உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

13



ஒன்று தனியே இருப்பதால்தான், அது, எல்லாச் செய்தி களிலும் - செயல்களிலும் விரைந்து மாறி மாறி ஈடுபாடு கொண்டு பதில் தர முடிகிறது - என்று அவர்கள் கூறு கின்றனர். இதற்குரிய பதிலாவது: மனம் என ஒன்று தனியே இருந்து கொண்டு விரைந்து மாறி மாறிச் செயல் படுவதாக இதற்குப் பொருள் இல்லை; அட்டாவதான மாகிய எட்டுத் தூண்டல் துலங்கல்களும், தசாவதானமாகிய பத்துத் தூண்டல் துலங்கல்களும், சோடசாவதானமாகிய பதினாறு துண்டல் துலங்கல்களும் உடலுக்குடன் மிகவும் விரைந்து விரைந்து நடைபெறுகின்றன என்பதே இதற்குப் பொருளாகும். அனைவராலும் இது செய்ய வியலாது. ஆற்றல் மிக்க ஓரிருவரே இதனைச் செய்ய வியலும். அவர் களும் சில நேரத்தில் தவறிப் போவதுண்டு. எனவே, மனம் எனத் தனியாக ஒன்றும் இல்லை; உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே மன உணர்வாகும்.

மாற்றுக் கொள்கையினர், இன்னும் நிறைவு கொள்ளாமல், மற்றொரு மறுப்பு கூறலாம்; அஃதாவது: மனிதன், படுக்காமல் - தூங்காமல், விழித்துக் கொண்டு செயலாற்றும் போது, பல தூண்டல்கள் இடையிடையே ஏற்பட, அவற்றிற்குத் துலங்கிக் கொண்டிருக்கலாம் - என்பதையாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அவன் இரவில் - இருளில், தனியறையில், தனியாகப் படுத்துக் கொண்டிருக்கும்பொழுது, நெடு நேரம் தூக்கம் வராமல், எதை எதையோ மணிக் கணக்கில் மாறி - மாறி எண்ணிக் கொண்டிருக்கின்றானே - இது எவ்வாறு நிகழ்கிறது? எந்தத் தூண்டலும் அங்கே இல்லாமலேயே, பல எண்ணங்களின் மேல் எவ்வாறு துலங்கிக் கொண்டிருக்கிறான்? எனவே, மனம் என ஒன்று இருந்து கொண்டே அவ்வாறு செய்து கொண்டிருக்கிறது என்பது புலனாக வில்லையா? - என்பதாக, மாற்றுக் கொள்கையினர் வினவலாம். இதற்குப் பதில் வருமாறு: