பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

25



இந்தக் குறளினை இக்கால முறைக்கு வைத்துப் பார்ப்போம். இப்போது பொதுமக்கள் அரசாங்கத்துக்கு ஒருகுறை எழுதித் தெரிவித்தால், அது பல கைக்கு மாறிப் பதிலுருவத்தில் மக்களின் கைக்கு வரப் பல நாட்கள் - பல திங்கள்கள் ஆகலாம். அந்தத் தாள்கட்டு ‘சிவப்பு நாடா’வால் கட்டப்பட்டுக் கிடக்கும். இதற்குத் தான் ‘சிவப்பு நாடா முறை’ என்பது பெயர். இந்நிலை கூடாது. மக்கள் வேண்டுகிற குறைகளையும் வெளியிடுகின்ற முறைகளையும் அரசன் நேரில் அறிந்து உடனுக்குடன் ஆவணபுரிய வேண்டும் - அதாவது ‘சிவப்பு நாடா முறை’ ஒழிய வேண்டும் என்பது போல வள்ளுவர் அன்றே கூறியுள்ளார். இப்போது அரசியலார் இதில் கண் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

முடியரசுக் காலத்திலேயே அரசனது கடமையைச் சுட்டிக் காட்டிய வள்ளுவரது துணிவு பாராட்டத்தக்கது; மன்னன் கடுஞ்சொல் இன்றிக் காட்சிக்கு எளியனாக இருந்து சிறக்க வேண்டும் - நாடு நலம் பெற வேண்டும் என்ற வள்ளுவரது விருப்பம் வரவேற்கக் கூடியது; அவரது பரிந்துரையான இந்த அறிவுரை ஆட்சித் தலைவர்கள் பின்பற்றக்கடவது. வாழ்க வள்ளுவம்! 

5. இன்னா செய்தார்க்கு ஒறுப்பு

இந்தத் தலைப்பு, திருவள்ளுவரின் ஒரு திருக்குறள் பாடலின் முற்பகுதித் தொடர்புடையது.

திருவள்ளுவர் ஒரு வகையில் கடுமையான பேர் வழியாகக் காணப்படுகிறார். உலகில் மக்கள், பெரும்பாலும் தமக்குத் தீமை செய்தவர்க்குத் திரும்பத் தீமையே செய்வர். தீமை செய்தவர்க்கு அடி உதை கொடுத்தல், அவருடைய