உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/வரவேற்பு

விக்கிமூலம் இலிருந்து
33. வரவேற்பு

வாத்திய கோஷத்தையும் ஆரவாரத்தையும் கேட்டு ஆயனரும் அத்தையும் அங்கே வந்து சேர்ந்தார்கள். ஜனக்கூட்டம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் கூட்டத்திலிருந்து ஒரு தனி உருவம் வெளிப்பட்டு முன்னதாக விரைந்து வந்தது. அந்த உருவத்தைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் ஏற்பட நியாயமில்லை; குண்டோதரனுடைய உருவந்தான் அது!

குமார சக்கரவர்த்திக்குப் பலமான கோபம் உண்டாயிற்று. ஆஹா! இந்த மூடன் என்ன காரியம் செய்தான். 'குமார சக்கரவர்த்தி வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டார்; இங்கே வந்து ஒதுங்கியிருக்கிறார்!' என்று ஊரிலே சொல்லியிருக்கிறான். இவ்விடம் தங்கும் சொற்ப நேரத்தைச் சிவகாமியிடம் பேசிக் கொண்டு கழிக்கலாம் என்று நினைத்தால், அதற்கு இடமில்லாமல் செய்து விட்டானே! சிவகாமிக்குச் சொல்ல வேண்டியது, கேட்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதே! சைனியமின்றித் தாம் தனித்து வந்திருப்பது பற்றியும், ஆயனரும் சிவகாமியும் தம்முடன் இருப்பது பற்றியும் அவர்கள் என்ன நினைப்பார்கள்?... ஆ! இந்த மூடன் குண்டோதரன் எவ்வளவு சங்கடமான நிலையில் தம்மைக் கொண்டு வந்து வைத்து விட்டான்!

ஆயினும், அவனிடம் தற்போது கோபம் கொள்வதில் பயனில்லை. நடந்த தவறு நடந்துவிட்டது; எப்படியோ இந்தச் சங்கடமான நிலைமையைச் சமாளித்தாக வேண்டும்.... இப்படிச் சிந்தனை செய்துகொண்டு சற்றுப் பின்னாலேயே மாமல்லர் ஒதுங்கி நின்றபோது, குண்டோதரன் தம்மிடம் வராமல் ஆயனரிடம் நின்று ஏதோ சொல்லுவதைப் பார்த்தார். பிறகு சிவகாமியின் காதோடு ஆயனர் ஏதோ சொன்னார். இருவரும் மாமல்லர் இருந்த திசையை நோக்கிப் புன்னகை புரிந்தார்கள்.

ஜனக்கூட்டம் இதற்குள் அருகில் வந்துவிட்டது. கூட்டத் தலைவர்களாகத் தோன்றிய இருவர், பூரண கும்பத்துடனும் புஷ்பம் தாம்பூலம் பழம் வைத்திருந்த தட்டுக்களுடனும் எல்லோருக்கும் முன்னால் வந்தார்கள். குண்டோதரன் அவர்களுக்கு ஆயனச் சிற்பியாரைச் சுட்டிக் காட்டினான். கிராமத் தலைவர்களில் ஒருவர் கூறினார்; உலகத்தில் எப்பேர்ப்பட்ட தீமையிலும் நன்மை ஒன்று உண்டு என்பார்கள். அதுபோல், திருப்பாற்கடல் ஏரி உடைப்பு எடுத்ததனால், எங்கள் கிராமம் பாக்கியம் செய்ததாயிற்று. சிற்ப சக்கரவர்த்தி ஆயனரையும், பரத சாஸ்திர ராணி சிவகாமி தேவியையும் வரவேற்கும் பேறு எங்களுக்கு வாய்த்தது. வரவேண்டும், ஐயா! வருக, தேவி! உங்களுக்கும் உங்கள் சீடர்களுக்கும் எங்களால் முடிந்த சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறோம். எத்தனை நாள் முடியுமோ அத்தனை நாள் எங்கள் விருந்தினர்களாய்த் தங்கி இருக்க வேண்டுகிறோம்."

