சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/மாமல்லர் ஊகம்

விக்கிமூலம் இலிருந்து
30. மாமல்லர் ஊகம்


பாறையிலே தெப்பம் மோதப்போன சமயத்தில், சிவகாமி 'ஆ' என்று சத்தமிட்டுக்கொண்டு படகில் எழுந்து நிற்க முயன்றாள். அடுத்த கணத்தில் அவள் தூக்கித் தண்ணீரில் எறியப்பட்டாள். கண் முன்னால் ஆயிரம் மின்னலின் ஒளிபோல் பிரகாசமாயிருந்தது; அப்புறம் ஒரே இருள்மயமாயிற்று. காதில் 'ஙொய்' என்ற சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. வெகு நேரமாகத் தோன்றிய உணர்ச்சியற்ற நிலைக்குப் பிற்பாடு ஏதோ உணர்ச்சி உண்டாவதுபோல் இருந்தது. கால் விரல்களிலே மணல் தட்டுப்படுவதுபோல் தோன்றியது. பானைத் தெப்பத்தில் ஏறி வந்தது, தெப்பம் பாறையிலே மோதப் போனது முதலிய விவரங்கள் ஒரு கணத்தில் ஞாபகத்துக்கு வந்தன. உடனே, தான் தண்ணீருக்குள்ளே மூழ்கியிருப்பதும், மூச்சு விடுவதற்குக் கஷ்டப்படுவதும் உணர்வில் தோன்றியது.

"ஆகா! மாமல்லரும் மூழ்கியிருப்பாரல்லவா? இரண்டு பேரும் சேர்ந்துதானே வெள்ளத்திலே மூழ்கினோம்? ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு செத்துப் போகக் கூடாதா?" என்ற எண்ணம் மின்னல் போல் உதித்தது. அதே கணத்தில் ஒரு கரம் அவளுடைய கரத்துடன் தட்டுப்பட்டது. மறுகணத்தில் அந்தக் கரம் அவளுடைய கையைப் பற்றியது. ஆகா! அது மாமல்லரின் உறுதியான கரம்தான்; சந்தேகமில்லை. நமது கடைசி மனோரதம் உண்மையிலேயே நிறைவேறப் போகிறதா? சண்டையும், சூழ்ச்சியும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த இந்த உலகை விட்டு நீங்கிச் சொர்க்கலோகத்தில் புகும்போது தானும் மாமல்லரும் கைகோத்துக் கொண்டு போகப் போகிறோமா? இதென்ன! கால் நன்றாய் ஊன்றுகிறதே! இதோ கூழாங்கற்கள் காலில் தட்டுப்படுகின்றனவே! இதோ திடீரென்று வெளிச்சம்.

தண்ணீர் வரவரக் கீழிறங்கி, கழுத்து மட்டுக்கும் வந்து மார்பு மட்டுக்கும் வந்து, பிறகு இடுப்பு மட்டுக்கும் வந்து விட்டது. ஆனால் பிரவாகத்தின் வேகம் மட்டும் குறைய வில்லையாதலால் சிவகாமியை உருட்டித் தள்ளப் பார்த்தது. அதோடு மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் கொட்டியபடியால் சிறிது நேரம் மிக்க வேதனையாயிருந்தது. இவ்வளவு அவஸ்தைகளுக்கிடையில் தன் கரத்தை மாமல்லர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பதையும் தன்னைப் போலவே ஆயனர், குண்டோதரன், அத்தை எல்லோரும் வெள்ளத்தின் வேகத்தினால் தடுமாறிக் கொண்டிருப்பதையும் சிவகாமி கண்டாள். சுகர் வட்டமிட்டுக் கொண்டு 'கீச்' 'கீச்' என்று கத்துவதையும், ரதி எப்படியோ வெள்ளத்திலிருந்து பிழைத்து, கரை மீதிருந்த பாறையில் தலையை வைத்துக் கொண்டு ஏறமுடியாமல் கால்களை உதைத்துக் கொள்வதையும் பார்த்தாள்.

பானைத் தெப்பம் மோதிய இடத்தில் வெள்ளத்தின் வேகத்தினால் பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அடுத்தாற்போல் சமீபத்திலேயே ஆழம் குறைந்து தண்ணீர் மேட்டுப்பாங்கான இடத்தில் பரவிப் பரந்து சென்றது. இக்காரணத்தினால் எல்லாரும் தப்பிப் பிழைப்பது சாத்தியமாயிற்று. எல்லாரும் தட்டுத்தடுமாறிக் கரை ஏறியானதும், "ஐயோ! போச்சே!" என்றான் குண்டோதரன்.

மற்றவர்கள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள். "என்ன போய்விட்டது?" என்று ஆயனர் கேட்டதும், "அவல் மூட்டை போச்சே" என்றான்.

சற்று நேரம் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். பிறகு புருஷர்களும் ஸ்திரீகளும் துணிகளைப் பிழிந்து உலர்த்திக் கட்டிக் கொள்வதற்காக வெவ்வேறு திசை நோக்கிச் சென்றார்கள். குண்டோதரனும் குமார சக்கரவர்த்தியும் ஒரு பக்கமாகப் போனபோது, "குண்டோதரா! அவல் மூட்டை போனதைப் பற்றி அழுகிறாயே? தெப்பம் போய்விட்டதே! அதற்கு என்ன செய்கிறது" என்று மாமல்லர் கேட்டார்.

