உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மனத்தின் தோற்றம்



(எலெக்ட்ரிக்) விளக்குப் போடவே கூடாது என்றும், சிலரைத் தீண்டக் கூடாது என்றும், உள்ளே விடக்கூடாது என்றும் ஒற்றைக் காலில் நின்றார்கள் - நிற்கிறார்கள். இன்னும் சிலர் கடல் தாண்டிக் கப்பல் போக்குவரவு செய்யக் கூடாது என்றார்கள் - என்கிறார்கள். அதிலும் பெண்களை அழைத்துச் செல்லவே கூடாது என்பது அவர்களின் விடாப் பிடி. இவையெல்லாம் இன்று எவ்வளவு அறியாமைக்கு உரியன? இவர்கள், வளர்ச்சி பெற்றுச் செல்லும் விஞ்ஞான உலகம் என்னும் குழந்தையை, மேலும் வளரவிடாமல், பழைய காலப் பழக்கவழக்கம் என்னும் தாயின் கருவிற்குள் (வயிற்றுக்குள்) கொண்டு வைத்துவிட முயல்கின்றனர். இவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் அறிவிலிகளே யாவார்கள். அறிஞர் உலகம் இவர்களை மதிக்குமா? இவர்களின் கொள்கைகள் பொருத்தமற்றவை என்பதை ஈண்டு விளக்கி விண்காலம் போக்க வேண்டியதில்லை. இக் காலத்திலுள்ள பத்து வயதுடைய பள்ளி மாணவரும் இவர் களின் பழைய கொள்கைகளைப் பழிப்பது வெளிப்படை யன்றோ?

எனவேதான் நம் திருவள்ளுவர், மக்கள் தாம் எவ்வளவு கற்று அறிந்திருந்தாலும் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்னும் கருத்தில்,

“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”.

என்று அருளியுள்ளார்.

எதிர்காலம் மாறக்கூடும் என்பதை முன்கூட்டியே நுனித் துணர்ந்து வள்ளுவர் இக்குறளைக் கூறவில்லையென்றால் அவருக்கு என்ன மதிப்பு? இதனாலேயே திருக்குறள் என்றும்-எங்கும்.எவரும் போற்றும் பொதுநூல் என்னும் பெயர் பெற்றதல்லவா?