உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
துன்புறும் யோபுவிடம் அவர்தம் "நண்பர்" உரையாடல். விவிலிய நூல் ஓவியம். காலம்: 12ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஏத்தோசு மலை, கிரேக்க நாடு.

யோபு (The Book of Job)

[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15

[தொகு]

யோபின் சொற்களே அவர்களுக்குத் தீர்ப்பிடல்

[தொகு]

(15:1 - 21:34)


1 அதற்குத் தேமானியனான எலிப்பாசு சொன்னான்:


2 வெற்று அறிவினால் ஞானி விடையளிக்கக்கூடுமோ?
வறண்ட கீழ்க்காற்றினால் வயிற்றை அவன் நிரப்பவோ?


3 பயனிலாச் சொற்களாலோ,
பொருளிலாப் பொழிவினாலோ
அவன் வழக்காடத் தகுமோ?


4 ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;
இறைச்சிந்தனை இல்லாது போனீர்.


5 உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;
வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.


6 கண்டனம் செய்தது உம் வாயே; நானல்ல;
உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.


7 மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?
மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?


8 கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?
ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?


9 எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?
எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?


10 நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,
நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர் எங்களிடை உள்ளனர்.


11 கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்
உமக்கு அற்பமாயினவோ?


12 மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?
உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?


13 அதனால், இறைவனுக்கு எதிராய் உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;
வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.


14 மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?
நேர்மையாளராய் இருக்கப் பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?


15 வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;
வானங்களும் அவர்தம் கண்முன் தூயவையல்ல;


16 தீமையை தண்ணீர் போல் குடிக்கும்
அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்
எத்துணை இழிந்தோர் ஆவர்? [1]


17 கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;
நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;


18 ஞானிகள் உரைத்தவை அவை!
அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!


19 அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;
அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.


20 துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர் தம் நாளெல்லாம்;
துன்பத்தின் ஆண்டுகள் கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.


21 திகிலளிக்கும் ஒலி அவர்களின் செவிகளில் கேட்கும்;
நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.


22 அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்;
வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.


23 எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;
இருள்சூழ்நாள் அண்மையில் உள்ளதென்று அறிவர்.


24 இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்;
போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும்.


25 ஏனெனில், இறைவனுக்கு எதிராக அவர்கள் கையை ஓங்கினர்;
எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.


26 வணங்காக் கழுத்தோடும் வலுவான பெரிய கேடயத்தேடும்,
அவரை எதிர்த்து வந்தனர்.


27 ஏனெனில், அவர்களின் முகத்தைக் கொழுப்பு மூடியுள்ளது;
அவர்களின் தொந்தி பருத்துள்ளது.


28 பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,
இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர்.


29 அவர்கள் செல்வர் ஆகார்; அவர்களின் சொத்தும் நில்லாது;
அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.


30 இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;
அவர்களது தளிரை அனல் வாட்டும்.
அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும். [2]


31 வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;
ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.


32 அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே அது நடக்கும்;
அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;


33 பிஞ்சுகளை உதிர்க்கும் திராட்சைச் செடிபோன்றும்
பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும் அவர்கள் இருப்பர்.


34 ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்;
கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும்.


35 இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்;
வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.


குறிப்புகள்

[1] 15:14-16 = யோபு 25:4-6.
[2] 15:30 'அவர்தம் வாயின் ஊதுதலால் வாரிப்போகப்படுவான்' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 16

[தொகு]

கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும்

[தொகு]


1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி:


2 இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு;
'புண்படுத்தும் தேற்றுவோர்' நீவிர் எல்லாம்.


3 உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?
வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?


4 என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;
என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,
உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,
உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.


5 ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்;
என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே!


6 நான் பேசினாலும் என் வலி குறையாது;
அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.


7 உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;
என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.


8 நீர் என்னை இளைக்கச் செய்தீர்;
அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;
என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.


9 அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;
என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.


10 மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;
ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;
எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.


11 இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்;
கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;


12 நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்;
பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;
என்னையே தம் இலக்காக ஆக்கினார்.


13 அவர்தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்;
என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;
ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார்;


4 முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்;
போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.


15 சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்;
புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.


16 அழுதழுது என் முகம் சிவந்தது;
என் கண்களும் இருண்டு போயின.


17 இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை;
மாசு என் மன்றாட்டில் இல்லை.


18 மண்ணே! என் குருதியை மறைக்காதே;
என் கூக்குரலைப் புதைக்காதே.


19 இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது;
எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். [*]


20 என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே!
கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.


21 ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,
அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்.


22 இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;
பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.


குறிப்பு

[*]16:19 = யோபு 19:25.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை