1. மனத்தின் தோற்றம்
உயிரின் தோற்றம் போலவே மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி அகங்காரம், சித்தம், என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner Seat of thought, feeling and volition consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப் பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒரு வகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஒர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்க செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஒர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். இனி, இக்கால உளவியல் அறிஞர்களின் (psychologists) கருத்தைக் காணலாம்:-
உளம் (மனம்) ஒரு தனிப்பொருள் அன்று; உயிரி (organism) வளர்ச்சி பெறுங்கால் பல படிகளில் காணப்படும் தொழிலே உளம் - வெளியிலிருந்து வரும் தூண்டல்களுக்கு இயையத் துலங்கும் தொகுதியே உளம் என்பது