அலை ஓசை/பிரளயம்/நரக வாசல் திறந்தது!

விக்கிமூலம் இலிருந்து

இருபத்து எட்டாம் அத்தியாயம் நரக வாசல் திறந்தது!

டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் தெரிந்த உருவம் சீதாவின் மனதில் பயத்தை உண்டாக்கவில்லை; ஆனால் வியப்பை உண்டாக்கியது. அந்த தாடிக்கார முஸ்லிமை அவள் ஏற்கெனவே இரண்டொரு தடவை பார்த்ததுண்டு. ஆக்ரா கோர்ட்டில் வந்து அவளைக் காப்பாற்றிய மனிதர் அவர்தான். முன்பின் தெரியாத அந்த மனிதர் எதற்காகத் தனக்கு அவ்வளவு பெரிய உதவியைச் செய்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவள் மனதில் அமுங்கிக் கிடந்தது. இப்போது அது பொங்கி எழுந்தது. "சீதா! விளக்கை அணை! கதவைத் திற! நேரம் அதிகம் இல்லை! சீக்கிரம்!" என்று உருவம் சொல்லிற்று. சீதா டார்ச் லைட்டை அணைத்தாள். வெளிச்சமின்றி இருள் சூழ்ந்ததும் அவளுடைய நெஞ்சில் மீண்டும் பதை பதைப்பு உண்டாயிற்று. அதைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் பக்கம் சென்றாள். "கதவைத் திற, சீதா, கதவைத் திற!" என்றது இருளில் வந்த குரல். அவ்வளவு அவசரமாகக் கதவைத் திறக்கச் சீதா தயாராயில்லை. "நீங்கள் யார்? எதற்காகக் கதவைத் திறக்க வேண்டும்?" என்று கூறி, "இங்கே புருஷர் யாருமில்லை!" என்று சேர்த்துக் கொண்டாள். "எனக்குத் தெரியும், அதனாலேதான் வந்தேன். என்னைத் தெரியவில்லையா, உனக்கு?" "ஆக்ரா கோர்ட்டில்..." "ஆமாம்; அது நான்தான், வேறு நினைவு ஒன்றும் உனக்கு வரவில்லையா? என்னுடைய குரல்...." "அப்பா!...." "ஆமாம்! நான்தான், சீதா! உன் அப்பாதான்!" "இந்த வேஷம்..." "அதையெல்லாம் பற்றிக் கேட்க இதுதானா சமயம்? சீதா! இன்னும் அரைமணி நேரத்தில் இந்த ஊரில் நரகத்தின் வாசல் திறக்கப் போகிறது. இரத்த வெறி கொண்ட பேய்களும் பிசாசுகளும் வந்து பயங்கரத் தாண்டவம் புரியப் போகின்றன.

"ஐயோ! அது யார்?" என்று அலறினாள் சீதா. பக்கத்துச் சுவர் மறைவிலிருந்து ஒரு பெண் உருவம் வெளிப்பட்டு வந்தது. "சத்தம் போடாதே! காரியம் கெட்டுவிடும். இவள் உன் சித்தி உன்னைக் காப்பாற்றத்தான் இவளும் வந்திருக்கிறாள்." இதற்குள் அந்த ஸ்திரீ, "இல்லை! இவளைக் காப்பாற்ற நான் வரவில்லை. இவள் நன்றி கெட்ட நிர்மூடம். என் பேத்தியை! வஸந்தி கண்மணியைக் காப்பாற்ற நான் வந்தேன். உங்கள் புத்தியற்ற பெண்ணைக் கட்டிக் கொண்டு நீங்களே அழுங்கள்! அடி பெண்ணே, உடனே கதவைத் திறக்கிறாயா! இந்தக் கத்தியால் உன்னைக் குத்திக் கொன்று விடட்டுமா?' என்றாள். அவள் யார் என்பது சீதாவுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. இனிமேல் கதவைத் திறக்கத் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. ஏதோ பெரிய விபத்து வரப்போகிறது என்றும் அதிலிருந்து தன்னைக் காப்பாற்றவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் சீதாவின் உள் மனதுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. நடுங்கிய கைகளினால் கதவின் தாளைத் திறந்தாள். மறுகணம் கதவைத் தள்ளிக் கொண்டு இருவரும் உள்ளே வந்தார்கள். "அப்பா! உங்களை இந்த நிலைமையில் இந்த வேஷத்திலா நான் பார்க்க வேண்டும்?" என்றாள் சீதா. அப்போது ரஸியா பேகம் குறுக்கிட்டுக் கூறினாள்:- "பின் எப்போது பார்க்க வேண்டும்? உலகத்தில் எல்லாத் தகப்பன்மார்களும் பெண் நல்ல நிலைமையில் இருக்கும்போது வந்து பாராட்டுவார்கள், சீராட்டுவார்கள் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. உன் அப்பா உன்னிடம் வைத்திருக்கும் அன்பை இன்றைக்குத்தான் பார்க்கப்போகிறாய்! அடி பெண்ணே! உன்னைப்பற்றிய கவலையினால் இந்தக் கிழவர் எத்தனை நாளாகத் தூங்கவில்லை தெரியுமா? டில்லியிலிருந்து என்னையும் கட்டி இழுத்துக்கொண்டு வந்து இந்தப் பாழாய்ப் போன ஊரில் ஒரு மாதமாக உட்கார்ந்திருக்கிறார்!" "இவள் சொல்வதை நீ நம்பாதே, சீதா! என்னைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்தவள் இவள்தான்!" என்றார் மௌல்வி. "நம்முடைய சண்டையை அப்புறம் தீர்த்துக்கொள்ளலாம். இவளிடம் சொல்ல வேண்டியதை உடனே சொல்லுங்கள்!" என்றாள் ரஸியா பேகம்.

சீதாவின் தந்தை கூறினார்: "ஆமாம்; வீண்பொழுதுதான் போக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாதமாக வீண் பொழுது போக்கி விட்டோ ம். ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நேற்று வரையில் நான்கூட எதிர்பார்க்கவில்லை. சீதா! நேற்றுமுதல் பஞ்சாப் முழுவதும் பயங்கரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. மனுஷ்யர்கள் செய்வார்கள் என்று எண்ணக்கூடாத காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். இந்த ஊரில் இன்னும் அரைமணி நேரத்தில் நரகத்தைத் திறந்துவிடப் போகிறார்கள். ஆயிரம் பதினாயிரம் பிசாசுகள் வந்து கூத்தாடப் போகின்றன. அந்தப் பிசாசுகள் இன்னது செய்யும், இன்னது செய்யாது என்று சொல்ல முடியாது. இந்த ஊரிலுள்ள ஹிந்துக்கள் - சீக்கியர்களில் ஒரு குஞ்சு, குழந்தையாவது தப்பிப் பிழைக்குமா என்பது சந்தேகந்தான். நீயும் உன் குழந்தையும் தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எங்களை நம்பி உடனே புறப்பட வேண்டும். முதலில் உன் குழந்தையை இவளோடு அனுப்பிவிட வேண்டும்; பிறகு நீ என்னோடு...." "அப்பா! நான் வரமுடியாது; குழந்தையை வேண்டுமானால் உங்களுடன் அனுப்பிவிடுகிறேன். அவர் இங்கே என்னைத் தேடினால்?..." "பைத்தியக்காரப் பெண்ணே! 'அவர்' என்று உன் புருஷனைத்தானே சொல்லுகிறாய்? அவன் பரம முட்டாள்! இப்பேர்ப்பட்ட சமயத்தில் உன்னைத் தனியாக விட்டுப் போயிருக்கிறான் பார்!" "அம்மா! நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்ததற்காகச் சந்தோஷம். ஆனால் என் புருஷனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்வதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது...." "சரி, சரி! நீ ஆச்சு, உன் புருஷன் ஆச்சு, உன் அப்பா ஆச்சு! எப்படியாவது போய்த் தொலையுங்கள், உன் குழந்தையை அனுப்புவதாகச் சொன்னாயே? அதையாவது செய்! சீக்கிரம் அவளை எழுப்பு!...அதோ...!" "ஆகா நரக வாசல் திறந்தாகி விட்டது!" என்றார் மௌல்வி. தூரத்தில் திடீரென்று பயங்கரமான கூச்சல்... ஊளைச் சத்தங்கள் கேட்டன.