இவ்விதம் கிராமத் தலைவர் கூறி முடித்ததும், ஆயனர், 'மகா ஜனங்களே! உங்களுடைய அன்புக்கு நானும் என் குமாரியும் என் சீடர்களும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்! இந்த வெள்ளம் வடிகிற வரையில் உங்களுடைய விருந்தாளியாக நாங்கள் இருந்துதான் தீரவேண்டும்!" என்றார். பிறகு, கிராமவாசிகளும் ஆயனர் முதலியோரும் கிராமம் இருந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

எல்லாருக்கும் பின்னால் தங்கியிருந்த மாமல்லரோ ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்தார். அவர் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாகக் காரியங்கள் நடந்தன. சிவகாமி அவ்வப்போது கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகை செய்ததைத் தவிர, மற்றபடி அவர் ஒருவர் அங்கு இருப்பதையே கவனிப்பாரைக் காணோம். அவருடைய வியப்பிலே மகிழ்ச்சியும் கலந்திருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லையல்லவா? 'குண்டோதரனை மூடன் என்று கருதியது எவ்வளவு தவறு? அவனுடைய புத்திக் கூர்மையே கூர்மை!" என்று அவர் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே, "பிரபு! ஏன் நிற்கிறீர்கள்? போகலாம் வாருங்கள்!" என்று குண்டோதரன் அவர் பின்னாலிருந்து காதோடு சொன்னான்.

"என்னை அவர்கள் அழைக்கவில்லையே? அழையாத இடத்துக்கு நான் எப்படிப் போவது?" என்றார் மாமல்லர் நரசிம்மர். "ஏன் அழைக்கவில்லை? ஆயனரிடம், 'உங்களுடைய சீடர்களுக்கும் வேண்டிய சௌகரியம் செய்து கொடுக்கிறோம்!' என்று சொன்னார்களே! காதில் விழவில்லையா? நீங்களும் நானும் ஆயனரின் சீடப் பிள்ளைகள்!" என்றான் குண்டோதரன். "சத்ருக்னரின் ஆட்கள் எல்லாம் உன்னைப் போலவே புத்திசாலிகளாய் இருப்பார்களா, குண்டோதரா? அப்படியானால் ஆயிரம் புலிகேசி படையெடுத்து வந்தாலும் நாம் அத்தனை பேரையும் யுத்தத்தில் ஜயித்து விடலாம்!" என்றார் மாமல்லர். ஆயனரின் 'சீடர்'கள் இருவரும் ஜனக் கூட்டத்துக்குச் சற்றுப் பின்னால் தங்கிச் சென்றார்கள். மாமல்லர் அப்படி ரொம்பவும் பின் தங்கிவிடவில்லை என்பதையும் சிவகாமியின் கடைக்கண் பார்வையைத் தெரிந்து கொள்ளக்கூடிய தூரத்திலேயே போனார் என்பதையும் உண்மையை முன்னிட்டு நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

கிராமத்துக்குக் கிட்டத்தட்டப் போனபோது ஜனக் கூட்டம் மேலும் அதிகமாயிற்று. ஊரே திரண்டு வந்து விட்டது போல் தோன்றியது. ஊருக்குள்ளே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விதவிதமான வர்ணக் கோலங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். ஊர்வலத்தை ஆங்காங்கு நிறுத்திக் கிராமத்துப் பெண்மணிகள், சிவகாமிக்கு ஆரத்தி எடுத்தார்கள். கடைசியில், கிராமத்தின் கீழ்ப் புறத்திலிருந்த சிவாலயத்துக்கு அனைவரும் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆலயம் சின்னதுதான்; ஆனால் அழகாயும் சுத்தமாயும் இருந்தது. செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட வெளி மதிலைத் தாண்டி உள்ளே போனதும், விசாலமான பிரகாரம் ஒரு புல் பூண்டு இல்லாமல் வெகு சுத்தமாயிருந்தது. பலிபீடம், துவஜஸ்தம்பம், நந்தி மேடை ஆகியவற்றைத் தாண்டிச் சென்றதும், அடியார்கள் நின்று தரிசனம் செய்வதற்குரிய அர்த்த மண்டபம் இருந்தது. ஓட்டினால் கூரை வேயப்பட்ட அர்த்த மண்டபத்துக்கு அப்பால் கர்ப்பக்கிருகம். இதன் மேலே, அப்போது புதிதாகத் தமிழகத்தில் வழக்கத்துக்கு வந்து கொண்டிருந்த தூங்கானை மாடம் அழகாக விளங்கிற்று. கோவிலுக்குள் நுழையும்போதே சாம்பிராணி, சந்தனம் இவற்றின் சுகந்தமும், பன்னீர், பாரிஜாதம் செண்பகம், தாமரை முதலிய திவ்ய மலர்களின் நறுமணமும், நெய் விளக்கின் புகை, உடைத்த தேங்காய், உரித்த வாழைப்பழம் நாரத்தம்பழச் சாறு, பிழிந்த கரும்பின் ரசம் ஆகியவற்றின் சுவாசனையும் கலந்து வந்து, ஏதோ ஒரு தூய்மையான தனி உலகத்துக்குள்ளே வந்திருப்பது போன்ற உணர்ச்சியை உண்டாக்கின.

