சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/காதற்புயல்

விக்கிமூலம் இலிருந்து
5. காதற்புயல்


சிற்ப வீட்டின் வாசலில் வந்து நின்ற சிவகாமியைக் கண்டதும், பரஞ்சோதியின் கண்கள் அவளை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தரையை நோக்கின. ஆயனச் சிற்பியின் மகள் சாதாரண மானிடப் பெண் அல்ல, தெய்வாம்சம் உடையவள் என்ற எண்ணம் முதன்முதலில் அந்த வீட்டுக்கு வந்திருந்தபோது பரஞ்சோதியின் உள்ளத்தில் தோன்றியிருந்தது. சிவகாமிக்கும் மாமல்லருக்கும் ஏற்பட்டிருந்த இருதய பாசத்தைப் பற்றி முன்பே அவர் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டிருந்தார். நேற்றிரவு பல்லவ குமாரரின் வாய்மொழியினாலேயே அது உறுதிப்பட்டது.

அரண்மனை நிலா மாடத்தில் சரத்கால சந்திரனின் அமுத கிரண போதையை அனுபவித்துக் கொண்டு, சிநேகிதர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, மாமல்லர் தம்முடைய இருதயத்தையே அவருக்குத் திறந்து காட்டி விட்டார். இத்தனை நாளும் மாமல்லரின் உள்ளத்தில் அணைபோட்டுத் தடுத்து வைத்திருந்த பிரேமைப் பிரவாகமானது அவருடைய இருதய அந்தரங்கத்தை வெளியிடக்கூடிய உற்ற தோழன் ஒருவன் கிடைத்த உடனே, அணையை ஒரே மோதலில் இடித்துத் தள்ளி விட்டு அமோக வெள்ளமாகப் பாய்ந்தது. பரஞ்சோதி அந்த வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடிப் போனார். இந்த மாதிரி காதல் வெறி அவருக்கு முற்றிலும் புதுமையாயிருந்தது. திருவெண்காட்டில் நமசிவாய வைத்தியர் வீட்டில் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்த நங்கை ஒருத்தியும் இருக்கத்தான் இருந்தாள். ஆனால், அவளுடைய நினைவானது பரஞ்சோதிக்கு அமைதி கலந்த இன்பத்தையே உண்டாக்கியது.

மாமல்லருடைய காதலோ அவருடைய உள்ளத்தை, கடும் புயல் காற்று சுழன்று அடிக்கும் மலை சூழ்ந்த பிரதேசமாகவும், திடீர் திடீர் என்று தீயையும் புகையையும் கக்கும் எரிமலையாகவும், பிரம்மாண்டமான அலைகள் மலை மலையாக எழுந்து மோதும் குடாக்கடலாகவும் செய்திருப்பதைப் பரஞ்சோதி கண்டார்.

மாமல்லருடைய காதல் வேகம் பரஞ்சோதிக்குப் பெருவியப்பை உண்டாக்கிற்று; அதோடு பயத்தையும் உண்டாக்கிற்று. அவர்களுடைய காதல் பூர்த்தியாவதற்கு எத்தனை எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை எண்ணியபோது பரஞ்சோதியின் மனம் கனிந்தது. எல்லாவற்றிலும் பெரிய தடை, மகேந்திர சக்கரவர்த்தியின் விருப்பம் வேறுவிதமாயிருந்ததேயாகும். அந்தப் பெருந்தடைக்குப் பரிகாரம் உண்டா? அது எப்போதாவது நிவர்த்தியாகக் கூடுமா?

சென்ற எட்டு மாதத்தில் சக்கரவர்த்தியிடம் நெருங்கிப் பழகி, அவருடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அநேக விஷயங்களில் அவருடைய அந்தரங்கக் கருத்துக்களையெல்லாம் அறிந்திருந்த பரஞ்சோதி, மாமல்லரின் காதலைப்பற்றிச் சக்கரவர்த்திக்குத் தெரியுமென்றும் அதை அவர் விரும்பவில்லையென்றும் திட்டமாய்த் தெரிந்து கொண்டிருந்தார்.