"பிரபு! நல்ல வேளையாய் இந்தப் பாறைப் பிரதேசத்தில் தெப்பம் மோதி கவிழ்ந்ததே என்று எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. இல்லாவிடில் கடலில் போய்த்தானே சேரவேண்டும்? சமுத்திரத்து அலைகளிலே இந்தப் பானைத் தெப்பம் என்ன செய்யும்?" என்றான் குண்டோதரன்.

"இருந்தாலும் தெப்பத்தையும் காப்பாற்றி இருக்கலாம். நீ மட்டும் இன்னும் கொஞ்சம் லாகவமாய் கழி போட்டிருந்தால்.."

"அப்படி அவசியம் வேணுமென்றால், அதோ கிராமம் தெரிகிறதே - அங்கே பானைகள் சம்பாதித்துத் தெப்பம் கட்டிக் கொள்ளலாம், பிரபு! ஆனால், இப்போது தெப்பம் எதற்கு? இந்த வெள்ளம் அடங்குகிற வரையில் இங்கேயே இருப்பதுதான் நல்லது."

"அழகுதான் குண்டோதரா! என் சைனியத்தை எங்கேயோ விட்டுவிட்டு நான் இங்கே இருக்க வேண்டும் என்றா சொல்லுகிறாய்? இவர்களை ஒரு பத்திரமான இடத்தில் சேர்த்த உடனே நாம் இதே தெப்பத்தில் புறப்படலாமென்று எண்ணியிருந்தேன்.."

"புறப்பட்டு என்ன பிரயோஜனம், பிரபு! இந்தப் பெரு வெள்ளத்தில் எங்கே போகிறது? என்ன செய்கிறது? சைனியம் தாங்கள் விட்ட இடத்திலேயே இருக்குமா? தென்பெண்ணை கரையெல்லாம் இப்போது ஒரே வெள்ளக் காடாய் இருக்குமோ!"

"அதனால்தான் அவசியம் நான் போகவேண்டும்; பரஞ்சோதியும் மற்றவர்களும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?"

"என்ன நினைப்பார்கள் தாங்கள் பத்திரமாய் இருக்க வேண்டுமே என்றுதான் நினைப்பார்கள். அவர்களைப்பற்றித் தங்களுக்குச் சிறிதும் கவலை வேண்டியது இல்லை. ஏரி உடைத்துக் கொண்ட செய்தி அவர்களுக்கு நல்ல சமயத்தில் போய்ச் சேர்ந்திருக்கும்!"

துணிகள் உலர்ந்து கொண்டிருக்கையில் குண்டோதரன் தன்னுடைய வரலாற்றை மாமல்லருக்கு விவரமாகக் கூறினான். நாகநந்தி விஷயமாக ஆதியில் சக்கரவர்த்திக்குச் சந்தேகம் ஏற்பட்டு, அதன் பேரில் ஆயனர் வீட்டுக்குச் சத்ருக்னர் தன்னைக் காவல் போட்டதில் தொடங்கி, முதல் நாள் இரவு நாகநந்தியைத் தொடர்ந்து ஏரிக்கரைக்குப் போய் அவருடன் துவந்த யுத்தம் செய்தது வரையில் விவரித்தான். அப்போது ஒரு அதிகாரக்குரல் தன்னை எச்சரித்ததையும் அதன்படியே தான் திரும்பி வந்து வயோதிக புத்தபிக்ஷுவை வெள்ளத்தில் தள்ளிவிட்டுத் தெப்பத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்ததையும் விவரமாகக் கூறி முடித்தான்.

குண்டோதரன் கூறியதையெல்லாம் கேட்டு, மகேந்திர பல்லவரின் முன்யோசனையிலும், இராஜதந்திரத்திலும் மாமல்லருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. குண்டோதரனுடைய சாமர்த்தியத்தைப் பற்றியும் அவர் மிக வியந்து பாராட்டினார். "ஆனால் நீ அந்த வயோதிக பிக்ஷுவைத் தெப்பத்திலிருந்து தள்ளியது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை, குண்டோதரா! அந்தப் பாவத்தை ஏன் செய்தாய்?" என்று கேட்டார்.

"அது பாவமில்லை பிரபு! பெரிய புண்ணியம்! அவன் புத்த பிக்ஷுவுமில்லை; ஒன்றுமில்லை. காஞ்சி நகரத் தெற்குக் கோட்டை வாசலில் காவலனாக இருந்தவன். இந்த நாகநந்தியின் வலையில் விழுந்து தேசத் துரோகியாகி விட்டான். அவனை வெள்ளத்தில் தள்ளியது போதாது. அவன் தலையில் ஒரு கல்லையும் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்!" என்றான் குண்டோதரன்.