கரிய உருவங்கள் கையில் தீவர்த்திகளைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவது தெரிந்தது. "சீதா! இனி ஒரு நிமிஷமும் தாமதிப்பதற்கில்லை; வஸந்தியை உடனே எழுப்பு!" என்றார் மௌல்வி. சீதா தயங்கித் தத்தளித்து நின்றாள். "குழந்தையை எப்படிக் கொடுப்பேன்? அவர் வந்து கேட்டால்...." என்றாள். "சீதா நான் உன்னைப் பெற்று வளர்த்த தகப்பன். என்னைக் காட்டிலும் உன்னிடம் அதிக அன்புள்ளவள் இந்த ரஸியா பேகம். இவளை நம்பி உன் குழந்தையைக் கொடு! ஒன்றும் கெடுதல் வராது!" "நீயும் இவரும் இந்த ஊரிலேயே இருந்து அழிந்துபோய் விட்டால்கூட நான் எப்படியாவது உன் புருஷனைத் தேடிப் பிடித்துக் குழந்தையைப் பத்திரமாய் அவனிடம் ஒப்புவித்து விடுகிறேன்" என்றாள் ரஸியா பேகம். சீதாவின் பார்வை சுவரில் மாட்டியிருந்த காந்தி மகான் படத்தின்மீது விழுந்தது. ஜன்னல் வழியாக வந்த மங்கலான வெளிச்சத்தில் காந்திஜியின் முகத் தோற்றம், "நம்பிக் கொடு உனக்கு அதனால் கெடுதல் வராது!" என்று சொல்லுவது போலிருந்தது. சீதா, கால், கைகள் பதற ஓடிச் சென்று, கட்டிலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கிய குழந்தையைத் தட்டி எழுப்பினாள். வஸந்தி எழுந்து உட்கார்ந்துகொண்டு மிரண்ட கண்களால் தனக்கு முன்னால் நின்றவர்களை விழித்துப் பார்த்தாள். குழந்தையைத் தட்டி எழுப்பிய அதே நிமிஷத்தில் சீதா அவளிடம் என்ன சொல்லவேண்டும் என்பது பற்றித் தீர்மானித் திருந்தாள். "வஸந்தி! டில்லியில் அப்பாவுக்கு உடம்பு சரிப்படவில்லையாம். நாம் உடனே டில்லிக்குப் புறப்பட்டுப் போகவேண்டும்!" என்றாள்.

"சரி, அம்மா! இதோ நான் தயார்!" என்று சொல்லிக் கொண்டே கட்டிலிலிருந்து வஸந்தி குதித்து வந்தாள். ரஸியா பேகம், "என் கண்ணே!" என்று அவளைக் கட்டித் தழுவிக் கொண்டாள். "ஓகோ! இந்த மாமியை எனக்குத் தெரியும், அன்றைக்கு மார்க்கெட்டில் ஆப்பிள் பழம் வாங்கிக் கொடுத்துவிட்டு முத்தம் இட்டீர்களே?" என்றாள் வஸந்தி. "ஆமாண்டி கண்ணே! உனக்கு ஞாபகம் இருக்கிறதே!" "நீங்களும் டில்லிக்கு வரப் போகிறீர்களா?" என்று கேட்டாள் வஸந்தி. "ஆமாம்; நானும் டில்லிக்குத்தான் போகிறேன்!" என்று சொன்னாள் ரஸியா பேகம். "வஸந்தி! நீ அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதானே? நீ இந்தப் பாட்டியுடன் இப்போதே புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். நான் வீட்டுக் கதவுகளையெல்லாம் பூட்டிக்கொண்டு இந்தத் தாத்தாவுடன் பின்னால் வந்து சேருகிறேன்!" என்றாள் சீதா. "நான் அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதான். ஆனால் நீ மட்டும் இனிமேல் பொய் சொல்லாதே!" என்றாள் வஸந்தி. மூவரும் திகைத்து நின்றார்கள். "நான் முன்னாடியே விழித்துக்கொண்டு விட்டேன். நீங்கள் பேசிக் கொண்டி ருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன்" என்றாள் வஸந்தி. சீதாவுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது. "சரி; இப்போது என்ன சொல்கிறாய்? இந்தப் பாட்டியுடன் போகிறாயா, மாட்டாயா?" "நான் போகிறேன், அம்மா! கட்டாயம் போகிறேன். நீயும் வந்துவிடு என்றுதான் சொல்லுகிறேன். அப்பா நம்மை இங்கே விட்டுவிட்டுப் போனது பெரிய பிசகு! நீ இங்கே இருக்கிறேன் என்று சொல்வது அதைவிடப் பெரிய பிசகு!" என்றாள் வஸந்தி. "அப்படிச் சொல்லடி, என் கண்ணே!" என்று ரஸியாபேகம் குழந்தையை முத்தமிட்டாள்.

"சீதா! நாங்கள் சொன்னதைத்தான் கேட்கவில்லை; குழந்தை சொல்வதையாவது கேட்கிறாயா?" என்றாள். "அம்மா வராவிட்டால் நானும் வரமாட்டேன்!" என்றாள் வஸந்தி. "சரி! வேறு வழியில்லை, கடவுள் விட்ட வழியாகட்டும்! நானும் வருகிறேன்" என்றாள் சீதா. தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த பயங்கரமான குழப்பச் சத்தங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. அப்போது மௌல்வி சாகிபு வஸந்தியைப் பார்த்து, "நீ ரொம்ப சமர்த்துக் குழந்தை, வஸந்தி! நாம் எல்லோரும் சேர்ந்து தப்பித்துச் செல்லப் பார்ப்பது அபாயம். நீயும் இந்தப் பாட்டியும் முதலில் போங்கள்; கால் மணி நேரத்துக்கெல்லாம் உன் அம்மாவை அழைத்துக்கொண்டு நான் வருகிறேன்" என்றார். "சரி" என்றாள் வஸந்தி. அடுத்த நிமிஷம் ரஸியா பேகமும் வஸந்தியும் மச்சுப் படியில் இறங்கித் துரிதமாகச் சென்றார்கள். "அப்பா!" "சீதா!" "சற்று முன்னால் ஒரு பெரிய பாதகத்தி லிருந்து தப்பிப் பிழைத்தேன். நீங்கள் வந்து மாடித் தாழ்வாரத்தில் ஜன்னல் ஓரத்தில் நின்றபோது கைத்துப்பாக்கியால் உங்களைச் சுட்டுவிட நினைத்தேன். அவர் எனக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்..." "ஏன் சுடவில்லை, அம்மா!" "காந்தி மகானுடைய திருமுகம் என் மனக்கண் முன்னால் தோன்றிச் சுடாமல் தடுத்தது. சுட்டிருந்தால் எப்படிப்பட்ட பாதகத்தைச் செய்திருப்பேன்! பெற்ற தகப்பனாரை...." "பெற்ற தகப்பனாயிருந்தாலும் நான் செய்திருக்கும் பாவங்களுக்கு அது தகுந்த தண்டனையாயிருந்திருக்கும். ஆனால் அத்துடன் அது போயிராது. இந்த வீட்டின் பேரில் சிலர் கண் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவர்கள் ஓடிவந்திருப்பார்கள், நீயும் குழந்தையும்...." "அப்பா! இப்போது நாம் என்ன செய்யலாம்? நாமும் புறப்பட வேண்டியதுதானே?"

