான் நியாயம்; அதுதான் உங்களுக்கு க்ஷேமம்" என்றாள் தாரிணி.
ராகவன் சிறிது நேரம் திகைப்புடன் தாரிணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவனைப்போல் ஒரு கோபச் சிரிப்புச் சிரித்தான்.
"தாரிணி! நீ ஏன் இப்படிப் பேசுகிறாய் என்பது எனக்குத் தெரியும். யாருடைய மோக வலையிலே சிக்கி என்னை நீ நிராகரிக்கிறாய் என்பதையும் அறிவேன். அந்த ராஸ்கல் சூரியாவின் வேலை தான் இவ்வளவும். எனக்கு ரிவால்வர் லைசென்ஸ் சில நாளைக்கு முன் கிடைத்திருக்கிறது..."
"ராகவன்! வீண் அவதூறு பேசி உங்கள் நாவை அசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். என்னைப் பயமுறுத்தவும் முயல வேண்டாம். பீகார் பூகம்பத்தைப் பார்த்த பிறகு எனக்குச் சாவு என்றால் பயமே கிடையாது."
"மறுபடியும் நான் சொன்னதை நீ தவறாக எடுத்துக் கொண்டாய். உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாக நான் சொல்லவில்லை. என்னை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகப் போவதாகச் சொல்ல எண்ணினேன்."
"என்னுடைய சாவைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை; மற்றவர்களுடைய சாவைப்பற்றியும் நான் கவலைப்படப்போவதில்லை. பகவத்கீதை என்ன சொல்கிறது? உடம்பைத் தான் கொல்லலாமே தவிர ஆத்மாவைக் கொல்ல முடியாது. எப்பேர்ப்பட்ட வஜ்ராயுதத்தினாலும் முடியாது."
"தாரிணி! உன்னை இப்போது தான் எனக்குத் தெரிகிறது. நீ பெண் அல்ல; ராட்சஸி உன்னுடைய அழகு சூர்ப்பனகையின் அழகைப் போன்றது... இருக்கட்டும், பார்த்துக் கொள்கிறேன். நீயும் சூரியாவும் நாளைக்கு ரயில் ஏறிப் போவதைப் பார்த்து விடுகிறேன்!" என்று சபதம் கூறிவிட்டு ராகவன் வெளியேறினான்.
அவன் அப்பால் போனதும் தாரிணியின் கண்களில் அதுகாறும் குமுறிக் கொண்டிருந்த கண்ணீர்க் கடல் பொங்கிப் பெருகியது.