"அப்படியானால், எல்லாவற்றுக்கும் மூலகாரணமான நாகநந்தியை ஏன் உயிரோடு விட்டாய்? அவரையும் கொன்று விடுவதற்கென்ன?" என்று மாமல்லர் கேட்டார்.

"பிரபு! எப்படியும் அந்த நாகப்பாம்பைக் கொன்று தீர்த்துவிடுவது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் 'சண்டையை நிறுத்து!' என்று இருளில் கேட்ட அதிகாரக் குரலின் கட்டளையை மீற முடியவில்லை. ஆகையினால்தான் உடைப்பிலே தள்ளிவிட்டு வந்தேன். யார் கண்டார்கள்? உடைப்பு வெள்ளத்தில் அந்த வேஷதாரி பிக்ஷு, மூழ்கி ஒழிந்து போயிருக்கலாமல்லவா?"

"கூடாது! குண்டோதரா! கூடாது! அப்பேர்ப்பட்ட பாதகனுக்கு அவ்வளவு சுலபமான மரணம் கூடாது. அந்தக் கள்ள பிக்ஷுவால் ஆயனரும் சிவகாமியும் எப்பேர்ப்பட்ட அபாயத்துக்கு உள்ளாகி விட்டார்கள்!...

"பிரபு! மன்னிக்க வேண்டும் நாகநந்தியைப்பற்றி இவர்களிடம் ஒன்றும் பிரஸ்தாபிக்காமல் இருப்பதே நலம். இவர்களுக்கு விஷயம் ஒன்றும் விளங்காது; வீணில் மனத்துன்பம் அடைவார்கள்."

மாமல்லர் அதை ஒப்புக்கொண்டார் பிறகு, "ஏரிக் கரையில் உனக்குக் கட்டளையிட்ட குரல் யாருடையது என்று தெரியவில்லையா?" என்று கேட்டார்.

"ஊகித்தேன் பிரபு! ஆனால் தங்களிடம் சொல்லத் தைரியம் இல்லை மன்னிக்க வேண்டும்!" என்றான் குண்டோதரன். எச்சரித்தவர் மகேந்திர சக்கரவர்த்தியாயிருக்குமோ என்ற எண்ணம் ஏற்கனவே அவர் மனத்தில் தோன்றியிருந்தது. குண்டோதரனும் அப்படியே ஊகிக்கிறான் என்று இப்போது தெரிந்தது.

மாமல்லரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, வெட்கம், வேதனை ஆகிய உணர்ச்சிகள் ஏக காலத்தில் உதயமாயின. குண்டோதரனை எச்சரித்தது மகேந்திர சக்கரவர்த்தியாயிருக்கும் பட்சத்தில் சைனியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை எல்லோரும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஆனால், தம்மிடம் நம்பிக்கையில்லாமல்தானே அவர் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் இருக்கிறதல்லவா தம்முடைய காரியமும்? நதிக்கரையிலே சைனியத்தை நிறுத்திவிட்டுத் தனியாக வந்து வெள்ளத்திலேயும் சிக்கிக் கொண்டோமல்லவா? சக்கரவர்த்தியை மறுபடியும் சந்திக்கும்போது, அவர் முகத்தை எவ்விதம் ஏறிட்டுப் பார்ப்பது?

இதற்கு மாறாக இன்னொருவித சிந்தனையும் உண்டாயிற்று. எது எப்படி வேணுமானாலும் போகட்டும்! என்ன அபகீர்த்தி, அவமானம் ஏற்பட்டாலும் ஏற்படட்டும். இந்த ஒரு நாள் ஆனந்த வாழ்வுக்காக எதைத்தான் சகித்துக் கொள்ளக்கூடாது? இனி வருங்காலமெல்லாம் இந்த ஒரு தினத்தின் இன்பமயமான வாழ்க்கையை நினைத்து நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் அல்லவா?

"பிரபு! நடந்தது நடந்துவிட்டது இனிமேல் நடப்பதைப் பற்றித்தானே யோசிக்க வேண்டும்?" என்று குண்டோதரன் கூறி மாமல்லரின் சிந்தனையைக் கலைத்தான்.

"வேறு என்ன யோசனை செய்ய இருக்கிறது? வெள்ளத்திலே வந்து மாட்டிக்கொண்டு விட்டோம், இங்கிருந்து போகும் வழியைத் தேட வேண்டும்..."

"பிரபு! இன்றிரவு தங்குவதைப் பற்றி முதலில் யோசிப்போம். திறந்த வெளியில் தங்க முடியாதல்லவா, இரவு மழை பிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது?"

"எங்கே தங்கலாம் என்று நினைக்கிறாய்?"

"அதோ சற்று தூரத்தில் ஒரு கிராமம் தெரிகிறது அங்கே போய் நான் முதலில் விசாரித்துக்கொண்டு வருகிறேன்."

"அப்படியே செய்" என்றார் மாமல்லர். அப்போது "மாமல்லா! மாமல்லா!" என்ற சுகரிஷியின் குரல் கேட்டது. அந்தக் குரல் வந்த வழியே சென்ற மாமல்லர், பாறையருகில் மகிழ மரத்தடியில் சிவகாமி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டார், அவள் அருகில் தாமும் உட்கார்ந்தார்.