எனவே, இப்போது அவருடைய நிலைமை மிகவும் தர்ம சங்கடமாய்ப் போயிருந்தது. ஒரு பக்கத்தில், அவருடைய மனப்பூர்வமான பக்திக்குப் பாத்திரமானவரும், தந்தையின் ஸ்தானத்தை வகிப்பவருமான மகேந்திரர், குமார சக்கரவர்த்தியின் உள்ளத்தைச் சிவகாமியிடமிருந்து திருப்ப விரும்புகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். மாமல்லரோ, தம்முடைய இருதய அந்தரங்கத்தையெல்லாம் வெளியிடுவதற்குரிய உற்ற துணைவராக அவரைப் பாவித்து, தம் மனோரதத்தை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவருடைய ஒத்தாசையை எதிர்பார்க்கிறார். சக்கரவர்த்திக்கு உகந்ததைச் செய்தால், தம்மை நம்பிய சிநேகிதருக்குத் துரோகம் செய்வதாகும். சிநேகிதருக்கு உகந்ததைச் செய்தாலோ சக்கரவர்த்திக்கு விருப்பமில்லாததைச் செய்ததாக முடியும்.

இந்தத் தர்ம சங்கடம் ஒருபுறமிருக்க சிவகாமியின் நிலைமை என்ன? அவளுக்கு நன்மையானது எது? இந்தப் பொருத்தமில்லாத காதலினால், அவளுக்கு உண்மையில் நன்மை உண்டாகுமா? இது விஷயத்தில், ஆயனருடைய அபிப்பிராயந்தான் என்ன?

இத்தனை மனக் குழப்பங்களுக்கிடையே ஒன்று மட்டும் மிகத் தெளிவாயிருந்தது. சிவகாமி என்று எண்ணியதுமே, அவருடைய மனத்தில் பயபக்தியும் மரியாதையும் அன்பும் அபிமானமும் சங்கோசமும் வாத்ஸல்யமும் கலந்த புனிதமான தெய்வீக உணர்ச்சி தோன்றிற்று. சிவகாமி விஷயத்தில் அவருடைய மன நிலைமைக்குத் தகுந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால், சீதாதேவி விஷயத்தில் லக்ஷ்மணனுடைய மன நிலைமையைத்தான் சொல்ல வேண்டும்.

ரதத்தில் இருந்தது மாமல்லர் அல்ல என்று கண்டதும், வருகிறவர்கள் வேறு யார் என்று தெரிந்து கொள்ளக்கூடச் சிவகாமி ஆசைப்படவில்லை. உடனே அவளுடைய கவனம் ரதத்தை ஓட்டிக்கொண்டு வந்த கண்ணபிரான் மீது சென்றது.

கண்ணபிரான் ரதத்தின் முகப்புத் தட்டிலிருந்து குதித்து முன்னால் வர, பரஞ்சோதி அவனைத் தொடர்ந்து பின்னால் வந்தார். அவர்கள் நெருங்கி வந்ததும், சிவகாமி கண்ணபிரானை நோக்கி, "அண்ணா! வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?" என்று கேட்டாள். அவளுடைய குரலில் தீனமும் ஏமாற்றமும் நன்கு தொனித்தன.

"இல்லை, தாயே! இல்லை! வீட்டில் ஒருவரும் சௌக்கியம் இல்லை. கமலிக்குத் தலைவலி, அப்பாவுக்கு முழங்கால் வலி, எனக்கும் உடம்பு சரியாகவே இல்லை..."

"உங்களுக்கு என்ன அண்ணா?" என்று சிவகாமி கேட்டாள்.

"அதுதான் தெரியவில்லை வயிற்றில் ஏதோ கோளாறு. கமலி, 'உன் வியாதிக்கு மருந்து பூனைதான்!' என்கிறாள்."

"பூனை மருந்தா? இது என்ன கூத்து!" என்றாள் சிவகாமி.

"ஆமாம், தாயே! இப்போதெல்லாம் எனக்கு அசாத்தியமாகப் பசிக்கிறது. நேற்று ராத்திரி கமலி சுட்டு வைத்திருந்த ஒன்பது அப்பம், ஏழு தோசை, பன்னிரண்டு கொழுக்கட்டை அவ்வளவையும் தின்று விட்டு, 'இன்னும் ஏதாவது இருக்கிறதா கமலி!' என்று கேட்டேன். 'உன் வயிற்றில் எலி இருக்கிறது. ஒரு பூனையைச் சாப்பிடு, அப்போதுதான் உன் பசி தீரும் என்றாள்!"

இதைக் கேட்ட சிவகாமி 'கலீ'ரென்று சிரித்தாள். பரஞ்சோதியினாலும் சிரிக்காமலிருக்க முடியவில்லை. பரஞ்சோதியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட சிவகாமி அவர் பக்கம் திரும்பிப் பார்த்தாள். "ஆஹா! இது யார்?"