"இல்லை, சீதா! நாம் உடனே புறப்படுவதற்கில்லை. கொஞ்ச நேரம் இங்கே இருந்தாக வேண்டும். யாரும் தப்பித்துப் போகாதபடி இந்த ஊரைச் சுற்றிக் காவல் போட்டிருக்கிறார்கள். காவல் வேலை ஒப்புக்கொண்டிருப்பவர்களில் நான் ஒருவன். என்னுடைய இடத்துக்குப் போய் நான் காவல் இருக்கிறேன். துவேஷப்பிசாசுகள் இந்த வீட்டையும் தாக்குவதற்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் முதலில் நான் வருவேன். அந்தச் சமயத்தில் நான் எப்படி நடந்துகொண்டலும் நீ அதிசயப்படக் கூடாது; பயப்படவும் கூடாது. நான் கத்தியினால் உன்னைக் குத்துவதற்கு வந்தால்கூடப் பயப்பட வேண்டாம். முடியுமானால் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்துவிட்டதுபோல் பாசாங்கு செய்! இதெல்லாம் எதற்காக என்று என்னை இப்போது கேட்காதே! தப்பிப் பிழைத்த பிற்பாடு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இந்தச் சமயம் நம்முடைய யுக்தி புத்திகளினால்தான் பிழைக்கவேண்டும்...." குழப்பமும் கூச்சலும் மேலும் நெருங்கி வந்து விட்டன. ஆங்காங்கே வீடுகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. எரியும் வீடுகளிலிருந்து உண்டான கோரமான வெளிச்சத்தில் கையில் கத்தி, கோடாரி, அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் கரிய உருவங்கள் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு ஓடிய காட்சி தென்பட்டது. "சீதா! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். கடவுள் உன்னை நிச்சயமாகக் காப்பாற்றுவார்!" என்று சொல்லி விட்டு மௌல்வி சாகிபு விரைந்து கீழே சென்றார். சீதா காத்துக் கொண்டிருந்தாள். காத்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக நீண்டு அவளை வேதனைப்படுத்தியது. குழப்பமும் கூச்சலும் தீயும் புகையும் அழுகையும் பிரலாபமும் நெருங்கி வந்து கொண்டிருந்தன. சீதாவுக்குத் தான் குழந்தைப் பிராயத்தில் பம்பாயில் ஆனந்தமாகக் கழித்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. அம்மாவும் அப்பாவும் தன்னை மடியில் வைத்துக் கொஞ்சிய நாட்கள் நினைவு வந்தன. அந்தத் துரைசாமி ஐயர்தானா இப்போது இப்படி இருக்கிறார்? நம்ப முடியவில்லையே! ஆயினும் நம்பித்தான் ஆகவேண்டும்.

