பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தமிழ் நாடும் மொழியும்


வழிப் பாட்டனான தந்திதுர்க்கனின் நாமம். தந்திவர்மனின் தாய்வழிப் பாட்டன் இராட்டிரகூடனாக இருந்தபோதிலும், இராட்டிரகூடத்திலிருந்து துருவன், மூன்றாம் கோவிந்தன் என்ற இரு இராட்டிரகூடர்கள் பல்லவ நாட்டின்மீது படையெடுத்து வந்தனர். சென்னையிலுள்ள திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோவிலில் தந்திவர்மனின் கல்வெட்டு ஒன்றுளது. தந்திவர்மன் தனது இறுதிக் காலத்தில் முதல் வரகுண பாண்டியனிடம் தன்னாட்டின் ஒருபகுதியை இழந்தான்.

மூன்றாவது நந்திவர்மன் (கி. பி. 826-849)

இவன் தந்திவர்மனின் மகன். பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் ஒரு போர் தெள்ளாறு எனும் இடத்தில் நடந்தது. அப்போரில் பல்லவனே வெற்றி பெற்றான். எனவே நந்திவர்மன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அழைக்கப்பட்டான். நந்திக் கலம்பகம் எனும் பிரபந்தம் இந்நந்திவர்மன் மீது பாடப்பட்டதொரு நூலே. காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய இடங்களில் நந்திவர்மன் பெற்ற வெற்றிகளைப்பற்றி இந்நூல் பாராட்டிப் பேசுகின்றது. நந்திவர்மன் ஓர் இராட்டிரகூட மங்கையை மணஞ் செய்துகொண்டான். இவன் சைவத்தை ஆதரித்தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இவன் அவைப் புலவராவார். வேலூர்ப் பாளையப்பட்டுப் பட்டயம் ஒன்று நந்திவர்மனைப் பெரிதும் புகழ்கிறது. இவன் மகன் நிருபதுங்கனாவான். இவன் பல்லவ நாட்டை ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆண்டுள்ளான். நிருபதுங்க வர்மனும் பாண்டியரோடு காவிரிக் கரையில் உள்ள அரிசில் என்னும் ஊரில் போரிட வேண்டி இருந்தது. இவன்றன் பாகூர்ப் பட்டயமானது இவனது அமைச்சன் ஒருவன் வட மொழிக்கல்லூரிக்குத் தானம் பல கொடுத்ததாகக் கூறுகிறது.