சுந்தர சண்முகனார்
71
தொல்காப்பியத்தேவர், முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகரினும் முற்பட்ட வராய், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார் எனத் துணியலாம்.
மேலே இதுவரையும் செய்த ஆராய்ச்சியில், தொல் காப்பியத் தேவரும் மாணிக்கவாசகரும் பத்தாம் நூற்றாண்டளவில் முறையே அடுத்தடுத்து வாழ்ந்தவராய் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அனைவரும் ஏற்றுக்கொள்வது அரிது. காலவாராய்ச்சி மிகவும் கடுமை யானது அதற்குத் திட்டவட்டமாய் அறுதியிட்டு உறுதி கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. அந்தந்தக்காலச் சூழ்நிலையைக் கொண்டு இப்படியிருந்திருக்கலாம் எனக் குறிப்பாகவே கூறமுடியும்.
இந்த அடிப்படையில் நோக்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலத்தையடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசை மாறியிருக்கலாம் என்பதும், அந்தக் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் புலப்படும். எனவே, மாணிக்கவாசகர் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனலாம்.