உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

167



4. செய்ய வேண்டிய செயலை உரிய காலம் அறிந்து செய்யாதவனுக்குச் செயல் கைகூடி வரும் என்பது பொய்.

5. எதிர் காலத்தில் நேரக் கூடியதை துணித்துணர்ந்து (உத்தேசமாகவாவது அறிந்து) அதற்கு ஏற்ப முன்கூட்டி நடந்து கொள்ளாதவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது பொய்.

6. உற்ற செயலைக் காய்ந்து வெறுத்துச் செய்யா தவன் உயர்வு பெறுதல் இயலாது.

7. எதையும் பொறுத்து அடக்கமாய் இல்லாதவன், பெருமையை வேண்டிப் பெறுதல் இயலாது.

8. தனக்குப் பெருமை வேண்டாதவன், - அதாவது - தற்பெருமையை விரும்பாதவன் சிறுமை அடைதல் இல்லை.

9. பொருளின் மேல் பேரவாக் கொள்பவன், முறை யாகப் பொருள் ஈட்டுவான் என்பது பொய்.

10. தூய்மையான உள்ளத்தான் அல்லாதவன், உயர்ந்த தவம் செய்வான் என்பது பொய்.

8. உறுதல் எளிதான பத்து மொழிகள்

1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுள், புகழான செயல்களை விரும்பிச் செய்பவர்க்குத் தேவர் வாழும் இன்ப உலகம் எளிதில் கிடைக்கும்.

2. போரை ஏற்று உண்மையாய்ப் போரிடுபவர்க்குப் பெரிய போரில் வெற்றி கிடைத்தல் எளிது.

3. குளிர்ந்த உள்ளன்பு உடையவர்கட்கு, பிறர் விரும்பும் பொருளைக் கொடுத்தல் எளிது.

4, பிறர்மேல் கோள் சொல்லுதலை விரும்புபவர், எந்த மறை பொருளையும் (இரகசியத்தையும்) எளிதில் வெளியிட்டுவிடுவர்.