பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

39


என்று கூறியிருக்கிறார். பாரதியும், ‘தனியொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினையே அழித்து விடுவோம்’ என்று கூறுகிறார். இவ்வாக்கியங்களெல்லாம் ஒரேயுலகக் கொள்கையை வலியுறுத்துகின்றன.

அரசியல் தலைவன் ஒருவன் பிச்சைக்காரனைக் கண்டு நையாண்டி செய்யக்கூடாது! அவனைக் கண்டு ஒவ்வோர் அரசியல் தலைவனும் வெட்கப்படல் வேண்டும். மக்கள் பண்பாட்டைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, சமூகப் பயிற்சி - குடிமைப் பயிற்சி என்றெல்லாம் கூறிப் பயனில்லை.

எனவே, ஐக்கிய நாட்டுக் கோட்பாடுகளையும் நல்ல பண்புகளையும் நாம் இள உள்ளங்கட்குக் கற்பித்து அவர்களை அதன்படிச் செயல்படச் செய்தால் ‘ஒரே உலகம்’ என்னும் கொள்கை உண்மையாகும்; உருப்படும்.

“தொல்லுலக மக்க ளெல்லாம்
ஒன்றே என்னும்
தாயுள்ளம் தன்னி லன்றோ இன்பம்”

- பாரதிதாசன்



7. மூவர் தமிழ்

‘மூவர் தமிழ்’ என்பது சில நூல்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒளவையார் தமது ‘நல்வழி’ என்னும் நூலின் நாற்பதாம் பாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தேவர் குறளும் திருநான் மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்றுணர்” (நல்வழி-40)