திடீரென்று ராஜம்பேட்டை ஞாபகம் வந்தது. சாலையில் வண்டி குடை கவிழ்ந்து தான் ஓடையில் விழுந்ததும் சூரியா தன்னைக் காப்பாற்றுவதற்காக ஓடி வந்து கரையில் நின்ற தோற்றமும் மனக் கண்முன் தோன்றின. அந்தச் சூரியா இப்போது எங்கே இருக்கிறான்? தாரிணியின் காதலில் மதிமயங்கிக் கிடக்கிறானா? ஆகா! காதல் என்ற ஒரு வார்த்தை! எந்த மூடனோ சிருஷ்டி செய்தது! அதை வைத்துக்கொண்டு கதை எழுதுகிறவர்கள் புத்தகம் புத்தகமாய் எழுதித் தள்ளுகிறார்கள். என்ன பொய்! என்ன ஏமாற்றம்! ஆனால் அடியோடு பொய் என்றும் ஏமாற்றம் என்றும் சொல்லிவிட முடியுமா? ராஜம்பேட்டையில் லலிதாவைப் பார்க்க வந்த சௌந்தரராகவனைத் தான் பார்த்ததும் காதல் கொண்டதும் பொய்யாகுமா?- இருந்தாலும் லலிதாவுக்கு அப்படி ஒரு துரோகம் தான் செய்திருக்கக் கூடாது. அந்தத் துரோகத்தின் பலன்தான் பிற்பாடு வாழ்க்கை முழுதும் தான் கஷ்டங்களுக்கு உள்ளாகும்படி ஆயிற்று! வாழ்க்கை முழுதும் எத்தனை கஷ்டப்பட்டால்தான் என்ன? சென்ற ஒரு வருஷ காலம் இந்த அழகான பாஞ்சால நாட்டில் தான் வாழ்ந்த இன்ப வாழ்வுக்கு உலகத்தில் வேறு என்ன இன்பம் இணையாக முடியும்? அத்தகைய இன்ப வாழ்வுக்கு இப்போது இறுதி வந்துவிட்டது போலிருக்கிறதே!... இதோ சமீபத்தில், வீட்டண்டை யில் நெருங்கி வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே!...அப்புறம் நடந்த சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன. அவையெல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய சொந்த அநுபவங்களாகவே தோன்றவில்லை. அதிதுரிதமான 'டெம்போ'வுடன் எடுக்கப்பட்ட சினிமாவில் பார்க்கும் காட்சிகளைப் போலவே தோன்றின. ஒரு நிமிஷம் அந்த வீட்டு வாசலில் பயங்கரமான கூச்சல் கேட்டது. மறு நிமிஷமே வாசற் கதவைக் கோடரிகளால் பிளக்கும் சத்தம் கேட்டது. திடு திடுவென்று பலர் உள்ளே நுழைந்தார்கள். மச்சுப்படிகளின் பேரில் தடதடவென்று ஏறி வந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் முதலில் மௌல்வி சாகிபு வந்தார். அவர் கையில் ஒரு கூரிய கத்தி பளபளவென்று மின்னியது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் பக்கத்தில் வந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். பிறகு அவளை ஒரு காலால் மிதித்துக் கொண்டு திரும்பி நின்றார். பின்னால் வந்தவர்களைப் பார்த்து "இவள் என்னுடையவள்" "இவள் என்னுடையவள்" என்று கூச்சலிட்டார். பின்னால் வந்த பயங்கர ராட்சஸர்கள் சிறிது தயங்கி நின்றார்கள். ஒருவன் சிரித்தான்; இன்னொருவன் "கிழவனுக்கு வந்த கேட்டைப் பார்!" என்றான். மற்றொருவன் அருகில் பாய்ந்து வந்து கிழவனைக் குத்திப் போடுவதாகச் சொல்லிக்கொண்டு கத்தியை ஓங்கினான். அவனைத் தடுப்பதற்காக வந்த இன்னொருவன் காலால் சீதாவை ஒரு மிதி மிதித்தான். ஆயினும் சீதாவின் தகப்பனார் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதற்குள்ளே ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்றான். "ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று மௌல்வி சாகிபு கத்தினார். வெளியிலிருந்து அதே சமயத்தில் புகை திரள் திரளாகக் கிளம்பி மேலே சுழன்று வரத் தொடங்கியது. அறைக்குள் வந்த மனிதர்கள் திரும்பி ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவருடைய கண்ணில் சுவரில் மாட்டியிருந்த மகாத்மாவின் படம் தென்பட்டது. அதை அவன் எட்டி எடுத்துத் தரையில் ஓங்கி எறிந்தான். படத்தின் கண்ணாடி உடைந்த சத்தம் படார் என்று கேட்டது. ஒரு கண்ணாடித் துண்டு மௌல்வி சாகிபுவின் முழங்காலுக்குக் கீழே சதையில் பாய்ந்தது. அந்த இடத்திலிருந்து குபு குபுவென்று இரத்தம் பெருகியது. மனிதர்கள் தடதடவென்று மச்சுப்படியில் இறங்கி ஓடினார்கள். வெளியே புகைத்திரளுக்கு மத்தியில் தீயின் ஜீவாலை தென்பட்டது. இந்தச் சமயத்தில் சீதா தன் பிரக்ஞையை இழக்கத் தொடங்கினாள். 'ஓ' என்ற ஓசை மட்டும் சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது. இது கடலின் அலை ஓசையை நினைவூட்டியது. அந்தக் கடைசி நினைவோடு சீதா மூர்ச்சையடைந்தாள்.

