13. மொழி ஒப்பியல்
(Comparative Philology)
ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உலகியலில் உண்டு. நாம் இதற்கு முன் பார்த்தறிந்தவர் போன்றுள்ள மற்றொருவரைக் காணின், உடனே முன்னவரின் நினைவு வருகிறது. அவர் போலவே இவரும் இருக்கிறாரே என்று எண்ணுகிறோம். இருவரிடையே காணப்படும் ஒற்றுமை தொடர்பாக ஒரு சிறிய ஆராய்ச்சியிலும் சிலர் ஈடுபடுவதுண்டு. இவர் என்ன - அவர் பிள்ளையா யிருப்பாரா என்று சிலரும், உடன் பிறந்தவரா யிருப்பாரா அல்லது பங்காளியா யிருப்பாரா என்று சிலரும் எண்ணக்கூடும். ஒற்றுமை யுடையவர்களுள் பெரும்பாலோர் உறவினராயிருப்பர் சிறுபாலார் ஒருவகை உறவும் இன்றியே, இயற்கையாக - தற்செயலாக ஒற்றுமை அமையப்பெற்றி ருப்பர். இவ்வாறு ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டுப் பார்ப்பது போலவே, ஒரு மொழியோடு பிற மொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் வழக்கம் பிற்காலத்தில் ஏற் பட்டது.
நாம் வாழும் இவ்வுலகம் பல்வேறு பகுதிகளாய்ப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழிகள் ஒன்றோடொன்று ஒற்றுமை யுடையனவாய் இருத்தல் இயல்பு. ஒற்றுமையுடைய மொழிகள் ‘ஒரு குடும்ப மொழிகள்’ என மொழியியல் அறிஞர்களால் கூறப்படுகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக்