பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ்பேசும் சமுதாயம் எங்கும் ஒன்றுபோல் பயன்படுத்தப்பட வேண்டும். கணினித் தமிழ்ச் சொல்லாக்கம் தரப்படுத்தப்பட்டு, கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ்சியம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அதற்கான திசை வழியில் அரசோ, பல்கலைக் கழகங்களோ, தமிழ்ச் சங்க அமைப்புகளோ போதுமான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், ஒரு தனியாளாக நின்று, இம்மாபெரும் கடமையைத் தோளில் சுமந்து, தொலைநோக்குப் பார்வையோடு, திரு மனவை முஸ்தபா அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள இக்கணினிக் களஞ்சியப் பேரகராதியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.?

மணவையாரின் அறிவியல் தமிழ்ப்பணி

அறிவியல் தமிழ்ப் பணிக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்ததுமே, சேலம் அரசுக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான ஆணையைப் பெற்றார். தம் பேராசிரியர்களிடம் வாழ்த்துப் பெற சிதம்பரம் சென்றார். அங்கு நடைபெற்ற பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா? என்ற கருத்தரங்கு இவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அனைத்து அறிவயல் துறைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழில் கற்பது முடியாத செயல். பயிற்சி மொழி தமிழ் என்பது கானல் நீர் என்று ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார். வெகுண்டெழுந்த மணவையார், தமிழால் முடியும். சொல்வதோடு நில்லாமல் செயல்மூலம் தமிழால் முடியும் என்பதை நிறுவிக் காட்டுவேன். இன்று முதல் இதுவே என் வாழ்வின் ஒரே இலட்சியம். அறிவியல் தமிழுக்காக என் வாழ்வையே அர்பணித்துக் கொள்கிறேன் என்று முழங்கிய தோடு மட்டுமின்றி, கையிலிருந்த ஆசிரியர் பணிக்கான ஆணையை அங்கேயே கிழித்துப் போட்டார். அன்று முதல் அறிவியல் தமிழ் ஒன்றை மட்டுமே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இன்று வரை அந்தப் பாதையிலேயே வீறுநடைபோட்டு வருகிறார்.