சுந்தர சண்முகனார்
189
கங்காதேவி தன் காலில் படும்படி விழுந்ததற்காக உமா தேவி மகிழ்ந்தாளாம். பாடல்:
- “ஆதி பகவன் தனதுாடல் தணிப்பான்
- பணிய அவ்விறைவன்
- பாதம் இறைஞ்சு மதற்கும் நெற்றிப்
- பகையும் அல்குல் பகையுமாம்
- சீத மதியும் அரவும் விழும் செயற்கும்
- உவகை செயாமல் அலை
- மாது பணியுமதற்கு மனமகிழும்
- உமையை வணங்குவாம்”
- “ஆதி பகவன் தனதுாடல் தணிப்பான்
என்பது (துதிகதி-2) பாடல். அலைமாது = கங்கா தேவி.
கம்ப ராமாயணத்தில் கிளைக் கதையாக இரணியன் கதை வருகிறது. திருமாலை வணங்கும்படி இரணியனுக்குக் கூறியபோது, வணங்குதல் என்பது பெண்டிரோடு ஊடல் கொள்ளும் நாளிலும் எனக்கு இல்லை என்று கூறி அண்டங்கள் நடுங்கும்படி இடி சிரிப்புச் சிரித்தானாம்:
- “வணங்குதல் மகளிர் ஊடல்
- நாளினும் இலதே என்னா அண்டங்கள் நடுங்களுக்கான்”
என்பது கம்பராமாயணப் பாடல் பகுதி. இதனால், மகளிர் ஊடல் கொள்ளும்போது வணங்குதல் உண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
தமரகம் புகுதல்
போர்க்களத்தில் கணவனை இழந்த பெண்கள், கைம் பெண் ஆனதும், தம் தாய் வீட்டில் சென்று தங்கும் வழக்கம் உண்டு. மாலையைப் புனைந்துரைக்கும் (வருணிக்கும்) சாத்தனார், மாலையில் ஞாயிறைப் பறி கொடுத்த புகார் நகரில், கணவனை இழந்து தாய் வீடு செல்லும் கைம்பெண் போல், அந்தி என்னும் கலங்கிய பசலை மெய்யுடைய பொழுது வந்ததாம்.