ஆயனரும் சிவகாமியும் ஆயனரின் சீடர்களும் அர்த்த மண்டபத்துக்குள் வந்ததும் சுவாமிக்குத் தீபாராதனை நடந்தது. பின்னர் அர்ச்சகர் அபிஷேக தீர்த்தமும் விபூதிப் பிரசாதமும் கொடுத்தார். அதே மாதிரி அம்பிகையின் சந்நிதியிலும் தீபாராதனை நடந்து குங்கும புஷ்பப் பிரசாதங்கள் அளிக்கப்பட்டன. எல்லாம் ஆனபிறகு, அவர்களை வரவேற்ற கிராமத் தலைவர் "ஆயனரே! தங்களுடைய குமாரியின் நடனவித்தைத் திறமையைக் குறித்து நாங்கள் ரொம்பவும் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் பாக்கிய வசத்தினால் எதிர்பாராத விதமாக நீங்கள் இந்தக் கிராமத்துக்கு வரும்படி நேர்ந்தது. உங்களுக்கு இன்றைக்குத் தொந்திரவு கொடுக்க மனம் இல்லை. நாளைய தினம் தங்கள் குமாரி இந்தச் சந்நிதியில் நடனம் ஆடி எங்களை மகிழ்விக்க வேண்டும்!" என்று விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு மறுமொழி என்ன சொல்வதென்று தெரியாதவராய் ஆயனர் சிவகாமியை நோக்கினார். அவளுடைய முகத்தைப் பார்த்ததும் ஆயனருக்கு மனக் கலக்கம் அதிகமாயிற்று. அவர்கள் நின்றுகொண்டிருந்த அர்த்த மண்டபத்தில் மாமல்லர் எங்கே நிற்கிறார் என்பதைச் சிவகாமி ஏற்கெனவே தெரிந்து கொண்டிருந்தாள். இது வரையில் வெகு ஜாக்கிரதையாக அந்தப் பக்கமே பார்க்காமலிருந்த அவளுடைய கண்கள் பளிச்சென்று மாமல்லருடைய முகத்தை ஏறிட்டு நோக்கின. சிவகாமியின் கண்களில் தோன்றிய கேள்விக்கு, மாமல்லரின் முகமலர்ச்சியும் அவருடைய கண்களில் தோன்றிய குதூகலமும் மறுமொழி தந்தன. மறுகணம் சிவகாமி ஆயனரை நோக்கி, "ஆகட்டும், அப்பா!" என்று மெல்லிய குரலில் கூறினாள். "ஆயனரே! தங்கள் அருமைக் குமாரியின் மறுமொழி எங்கள் காதிலும் விழுந்தது மிகவும் சந்தோஷம்!" என்றார் கிராமாதிகாரி. இதற்குள்ளே, மறுநாள் நடனம் ஆடச் சிவகாமி சம்மதித்து விட்டாள் என்ற செய்தி பரவி, அர்த்த மண்டபத்திலும் வெளிப்பிராகாரத்திலும் நின்று கொண்டிருந்த ஜனங்களுக்குள் கலகலப்பு ஏற்பட்டு அது ஆரவாரமாக மாறியது.

இந்தக் கலகலப்புக்கும் ஆரவாரத்துக்கும் இடையே, ஆயனர் கிராமத் தலைவரைப் பார்த்து, "ஐயா! சிவகாமியின் நடனப்பயிற்சி நின்று ஏழெட்டு மாதமாகிறது. ஆனாலும் பாதகமில்லை, நீங்கள் காட்டும் அன்பானது சிவகாமியின் மனத்தை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது. ஆகையினால், நாளைக்கு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கச் சம்மதிக்கிறாள். ஆனால் சிவகாமியின் நடனக் கலையைப் பற்றி நீங்கள் இவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாயிருக்கிறது. உங்களுக்கு எவ்விதம் தெரிந்ததோ? ஒருவேளை என் சிஷ்யன் குண்டோதரனுடைய வேலையோ இது?" என்று கூறிக் குண்டோதரனை நோக்கினார்.

அப்போது கிராமத் தலைவர், "இல்லை, ஐயா இல்லை! தங்கள் குமாரியைப் பற்றி ஏற்கனவே எங்களுக்கு நாவுக்கரசர் பெருமான் தெரிவித்திருந்தார்" என்றார். "ஆஹா! நாவுக்கரசர் இங்கே வந்திருந்தாரா? உங்களுடைய பாக்கியந்தான் என்ன!" என்றார் ஆயனர். "நாங்கள் பாக்கியச்சாலிதான் ஆறு மாதத்துக்கு முன்னால் நாவுக்கரசர் பெருமான் இந்தப் புண்ணியம் செய்த கிராமத்துக்கு வந்தார். அவருடைய திருக்கரத்தில் உழவாரப் படை பிடித்து இந்த ஆலயத்தின் பிராகாரத்தைச் சுத்தம் செய்தார். நாங்களும் அந்தத் திருப்பணியில் ஈடுபட்டோம். அன்றிரவு இந்தச் சந்நிதியில் நாவுக்கரசர் பெருமானின் சீடர்கள் அமுதொழுகும் தமிழ்ப் பதிகங்களைப் பாடினார்கள். அவற்றில், முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள். மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள். என்னும் பதிகத்தைப் பாடியபோது நாவுக்கரசர் பெருமானின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வந்தது..."

இவ்விதம் கிராமத்தலைவர் கூறி வருகையில், ஆயனர், சிவகாமி மாமல்லர் ஆகிய மூன்று பேருக்கும் ஏககாலத்தில் ரோமாஞ்சனம் உண்டாயிற்று; அத்தலைவர் மேலும் கூறினார். "பதிகம் முடிந்த பிறகு பெருமான் எங்களுக்குச் சிவகாமி தேவியின் நடனத்தைப் பற்றிக் கூறினார். தாங்கள் தங்கள் குமாரியுடன் காஞ்சியில் அப்பெருமானுடைய மடத்துக்கு வந்திருந்ததையும், அப்போது சிவகாமி இந்தப் பதிகத்துக்கு அபிநயம் பிடித்து மூர்ச்சித்ததையும் பற்றித் தெரிவித்தார். நேரில் இவ்வளவு விரைவில் உங்களையே வரவேற்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்குமென்று அப்போது நாங்கள் கனவிலும் கருதவில்லை." "வாகீசப் பெருந்தகைக்கு எங்களுடைய ஞாபகம் இருந்தது; நாங்கள் செய்த புண்ணியம்!" என்றார் ஆயனர். "நாவுக்கரசர் பெருமான் வந்து போன பிறகு இந்த ஊரில் அவருடைய திருப்பெயரால் ஒரு மடாலயம் கட்டியிருக்கிறோம். அந்த மடாலயத்தில் முதன் முதலாகத் தாங்களும் தங்கள் புதல்வியுந்தான் தங்கப் போகிறீர்கள். இதுவும் நாங்கள் செய்த புண்ணியந்தான்!" என்றார் கிராமத்தலைவர்.