அலை ஓசை/பிரளயம்/ராகவனும் தாரிணியும்
முப்பத்தேழாம் அத்தியாயம் ராகவனும் தாரிணியும்
தோட்டத்துக்குள் பிரவேசித்த சீதா தயங்கித் தயங்கி நடந்து வீட்டு வாசற்படியோரமாக வந்து நின்றாள். உள்ளேயிருந்து கீதம் வருவது நின்று விட்டது. ரேடியோவில் யாரோ பேசுவது கேட்டது. வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. ஆயினும் உட்புறம் தாளிடவில்லையென்று தெரிந்தது. வீட்டுக்குள்ளே அவர்தான் இருக்கிறார்; சந்தேகமில்லை. வாசலில் வேலைக்காரன் யாரும் இல்லை. திடீரென்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் நின்றால் அவர் என்ன நினைப்பார்? திடுக்கிட்டுப் போவாரோ, என்னமோ? அவர் பேச்சு தன் காதில் விழும். ஆனால் அவருடன் பேசுவதற்குத் தனக்குத் தைரியம் வருமா? பேசும் சக்தி நாக்குக்கு இருக்குமா? நாக்குப் புரண்டாலும், தொண்டை அடைத்துக்கொண்டு விடாதா? இவ்விதம் எண்ணிச் சீதா வீட்டு வாசற்படியில் தயங்கிக் கொண்டு நின்றபோது, இன்னும் யாரோ வெளி மதில் கேட்டின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. தன்னுடைய செவிப்புலனின் சக்தி முன்னைக் காட்டிலும் எவ்வளவு அதிக கூரியதாயிருக்கிறது என்பதைச் சீதா நினைத்து வியந்தாள். ஆனால் வியப்பைத் தொடர்ந்து பயம் வந்தது. யார் வருகிறார்களோ, என்னமோ? தன்னைக் கண்டதும் என்ன சொல்வார்களோ, என்னமோ? - வாசற்படியிலிருந்து உடனே சென்று வீட்டுச் சுவருக்கு அப்பால் மறைந்துகொண்டு நின்றாள். வருகிறது யார் என்பதை உன்னிப்பாகக் கவனித்தாள். வந்தவள் - ஆம், வந்தவள் ஸ்திரீதான், - தலையோடு கால் வரையில் மூடிய முஸ்லிம் பர்தா உடை தரித்துக்கொண்டு வந்தாள். இரண்டு கண்களினாலும் பார்ப்பதற்கு மட்டும் அந்த உடையில் இரண்டு துவாரங்கள் இருந்தன. ஐயோ! இவள் யார்? எதற்காக இந்த நேரத்தில் இங்கே வருகிறாள்? கடவுளே! இந்த வீட்டில் இப்போது யாரோ முஸ்லிம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தெரியாத்தனமாகவல்லவா இங்கே வந்துவிட்டோ ம்? நல்ல வேளை, வீட்டுக்குள்ளே நுழையாமல் தப்பினோம். இந்த ஸ்திரீ வீட்டுக்குள்ளே பிரவேசித்ததும் நாம் தப்பி ஓடிப்போய் விட வேண்டும்! தப்பி எங்கே ஓடுவது? எங்கே? எங்கே? யமுனைக்கரைக்கா? காந்தி மகாத்மாவினுடைய புனிதத் திருமேனி இன்னும் அங்கே எரிந்து கொண்டிருக்குமா? அல்லது எரிந்து அடங்கிச் சாம்பலாகியிருக்குமா? அத்தனை கூட்டமும் இதற்குள் கலைந்து போயிருக்குமா? நாம் தனியாக அவ்விடத்தில் பக்கத்திலே சென்று நின்று அவருடைய திருமேனியின் சாம்பலையாவது தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?.......
அந்த முஸ்லிம் பர்தா ஸ்திரீ மெள்ள மெள்ளச் சத்தம் கேட்காதபடி அடி எடுத்து வைத்து நடந்து, வீட்டு வாசற்படிக் கருகில் வந்தாள். சீதாவைப் போலவே அவளும் சிறிது நேரம் தயங்கினாள். எதற்காகத் தயங்குகிறாள்? இவள் இந்த வீட்டுக்கு உரியவளானால் ஏன் தயங்கி நிற்க வேண்டும்? அந்த ஸ்திரீ படிகளில் ஏறித் தாழ்வாரத்தில் நின்றாள். மறுபடியும் தயக்கத்துடன் நடந்து சென்று வீட்டின் வாசற் கதவை நெருங்கி விரல்களின் பின் கணுக்களினால் கதவைத் தட்டினாள். 'டண், டண்' என்று கதவில் விரல் கணுக்கள் தட்டிய சத்தம் சீதாவின் காதில் நன்றாகக் கேட்டது. அதிசயம் அதிசயம்! கேட்கும் சக்தி எவ்வளவு கூர்மையாகியிருக்கிறது! காந்தி மகாத்மாவினுடைய அருள்தான் இது! வீட்டுக்குள்ளே யிருந்து ஆங்கில பாஷையில் "கெடின்!" (உள்ளே வருக) என்ற குரல் வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் தேகம் சிலிர்த்தது. பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே அந்தக் குரல் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையும் எல்லையற்ற துன்பத்தையும் அளித்திருக்கிறது. சொல்ல முடியாத ஆர்வத்தை அந்தக் குரல் அவள் மனதில் எழுப்பிவிட்ட காலம் உண்டு. அளவில்லாத வெறுப்பையும் கோபத்தையும் எழுப்பிய நாட்களும் உண்டு. அவர்தான்: தன்னைக் கைப்பிடித்து மணந்து கொண்ட மன்னர்தான்; தன் கழுத்தில் தாலி கட்டித் தாரமாக்கிக் கொண்ட மணவாளர்தான். வீட்டுக்குள்ளே இருப்பவர் அவர்தான். இந்தப் பர்தா அணிந்த ஸ்திரீக்கு அவரிடம் என்ன வேலை? இவள் யார்? இவளை முன்னாலே அவருக்குத் தெரியுமா? இன்றைக்கு இவள் வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரா? அதிலும் காந்தி மகாத்மாவின் உடல் தீக்கிரையான இந்தப் புண்ணிய தினத்திலா? இவளால் அவருக்கு ஏதேனும் தீங்கு வருவதாயின் அதைத் தான் தடுக்க வேண்டாமா?...... இப்படி ஆயிரம் எண்ணங்கள் சீதாவின் மனதில் உதித்தன.
அந்தப் பர்தா ஸ்திரீ கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனதைச் சீதா பார்த்தாள். தானும் உள்ளே போகவேண்டும், போய் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற அதிதீவிரமான ஆவல் சீதாவைப் பற்றிக் கொண்டது. அவளுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அந்த ஆவல் தோன்றி அவளைச் சித்திரவதை செய்தது. சீதா பல்லைக் கடித்துக் கொண்டு யோசனை செய்தாள். வாசற்புறமாக அவளும் போவதில் பயனில்லை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் பெரிய அறையிலேதான் ரேடியோ இருக்கிறது. அங்கேதான் அவரும் உட்கார்ந்திருக்கிறார். தான் வாசற் பக்கமாகப் போனால் உடனே பார்த்து விடுவார். தெரிந்து கொள்ள விரும்பிய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியாமற் போகலாம். கொல்லைப் புறமாகப் போனால் என்ன? கதவு திறந்திருந்தால் மிக்க சௌகரியம். யாருக்கும் தெரியாமல் பக்கத்து அறைக்குப் போய் நின்று அவளுடைய பேச்சைக் கேட்கலாம். அந்த ஸ்திரீயை இன்னார் என்பதாகவும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொல்லைக் கதவு தாளிட்டிருந்தால் படுக்கையறையின் ஜன்னல் ஓரத்தில் நின்று அவர்களுடைய சம்பாஷணையைக் கேட்கலாம். அதிலிருந்து ஒருவாறு நிலைமை இன்னதென்று தெரிந்துகொள்ளலாம்..... சீதாவின் கால்கள் அவளை வீட்டின் பின் பக்கத்துக்கு இழுத்துச் சென்றன. பின் பக்கத்துக் கதவு தாளிடவில்லை தொட்டதும் அக்கதவு திறந்து கொண்டது. 'கிறீச்' சத்தம்கூடப் போடவில்லை. அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்து சீதா உள்ளே சென்றாள். ரேடியோ வைத்திருந்த முக்கிய அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள். அந்த அறையிலிருந்து ரேடியோ அறைக்குள் போவதற்காக ஏற்பட்ட வாசற்படியின் பாதிக் கதவுகள் இலேசாகத் திறந்திருந்தன. அவசியமானால் அந்தக் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. முதலில் பேச்சைக் கவனித்துத் தெரிந்து கொள்ளலாம். சீதாவின் கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. சுவர் ஓரமாகக் கிடந்த சோபாவில் சத்தமின்றி உட்கார்ந்து கொண்டாள்.