நரகத்தில் எல்லாத் திசையும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. திரள் திரளாகப் புகை கிளம்பி நாலா பக்கமும் பரவிக் கொண்டிருந்தது. பேய்களும் பூதங்களும் யம கிங்கரர்களும் ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்கள். வயது சென்ற ஸ்திரீகளையும் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து எரிகிற தீயில் தள்ளினார்கள். இந்த நரகத்தில் உள்ள போலீஸ்காரர்கள் வெகு விசித்திரமானவர்கள்! அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள். நெருப்பில் விழாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குறி பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்கள். இப்படிப்பட்ட நரகத்தில் நல்ல பூதம் ஒன்று சீதாவைத் தூக்கிக் கொண்டு இருண்ட சந்துகள் - பொந்துகள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. அது ஆங்காங்கு நின்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு ஜாக்கிரதையாகச் சென்றது. சில சமயம் மிக மெள்ள மெள்ள நடந்தது; சில சமயம் ஒரே தாண்டாகத் தாண்டி ஓடிற்று. சில சமயம் சுவரில் ஒட்டிக்கொண்டு சென்றது; சில சமயம் மரங்களின் பின்னால் ஒளிந்து மறைந்து பாய்ந்து சென்றது. இவ்விதம் அந்த பூதம் நீண்ட நேரம் பாய்க்கொண்டேயிருந்தது. நரக லோகத்தில் உள்ள இருண்ட சந்துகளுக்கு முடிவே கிடையாதோ என்று தோன்றும்படியாக அந்த நல்ல பூதம் சீதாவைத் தோளில் போட்டுக் கொண்டு நெடுநேரம் நடந்தது. ஆகா! கடைசியில் நரகத்தைத் தாண்டியாயிற்று போலும்! வெப்பமான புகையும் தீயின் அனலும் இப்போது முகத்தில் வீசி எரிச்சல் உண்டாக்கவில்லை. குளிர்ந்த காற்று முகத்தில் பட்டு இதம் தருகிறது. நரகத்தின் கோர சத்தங்களும் இப்போது வெகுதூரத்திலேதான் கேட்கின்றன! நரக வாசலைக் கடந்து சொர்க்கத்துக்குள் புகுந்தாயிற்று போலும்!

சீதாவுக்கு நினைவு வரத் தொடங்கியது. மூடியிருந்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். எண்ணிறந்த வெள்ளி நட்சத்திரங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருப்பது கண்ணில் பட்டது. ஆகா! வான வெளியில் சொர்க்க பூமியை நெருங்கி இப்போது போய்க்கொண்டிருக்கிறோம் போலும்! புஷ்பக விமானத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் போலும் தன் நெற்றியை மிருதுவாகத் தடவிக் கொடுக்கும் கை, தன்னை நரகத்திலிருந்து காப்பாற்றிய தேவதூதனின் திருக்கரமாகவே இருக்க வேண்டும்! இதெல்லாம் வீண் பிரமை என்று சீக்கிரத்திலே சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. கடகடவென்று கட்டை வண்டியின் சத்தமும் வண்டி ஆட்டத்தினால் உடம்பு ஆடி உண்டான வலியும் பூமியிலேதான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைச் சீதாவுக்கு உண்டாக்கின. நெற்றியைத் தடவிக் கொண்டிருக்கும் கை மௌல்வி சாகிபுவின் கை; அதாவது தன் தந்தையின் கை. "அப்பா!" "சீதா! விழித்துக் கொண்டாயா?" "ரொம்ப நேரம் தூங்கி விட்டேனா?" "பொழுது விடியப் போகிறது" "குழந்தை வஸந்தி...?" "குழந்தை பத்திரமாக இருப்பாள்; கவலைப்படாதே; உன் சித்தி ரொம்பக் கெட்டிக்காரி. இதைப்போல எத்தனையோ சமாளித்தவள்." சீதா சிறிது நேரம் மௌனமாயிருந்து விட்டு, "அப்பா இது என்ன வண்டி?" என்று கேட்டாள். "இது பாஞ்சால நாட்டின் புராதன வண்டி, சீதா! கோவேறு கழுதை பூட்டிய வண்டி!" "வண்டி ஓட்டுகிறவன் யார்?" "ஒரு மாதமாக என்னிடம் வேலை செய்த பையன்." "அவனை நம்பலாமா?" "இந்தக் காலத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்!" "இந்த வண்டி ஏது?" "விலைக்கு வாங்கினேன், இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு உபயோகமாயிருக்கட்டும் என்றுதான்!" "இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்ன?" "ஒரு மாதிரி தெரியும், ஆனால் இவ்வளவு பயங்கரமாயிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை."

சற்றுப் பொறுத்துச் சீதா, "இந்த வண்டியில் இன்னும் ரொம்ப நேரம் போக வேண்டுமா?" என்று கேட்டாள். "ஏன் உடம்பு வலிக்கிறதா?" "ஆமாம்; உடம்பு வலிக்கிறது." "வலிக்காமல் என்ன செய்யும்? அந்த ராட்சஸர்களும் நானும் உன்னை எப்படி மிதித்து விட்டோ ம்? கொஞ்சம் பொறுத்துக்கொள், சீதா! சீக்கிரத்தில் வண்டியை நிறுத்தச் சொல்கிறேன். அதோ தெரிகிறதே, அந்தப் பாறை மறைவில் வண்டியை நிறுத்தலாம்!" என்றார் மௌல்வி சாகிபு. சீதா எழுந்து உட்கார்ந்தாள், அது மேலே கூண்டு இல்லாத திறந்த வண்டி. ஆனால் நாலு பக்கமும் ஒரு முழ உயரம் அடைப்பு இருந்தது. அடைப்புக்கு மேலாகப் பார்த்தாள். சாலையின் இரு புறமும் குட்டையான ஈச்ச மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. சற்று தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை பிரம்ம ராட்சதனைப் போல் நின்றது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சீதா தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் மனத்திற்குள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வி அப்போது வெளியில் வந்தது. "அப்பா! நீங்கள் எதற்காக முஸ்லிம் மதத்தில் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள், தந்தை மௌனமாயிருந்தார். "நான் கேட்டது தவறாயிருந்தால் மன்னியுங்கள். எதற்காகக் கேட்டேன் என்றால், உங்களுக்குக் கடவுளிடத்தில் நம்பிக்கை உண்டா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான். கடவுள் ஒருவர் இருந்தால் இந்த மாதிரி கஷ்டங்களையெல்லாம் ஜனங்களுக்கு எதற்காகக் கொடுக்கிறார்?" என்றாள் சீதா! "இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கடவுள் உண்டா என்ற சந்தேகம் யாருக்கும் தோன்றக் கூடியதுதான். அந்த விஷயத்தைப் பற்றி நீ ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முதலில் நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறேன். எப்படி ஆரம்பிப்பது என்றுதான் யோசித்தேன். முதலிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன். சீதா! என் கதையைத் தவிர முக்கியமான இரகசியம் ஒன்றையும் சொல்லப் போகிறேன். எப்போதாவது தாரிணியைச் சந்திக்கும்படி நேர்ந்தால்...." "அப்பா! தாரிணிக்கும் எனக்கும் ஏதாவது உறவு உண்டா?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள். "அதைத்தான் சொல்லப் போகிறேன்" என்றார் சீதாவின் தந்தை.