உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

185



விருப்பு உண்டாகிறதாம். துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு என்பது கள்ளிலே பல வகை உண்டு; அவற்றுள் தோப்பி என்பது ஒருவகை என்னும் குறிப்பைத் தருகிறது. இது வீட்டிலேயும் காய்ச்சப்படும் என்பதயைப் பெரும் பாணாற்றுப் படையிலுள்ள

“நாள் ஆ தந்து நறவு கொடை நொளைச்சி
இல் அடு கள்ளின் தோப்பி பருகி” (141, 142)

என்னும் பகுதியால் அறியலாம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள பொருள் அப்படியே வருமாறு:-

“விடியற் காலையிலே அவர்கள் பசுக்களை அடித்துக் கொண்டு போந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப் போக்கி, அதற்குப் பின்பாகத் தமது இல்லிலே சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு” - என்பது அது.

கள்ளுக் கடையிலே கள்ளுக்கு விலையாகப் பசுக்களைத் தந்து கள் பெற்றுப் பருகுவதும், பின்பு வீட்டிலே சமைத்த தோப்பிக் கள்ளை உண்பதும் வழக்கமெனத் தெரிகிறது. இது, வீட்டில் செய்யும் தேநீர், காபி போன்றது போலும். தற்செயலான வாய்ப்பு நேர்ந்ததால் ஈண்டு மற்றொரு கருத்தைக் காணலாம்:-

கள்ளுக் கடையிலே கள்ளின் விலைக்கு ஈடாகப் பசுவைக் கொடுத்தார்கள் என்பதால் அறியக்கூடியது ஒன்றுண்டு. அதாவது: அந்தக் காலத்தில் மாடு செல்வமாகக் (காசாகக்) கருதப்பட்டது என்பது. இதனால் தமிழில் மாடு என்னும் விலங்கைக் குறிக்கும் சொல் செல்வத்தையும் குறிக்கலா யிற்று, கன்னட மொழியில் ‘தன’ என்னும் சொல் மாட்டையும் செல்வத்தையும் குறிக்கும்; இலத்தீனில் ‘Pecunia’ என்னும் சொல்லும் மாட்டையும் செல்வத்தையும் குறிக்கும் - என்பதே அந்தக் கருத்து. மீண்டும் கள்ளுக்கு