"யார் நீ? இங்கே எதற்காக வந்தாய்? வேறு யார் வீடோ என்று நினைத்துக் கொண்டு வந்தாய் போலிருக்கிறது. போ! போ சீக்கிரம்! நான் இங்கே தனியாக இருக்கிறேன். வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!" என்று ராகவனுடைய கடுமை மிக்க குரல் கூறியது. அவனுடைய குரலில் தொனித்த கடுமை சீதாவின் செவிகளுக்கு மிக இனிமையாயிருந்தது. "வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை!" என்ற வார்த்தைகள் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தன. ஒரு நிமிஷம் மௌனம் குடிகொண்டிருந்தது. ரேடியோவை முன்னமேயே ராகவன் மூடியிருக்க வேண்டும். மறுபடியும் ராகவன் கடுங்குரலில் கூறினான்:- "ஏன் சும்மா நிற்கிறாய்? போகிறாயா? போலீஸைக் கூப்பிடட்டுமா? வேலைக் காரத் தடிப்பயல்கள் இரண்டு பேரும் போய்த் தொலைந்து விட்டார்கள். அவர்கள் வரட்டும் சொல்கிறேன் கதவைத் தாளிடாதது தப்பாய்ப் போயிற்று. பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த அகதிச் சனியன்போல அல்லவா இருக்கிறது!....." இந்தச் சமயத்தில் ராகவனுடைய பேச்சுத் தடைப்பட்டது. "ராகவன்! மன்னிக்க வேண்டும்! உங்களுக்கு அதிக நேரம் தொந்தரவு கொடுப்பதாக உத்தேசமில்லை, சீக்கிரம் போய் விடுகிறேன்!" என்று ஒரு பெண்ணின் குரல் கூறியது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் உடம்பு முழுதும் மறுபடியும் ஒரு தடவை சிலிர்த்தது. அது தாரிணியின் குரல் தான். எழுந்து ஓடிப்போய், "அக்கா!" என்று அலறி அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அந்த ஆசையை மிகவும் கஷ்டப்பட்டு அவள் அடக்கிக் கொண்டாள். ஆவலை அடக்கிக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் இருந்தது. தான் இருப்பது - தான் உயிரோடிருப்பது - தன் கணவருக்குத் தெரியவே கூடாது! அந்த மன உறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். "தாரிணி! தாரிணி! நீயா இந்த வேஷத்தில் வந்திருக்கிறாய்? எதற்காக இந்த பயங்கரமான முகமூடி? உட்காரு, தாரிணி! உட்காரு! உன்னை நான் அப்படிப் போகச் சொல்லுவேனா? எத்தனை நாளாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கிறேன்! தயவு செய்து உட்காரு!" என்றான் ராகவன். "ஆகட்டும், ஐயா! எனக்கும் மிக்க களைப்பாயிருக்கிறது. நான் சொல்ல வந்ததை உட்கார்ந்தே சொல்லிவிடுகிறேன். அதிக நேரம் இவ்விடத்தில் இருக்க மாட்டேன். ஐந்து நிமிஷத்தில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன்!" என்றாள் தாரிணி.