பரஞ்சோதி தைரியமடைந்து, "அம்மணி! என்னைத் தெரியவில்லையா?" என்று கேட்டார்.

"யார்? திருவெண்காட்டிலிருந்து..."

"ஆம் நான்தான்! திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து அப்பாவுக்கு ஓலை கொண்டுவந்த பரஞ்சோதிதான்..."

அப்போது கண்ணபிரான் குறுக்கிட்டு, "மன்னிக்க வேண்டும்! கல்யாணச் சந்தடியில் மாப்பிள்ளையை மறந்து போனேன். தாயே! இவர் யார் என்று நான் சொல்கிறேன். காஞ்சிக் கோட்டையின் பிரதம தளபதி இவர். கோட்டைக் காவலுக்காகச் சக்கரவர்த்தியே இவரை அனுப்பியிருக்கிறார். இனிமேல் காஞ்சிக் கோட்டையைப் போல் ஒளிந்து கொள்வதற்குப் பத்திரமான இடம் பூலோகத்திலேயே கிடையாது. இவருடைய கட்டளை இல்லாமல் யமன்கூட இனிமேல் கோட்டைக்குள் நுழைய முடியாது!" என்றான்.

கண்ணபிரான் ஒருமாதிரி விதூஷகன். இந்த மாதிரியெல்லாம் மாமல்லரிடமே பேசுவதற்கு உரிமை பெற்றவன் என்று பரஞ்சோதி அறிந்திருந்தார். எனவே, அவனுடைய பேச்சைப் பொருட்படுத்தாமல், சிவகாமியை நோக்கி, "அப்பா எங்கே? உள்ளே இருக்கிறாரா?" என்று கேட்டார்.

கண்ணபிரானுடைய வேடிக்கைப் பேச்சு அந்தச் சமயம் சிவகாமிக்கும் பிடிக்கவில்லை என்று அவளுடைய முகக்குறி காட்டிற்று.

"அப்பா அதோ வருகிறார்!" என்றாள்.

பரஞ்சோதி திரும்பிப் பார்த்தார். ஆயனர் மரத்தடியிலிருந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்ததும் தளபதி பரஞ்சோதி, "ஐயா! என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று கேட்டார்.

உடனே ஆயனர் ஆவலுடன், "யார்? பரஞ்சோதியா?" என்று விரைந்து வந்து அவரைத் தழுவிக் கொண்டார்.

பிறகு, சற்றுத் தாழ்ந்த குரலில், "தம்பி! போன காரியம் எப்படி? காயா, பழமா?" என்று கேட்டார்.

அப்போது அவருடைய கண்களில் தோன்றிய வெறியையும், குரலில் தொனித்த பரபரப்பையும் கவனித்த பரஞ்சோதிக்குக் கண்ணில் நீர் துளித்தது.

தழுதழுத்த மெல்லிய குரலில், "இந்தத் தடவை காரியம் ஜயமாகவில்லை. வெறுங்கையுடனேதான் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால், என்றைக்காவது ஒருநாள் நிச்சயமாக அஜந்தா இரகசியத்தை அறிந்து வந்து உங்களுக்குத் தெரிவிப்பேன்" என்று கூறினார்.

"வேண்டாம், தம்பி! வேண்டாம் நீ வழியில் பல்லவ சைனியத்தில் சேர்ந்துவிட்டதாக நானும் கேள்விப்பட்டேன். ஒருவேளை பொய்யாயிருக்குமோ என்று நினைத்தேன். அதனால் பாதகமில்லை. என்றும் அழியா வர்ண இரகசியத்தை நானே சீக்கிரத்தில் கண்டுபிடித்து விடுவேன். தம்பி! சில புதிய சோதனைகள் செய்து கொண்டிருக்கிறேன். வருகிறாயா காட்டுகிறேன்!" என்று ஆயனர் தாம் உட்கார்ந்திருந்த மரத்தடியை நோக்கினார்.

இதற்குள், சிவகாமி "அப்பா! அண்ணன் எட்டு மாதங்கள் கழித்து வந்திருக்கிறார். உள்ளே வந்து உட்காரச் சொல்லுங்கள். எல்லாம் விவரமாகக் கேட்கலாம்" என்றாள்.

"ஆமாம், ஆமாம்! வா, தம்பி!" என்று கூறி, ஆயனர் பரஞ்சோதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.