"ஐந்து நிமிஷமா? ஐந்து நிமிஷத்தில் நீ போனால் நான் விட்டு விடுவேனா உன்னை?" என்றான் ராகவன். "சற்று முன்னால் 'வீட்டில் பெண்பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!" என்று சொன்னீர்களே?" "அது உனக்காகச் சொன்னேனா! யாரோ அகதிச் சனியனாக்கும் என்று நினைத்துக்கொண்டு சொன்னேன்." "நானும் ஒரு அகதிச் சனியன்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரத்தில் நான் போகவும் வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை வஸந்தி கவலைப்படத் தொடங்கி விடுவாள்...." "தாரிணி! வஸந்தி எங்கே? ஏன் இப்போதே அவளையும் அழைத்து வரவில்லை? குழந்தை சௌக்கியமா யிருக்கிறாளா?" "சௌக்கியமாயிருக்கிறாள் அவளைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்காகவே இன்றைக்கு வந்தேன். எப்போது குழந்தையைக் கொண்டு வந்து விடும்படி சொல்கிறீர்களோ, அப்போது கொண்டு வந்து விட்டு விடுகிறேன்....." "கொண்டு வந்து விடுகிறேன் என்றா சொல்கிறாய்? சரி, கொண்டு வந்துவிடு! அந்தத் தாயில்லாக் குழந்தையை இந்தச் சூனியமான வீட்டில் அழைத்து வைத்துக்கொண்டு நான் திண்டாட வேண்டியதாயிருக்கும். அதனால் என்ன?" "ஐயா! தாயில்லாக் குழந்தை என்று ஏன் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நிச்சயமாக உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?" "தெரியும், தாரிணி! என்னைப் போன்ற அபாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். சீதா சேனா நதியில் முழுகி இறந்துவிட்டாளாமே. சூரியா நேரில் பார்த்தானாம்!" இந்தச் சமயத்தில் விம்முகிற சத்தம் கேட்டது. விம்முகிறது யார் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவனாகவும் இருக்கலாம்! தாரிணியாகவும் இருக்கலாம். உள்ளே பாய்ந்து ஓடிச் சென்று தான் உயிரோடு இருப்பதைத் தெரிவித்து விட்டால் என்ன? இல்லை, கூடவே கூடாது! சீதா பிடிவாதமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்திராமல் உட்கார்ந்திருந்தாள். "சூரியா நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன், இன்னமும் தேடிக்கொண்டு தானிருப்பேன். ஹௌஷங்காபாத்தில் அவளையும் குழந்தையையும் தனியாக விட்டு விட்டு நான் இந்தப் பாழும் உத்தியோகத்துக்காக ஓடி வந்ததை நினைத்தால் எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அப்படித் திடீரென்று பேய் பிசாசுகளாவார்கள் என்று எனக்கு என்ன தெரியும்?...."
"ராகவன்! போனதை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சீதா உண்மையில் பாக்கியசாலி; நதி வெள்ளத்தில் மூழ்கி இறந்து போய்விட்டாள். உயிரோடிருக்கும் நாம்தாம் துர்பாக்கியசாலிகள். உலகத்துக்கே ஓர் உத்தமராயிருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்தோம் கேட்டோ மல்லவா? இந்த மனவேதனையை அநுபவிக்காமல் போய்விட்டவள் அதிர்ஷ்டசாலிதானே!" "நேற்று இராத்திரி இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் அவளுடைய நினை வாகவே இருந்தது. சீதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு துக்கப்பட்டிருப்பாள் என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். சீதாவுக்கு மகாத்மாவிடம் ஒரு தனி பக்தி. அதிலும் நாங்கள் ஹௌஷங்க பாத்தில் ஒரு வருஷம் இருந்த காலத்தில் அவள் மகாத்மா காந்தியைப் தெய்வமாகவே நினைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தாள்....." சீதா புண்ணியம் செய்தவள், நான் போய் வருகிறேன் மிஸ்டர் ராகவன்! நாளைக் காலையில் தங்கள் குமாரியை அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் விட்டு விடுகிறேன்." "இதென்ன சொல்லுகிறாய், தாரிணி! முன் பின் தெரியாதவர்கள் பேசுவது போலப் பேசுகிறாயே? எங்கே போக வேண்டும் என்கிறாய்? நீ எங்கே தங்கியிருக்கிறாய்? குழந்தையை எங்கே விட்டு விட்டு வந்திருக்கிறாய்? இரண்டு மாதத்துக்கு முன்னாலே சீதா பெயருக்கு நீ கடிதம் எழுதியிருந்தாயே? உன்னை நான் எதிர்பார்த்துக் கொண்டு தானிருந்தேன். இத்தனை காலமும் என்ன செய்தாய்? எங்கே இருந்தாய்?" என்று ராகவன் படபடவென்று பல கேள்விகளைக் கொட்டினான்.
அந்தக் கடிதம் எழுதிய அடியோடு இந்த ஊருக்கு வந்து விட்டேன். ஜும்மா மசூதிக்கும் அருகில் நானும் என் பெற்றோர்களும் முன்னொரு சமயம் வசித்த வீட்டுக்குப் போனேன். அன்றைக்கே அந்தப் பிரதேசத்தில் கலகம் தொடங்கி விட்டது. இரண்டு மாதமாக வீட்டை விட்டு வெளியே புறப்பட முடியவில்லை. குழந்தையை அழைத்து வரப் பயமாயிருக்கிறது. அதனாலே தான் இத்தனை நாள் தாமதம். இன்றைக்கு இந்த டில்லி நகர் முழுவதும் மகாத்மாவின் இறுதி ஊர்வலத்துக்குப் போய்விட்டது. நானும் தைரியமாகப் புறப்பட்டு வந்தேன்" என்றாள் தாரிணி. "இன்றைக்கு இந்த நகரத்தில் வெளியில் புறப்படாமல் வீட்டிலேயே இருந்தவன் நான் ஒருவன்தான் போலிருக்கிறது. இந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள்கூட மகாத்மா காந்தியின் கடைசி தரிசனத்துக்குப் போய்விட்டார்கள். நான் வீட்டிலேயே இருந்து ரேடியோ மூலம் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் நீ இங்கே வந்து என்னைக் காணாமல் திரும்பிப் போயிருக்கலாமல்லவா?" "ஆமாம்; நீங்கள் வீட்டில் இருந்தது நல்லதாகத்தான் போயிற்று. நான் போய் வருகிறேன். நாளைக்கு......." "நாளைக்கு என்கிற பேச்சு வேண்டாம். இப்போதே நான் கார் எடுத்துக்கொண்டு வருகிறேன். போய் வஸந்தியை அழைத்து வருவோம். ஆனால் அந்தத் தாயில்லாக் குழந்தையை என் தலையிலே கட்டிவிட்டு நீ தப்பிப் போய்விடலாம் என்று நினைக்காதே! என்னால் அந்தப் பொறுப்பை வகிக்க முடியாது. நீ இந்த வீட்டில் சீதாவின் ஸ்தானத்தில் இருந்து வஸந்தியையும் வளர்ப்பதாக ஒப்புக் கொண்டால்தான் அந்தப் பொறுப்பை நான் ஒப்புக்கொள்ள முடியும்." "ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சீதாவின் ஸ்தானத்தில் நான் இருக்க வேண்டும்' என்று சொல்வதின் அர்த்தம் என்ன? இன்னும் உங்களுக்கு அந்தப் பழைய பைத்தியம் விடவில்லையா?" "பழைய பைத்தியம் விடவில்லைதான். இந்த உடம்பிலே உயிர் உள்ள வரையில் என்னை அப்பைத்தியம் விடாது தாரிணி!" "உங்களுக்கு ஓர் இரகசியம் தெரியாது. அதனாலேதான் இன்னமும் இப்படிச் சொல்கிறீர்கள். சீதா என் சொந்தத் தங்கை; என் உடன் பிறந்த சகோதரி."
"அது எனக்குத் தெரியாத இரகசியம் அல்ல. நீ சீதாவின் சொந்தத் தமக்கை என்பதைச் சூரியா சொன்னான். இன்னொரு விஷயமும் அவன் கூறினான். நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டால் அதைக் காட்டிலும் சீதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி அளிக்கக்கூடியது வேறொன்றுமிராது என்று சொன்னான். நீயே யோசித்துப் பார், தாரிணி! இந்த வீட்டிலிருந்து வஸந்தியை வளர்ப்பதற்கு உன்னைக் காட்டிலும் தகுதியுடையவள் உண்டா? நீ மட்டும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டால்... வேண்டாம்; இன்றைக்கு இந்தப் பேச்சு உனக்குப் பிடிக்காது. பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு நம் எல்லோருடைய மனமும் கலங்கிப் போயிருக்கிறது. நாம் இப்போது போய்க் குழந்தையை அழைத்துக் கொண்டு வரலாம். ஆனால் நீ உன்னுடைய முகமூடியை மட்டும் உடனே எடுத்து விட வேண்டும். இன்னும் இந்தப் பயங்கரமான உடையை நீ தரித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை." "ஆகட்டும், ஐயா! இந்தப் பர்தா உடையை எடுத்து விடுகிறேன்; எடுக்கத்தான் வேண்டும். ஆனால் கலியாணம் பேச்சைத் தள்ளிப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதை இப்போதே பேசி முடித்துவிட்டால் என் மனது நிம்மதியடையும்....." "எனக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை, தாரிணி! பேஷாக இப்போதே பேசி முடிவு செய்யலாம். ஆனால் பேசுவதற்குத் தான் என்ன இருக்கிறது? நீ உன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டியதுதான். நானோ பதினாறு வருஷ காலமாகத் தவம் செய்கிறேன்." "என்னுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
என் தங்கை சீதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்....." "என்ன சத்தியம் செய்து கொடுத்தாய்? எதற்காக?" "உங்களுக்குச் சம்மதம் என்றால் நான் உங்களை மணந்து கொள்கிறேன் என்று சீதாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். "அதை நிறை வேற்றுவதாக உத்தேசமா? காற்றிலே பறக்க விட்டு விடுவதாக உத்தேசமா?" "சீதா உயிருடன் இருந்தபோது என்னால் அவளுக்குப் பல கஷ்டங்கள் நேர்ந்தன. கடைசியில் அவளைப் பாதுகாக்க நான் செய்த ஏற்பாடும் பயனில்லாமற் போயிற்று. சீதாவின் ஆவியாவது நிம்மதி அடைய வேண்டாமா? ஆகையால் அவளுக்கு நான் கொடுத்த வாக்கை மீறப் போவதில்லை. நீங்கள் என்னைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்தால் எனக்கும் அதில் சம்மதம். ஆனால் நீங்கள் யோசித்துச் சொல்ல வேண்டும்....." சீதா இதுவரை தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து நின்றாள். பேதைப் பெண்ணே! ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? போய்விடு! உடனே ஓடிப் போய்விடு! உன் மனம் நன்றாயிருக்கும்போதே இங்கிருந்து போய்விடுவது நல்லது. ஒருவேளை உன் புத்தி மாறிக் கெட்டுப் போய்விடலாம் அல்லவா? இவ்வாறு சீதாவின் உள்மனம் அவளுக்கு அறிவுறுத்தியது. சிறிதும் சத்தம் செய்யாமல் அடிமேல் அடி வைத்து நடந்தாள். கொல்லை வழியாகவே வெளியில் வந்து வீட்டைப் பிரதட்சணம் சுற்றிக் கொண்டு வாசற்பக்கம் வந்தாள். மதில் சுவரின் வாசற்படியைத் தாண்டி வீதியை அடைந்ததும் அதிவேகமாக நடந்தாள். நாலாபுறமும் இருண்டு கொண்டு வந்தது. சீதா! என்ன காரியம் செய்து விட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷம் நீ அந்தப் பக்கத்து அறையிலேயே இருந்திருக்கக் கூடாதா?